மீண்டும் பால விபத்து: நாறுகிறது குஜராத் மாடல்!

பழுதடைந்துள்ள பாலத்தை மூடாமல் தொடர்ந்து மக்கள் பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பணையம் வைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு அரசே வழியமைத்துக் கொடுத்திருக்கிறது.

0

ஜூலை 9 ஆம் தேதி அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்துள்ளது. இக்கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 4 பேரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே உள்ள கம்பீரா பாலம் வதோதரா மாவட்டத்தையும், குஜராத்தையும் ஒன்றாக இணைக்கிறது. இதனால் வணிகம் மற்றும் வழிபாட்டிற்கான முக்கிய வழித்தடமாக மக்கள் பாலத்தினை பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஜூலை 9 ஆம் தேதி அன்று காலை 7.30 மணிக்கு பாலத்தின் ஒரு பகுதி பெரும் சத்தத்துடன் இடிந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இதில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், எஸ்.யூ.வி கார், பிக் அப் வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றிற்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் உடனடியாக அருகிலிருந்த கயிறுகள் மூலம் வாகனங்களை கரைக்கு இழுத்துள்ளனர். மீனவர்கள் படகு மூலம் ஆற்றில் விழுந்தவர்களை படுகாயங்களுடன் மீட்டுள்ளனர். பின்னர் வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மக்களுடன் சேர்ந்து மீட்டுள்ளனர்.

இக்கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரை மீட்பதற்காக பேரிடர் மீட்புப் படையினர் தேடுவதற்கான தொலைவை நான்கு கி.மீட்டர் வரை விரிவுபடுத்தியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முக்கியமாக 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பாலம் என்பதால் அடிக்கடி பழுதடைந்து வந்துள்ளது. அதனை அவ்வப்போது பழுது பார்த்து நீண்ட காலமாக பழுதடைந்த பாலத்தையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். புதிய பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜ.க அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.


படிக்க: மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!


மேலும் மாநில அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறுகையில், “1985-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் தொடர்ச்சியாக அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு வந்தது” என்று தெரிவித்திருப்பது முக்கியமானதாகும்.

அதாவது, பழுதடைந்துள்ள பாலத்தை மூடாமல் தொடர்ந்து மக்கள் பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பணையம் வைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு அரசே வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. எனவே இதனை விபத்து என்று சொல்வதை விட அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று சொல்வதே சரியாக இருக்கும்

கம்பீரா பாலம் அருகே 212 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் பூபேந்திர பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது பாலத்திற்கான வடிவமைப்பு, டெண்டர் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய பாலம் சிதிலமடைந்துள்ளது அரசுக்கு முன்னரே தெரிந்திருந்ததால்தான் புதிய பாலம் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பது புலனாகிறது.

முக்கியமாக 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர். அதனைப் போன்றுதான் தற்போது கம்பீரா பாலம் இடிந்து விழுந்து 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பால விபத்துக்கள் குஜராத் பா.ஜ.க அரசின் ஊழலையும், மக்கள் மீது கொண்டுள்ள அலட்சியத்தையும் அம்பலப்படுத்துகின்றன. இவை குஜராத் பா.ஜ.க அரசாங்கமும் குஜராத் மாடலும் அழுகி நாறிக் மொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாகும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க