ஜூலை 9 ஆம் தேதி அன்று பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலங்களை மக்களை மிரட்டி கையகப்படுத்தியுள்ளது தி.மு.க அரசு. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய மோடி அரசும், தமிழ்நாடு தி.மு.க அரசும் முயன்று வருகின்றன. இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அன்று முதல் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வகையான போராட்டங்களை 1,000 நாட்களுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானியல் ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முன்பே முதல்கட்ட ஒப்புதலை வழங்கியிருந்தன. அதனைத் தொடர்ந்து, ஜூன் 25 ஆம் தேதி அன்று தி.மு.க அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலையை மறுநிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டது.
கையகப்படுத்தப்படுவதில் 5,746 ஏக்கர் அரசு நிலம்; மீதமுள்ள 3,331.25 ஏக்கர் பரப்பளவிலான தனிநபர் நிலங்களுக்கு ஏக்கருக்கு ₹35 லட்சம் முதல் ₹2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலத்தின் அளவை பொறுத்து விலை மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது அதிக பணம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தால், மக்கள் நிலத்தைக் கொடுத்து விடுவார்கள் என்று சதித்தனமாக திட்டமிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் மக்கள் தங்களின் நிலத்தின் ஒரு பிடி மண்ணைக் கூட விற்கத் தயாராக இல்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.
படிக்க: பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு
இதனை நன்கு அறிந்து கொண்ட தி.மு.க அரசு நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக ஜூலை 9 ஆம் தேதி அன்று பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர் மற்றும் அக்கமாபுரம் கிராமங்களைச் சேர்ந்த 19 பேரை மிரட்டி காஞ்சிபுரம் அழைத்து வந்துள்ளனர். அங்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 19 பேரும் 9.22 கோடி மதிப்புள்ள 17.52 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். அதற்கான இழப்பீடு ஒரு நாளுக்குள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் “மாநில அரசின் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, கடந்த மூன்று வருடங்களாகப் போராடி வருகிறோம். இதுதொடர்பாக, விவசாய மக்களிடம் எந்த கலந்தாய்வும் நடத்தாமல், நிலங்களைக் கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டிற்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகிறது.
ஆனால், பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒரு பிடி நிலத்தையும் கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், நேற்று (ஜூலை 9) நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களைக் கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
விவசாயிகளுக்கு எதிராக ஜனநாயக படுகொலை செய்யும் இந்த அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக, அனைத்து அரசியல் கட்சிகளின் துணையோடு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். விவசாய பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சட்ட போராட்டத்திற்கான முன்னெடுப்பு பணி சில நாட்களில் துவக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் மூலம் பொருளாதாரம் மேம்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று பொய்க் கதைகளை அள்ளிவிட்டு தன்னுடைய கார்ப்பரேட் திட்டத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க அரசு. மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தை துளியும் மதிக்காமல் மக்களை மிரட்டி நிலத்தை அபகரித்துள்ளது.
எனவே, தி.மு.க அரசின் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிவரும் மக்களுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும். வீரியமான மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே தி.மு.க அரசைப் பின்வாங்க வைக்க முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram