தமிழ்நாட்டில் புதிதாக எட்டு இடங்களில் சிறிய துறைமுகங்கள் அமைப்பதற்கு தி.மு.க அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக தூத்துக்குடி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தொழில் துறையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக எட்டு சிறிய வர்த்தக துறைமுகங்களை உருவாக்க தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் முகையூர் மற்றும் பணையூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலூர் மாவட்டம் சிலம்பிமங்களம், மயிலாடுதுறை மாவட்டம் வான்கிரி, நாகை மாவட்டம் விழுந்தமாவடி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, குமரி மாவட்ட கடற்கரைப் பகுதி போன்ற வளமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அரசின் அறிவிப்பை ஏற்று முன்வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இத்துறைமுகங்கள் 30 ஆண்டு முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட குத்தகைக்கு விடப்படும் என்றும் அதற்கு ஏற்றார் போல் ”நெகிழ்வான துறைமுக கொள்கை” உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் துறைமுகங்கள் கடலோர சுற்றுலா, கப்பல் கட்டும் தொழில்கள் மற்றும் கடல் உணவு பதப்படுத்துதலை ஊக்குவித்தலுக்குப் பயன்படும் என்றும் தமிழ்நாட்டுக் கடற்கரையில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
படிக்க: விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை
அதாவது, தமிழ்நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லுங்கள் என கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தி.மு.க அரசு அழைக்கிறது. தி.மு.க அரசின் இந்த கார்ப்பரேட் நலத் திட்டத்திற்கு தூத்துக்குடி மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, தூத்துக்குடியில் கடற்கரை பகுதிகளான பழையகால் பகுதியில் சிர்கோனியம் தொழிற்சாலை, கல்லாமொழி பகுதியில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் அனல்மின் நிலையம், குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் என மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு நாசகரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் இத்துறைமுகத் திட்டம் அமைந்துள்ளது என்று கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக மணப்பாடு மீன் ஏலக்கூடத்தில் வைத்து ஊர்நலக்கமிட்டி தலைவர் கிளைட்டன் தலைமையில் மீனவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில், மீனவர்களிடம் எவ்வித கருத்துகளும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ள தி.மு.க அரசிற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், துறைமுகம் அமைக்கும் பணியைக் கைவிட நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவது என்றும், இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணப்பாடு ஊர்நலக்கமிட்டி நிர்வாகிகள் கூறும்போது, ”ஏற்கெனவே மணப்பாட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில்தான் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலைய பணிக்கென கடலுக்குள் 8.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மணப்பாட்டில் துறைமுகம் அமைத்தால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடிய சூழல் உருவாகும். எனவே, துறைமுகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களை நடத்தி இந்த திட்டத்தைத் தடுப்போம்” என்று அறிவித்துள்ளனர்.
படிக்க: சென்னை மின்சாரப் பேருந்து: நிறுவப்படும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
தூத்துக்குடி மட்டுமின்றி சிறிய வர்த்தகத் துறைமுகங்கள் அமைக்கப்படும் அனைத்து இடங்களிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது.
ஏற்கெனவே, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அதானியின் ஆதிக்கத்தின் கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாசிச மோடியின் ஆட்சியில் துறைமுகங்கள், மின்சாரத் துறை ஆகியவற்றில் அதானியின் ஆதிக்கம் வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்நிலையில், சிறிய வர்த்தக துறைமுகங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளைத் தாரைவார்ப்பது அதானியின் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கே சாதகமாக அமையும்.
மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுகிறோம் என்ற பெயரில், நகராட்சி விரிவாக்கம், போக்குவரத்துத் துறை மற்றும் கல்வித்துறையை தீவிரமாக கார்ப்பரேட்மயமாக்குவது, டிஜிட்டல்மயமாக்கம் என்கிற பெயரில் பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது தி.மு.க அரசு. தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த எட்டு புதிய துறைமுகங்களை அமைப்பதற்கான திட்டமும் ”ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார”த்தின் அங்கமே.
எனவே, தி.மு.க அரசின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது தமிழ்நாட்டை கூறுபோட்டு கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்வதே என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியுள்ளது. இத்துறைமுகத் திட்டத்திற்கு எதிராக தூத்துக்குடி மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதைப்போல இத்திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மற்ற பகுதி மீனவர்களும் ஒன்றிணைந்து உறுதியாகப் போராடுவதன் மூலம்தான் இத்திட்டத்திலிருந்து தி.மு.க அரசைப் பின்வாங்க வைக்க முடியும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram