கிள்ளுக்கீரைகளா துணைமருத்துவ மாணவர்கள்?

மருத்துவக் கனவை இழந்த மாணவர்களிடத்தில் இது மாற்றாக திணிக்கப்பட்டதன் விளைவாய் இன்று துணை மருத்துவத்துறை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக்கப்பட்டு வருகிறது.

ந்திய அளவில் அதிக மருத்துவர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலிலும் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாநிலங்களோடு ஒப்பிட்டு வேண்டுமானால் இப்பெருமையைப் பேசிக் கொள்ளலாமே தவிர, தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மக்களின் மருத்துவத் தேவைகளை ஈடேற்றும் வகையில் தமிழ்நாட்டின் பொது மருத்துவக் கட்டமைப்பு இல்லை என்பதே நிதர்சனமாகும்.

மாநில அளவில் பார்த்தோமேயானால் தமிழ்நாட்டில் சுமார் 36 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. இதிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் மருத்துவம் பயின்று வெளியேறுகின்றனர். இது எளிதில் நிகழ்ந்துவிடுவது இல்லை. பல்வேறு இன்னல்களைக் கடந்துதான் இப்படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். அவ்வகையில் துணை மருத்துவம் (பாராமெடிக்கல்) படிக்கும் மாணவர்களின் பாடோ திண்டாட்டம்தான்.

உடலியக்க மருத்துவம் (Physiotherapy), ஆய்வக தொழில்நுட்பம் (Lab Technology), கதிரியக்கவியல் (Radiology) போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புகள்தான் துணை மருத்துவப் படிப்புகளாகும். மருத்துவராகும் கனவோடு இருந்த மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கொண்டுவந்த நீட் நுழைவுத் தேர்வானது அவ்வாசையை மண்ணாக்கியது. “அதனால் என்ன, துணை மருத்துவம் இருக்கிறதே, அதை வைத்தாவது மருத்துவத்துறையில் பணியாற்றும் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என பல மாணவர்கள் துணை மருத்துவப் படிப்பில் இணைந்து படித்து வருகின்றனர். கட் ஆஃப் (Cut off) மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட்ட இம்மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயின்று வருகின்றனர்.

ஆனால், துணை மருத்துவ மாணவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படுவதில்லை. வீட்டில் எவ்வாறு மூத்த பிள்ளை பயன்படுத்தியதை இளைய பிள்ளைகள் பயன்படுத்துவதற்கு பெற்றோர்களால் வற்புறுத்தப்படுகிறார்களோ, அதே நிலைதான் துணை மருத்துவ மாணவர்களுக்கும். இவர்களுக்கென்று தனித் துறை, வகுப்புகள், நடைமுறைக் கல்வி என்ற பெயரில் வார்ட் ட்யூட்டி (Ward Duty) போன்றவையெல்லாம் ஒதுக்கப்பட்டு இது தனி படிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய வசதிகளோ சுதந்திரமாகக் கல்வி பயிலும் சூழலோ இம்மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படவில்லை.

குறிப்பாக இப்படிப்பு தொடங்கப்பட்டது முதல் இன்று வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் துணை மருத்துவ மாணவர்களுக்கான விடுதியோ கல்வி உதவித் தொகையோ வழங்கப்படுவதில்லை.


படிக்க: அபாயமாகும் உயிரி மருத்துவக் கழிவுகள் – பொறுப்பேற்குமா அரசு?


காலை 8 மணிக்கு கல்லூரி வாசலில் இம்மாணவர்கள் அடியெடுத்து வைக்கிறார்கள் என்றால் வார்ட் ட்யூட்டி, வகுப்பு அனைத்தும் முடிவதற்கு மாலை 5 மணி ஆகிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5 முதல் 6 மணி நேரம் வார்ட் ட்யூட்டி செய்கிறார்கள். பிறகு இரண்டு மணிநேரம் வகுப்புகள் நடக்கிறது. வகுப்புகள் இல்லையென்றால் மீண்டும் வார்ட் ட்யூட்டி செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதினால் அவர்களுடைய வேலைகளும் துணை மருத்துவர்கள் தலை மீதுதான் விழுகிறது. சம்பளம் கொடுக்காமல் பணியாற்றும் பணியாளர்கள் என்று கூட இம்மாணவர்களை சொல்லும் அளவிற்கே இவர்களது நிலை உள்ளது. இதனால் ஏற்படும் சோர்வு காரணமாக கல்லூரியில் முடிந்து தங்கும் அறைகளுக்குச் சென்ற பிறகு மாணவர்களால் படிக்கக்கூட முடிவதில்லை.

மேலும், துணை மருத்துவ மாணவர்களுக்கு விடுதி வசதிகள் ஏற்படுத்தித் தரப்படாததால், வேறு வழியின்றி தனியாக அறை எடுத்து சமைத்து வாழ வேண்டிய நிலையே உள்ளது. எப்படியோ நான்கு ஆண்டுகள் படித்துவிட்டுச் சென்றுவிடலாம் என முடிவு செய்து, கல்லூரிக்கு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து, தட்டுமுட்டு சாமான்களை ஏற்பாடு செய்து படாத படுபட்டு படிக்கின்றனர்.

இருப்பினும், சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இவ்வாறு வீடு எடுத்து தங்குவதென்பது சவாலானதாகவே உள்ளது. போதுமான கட் ஆஃப் மதிப்பெண்களை எடுத்தாலும் அவர்கள் கூடுதல் துயரங்களை அனுபவிக்க வேண்டிய நிலைதான் உள்ளது. தாங்கள் சிரமப்படுவது தெரிந்தால் பெற்றோர்கள் துன்பப்படுவார்கள் என்பதால் பல மாணவர்கள் தங்கள் துயரங்களை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர்.

உழைத்து சம்பாதித்தே மூன்று வேலை உணவுக்கு சிரமப்படும் இன்றைய சூழலில், பெற்றோர்களின் செலவில் படிக்கும் காலத்திலேயே உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாவது பரிதாபத்தின் உச்சம்.


படிக்க: தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்!


சரி, இத்தனையும் கடந்து படித்து முடித்துவிட்டு நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்தால் 15,000 ரூபாய்க்காக தனியார் பல்நோக்கு மருத்துவமனைகளை (Private Multispeciality Hospital) நோக்கி நகர்வதுதான் ஒரே வழியாக உள்ளது. அனைத்து சவால்களையும் கடந்து நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று நினைக்கும் துணை மருத்துவ மாணவர்களின் தலையில் இடி இறக்கப்படுகிறது.

பாசிச மோடி அரசு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கித் திணிக்கும் வரையில், துணை மருத்துவப் படிப்புகள் குறித்து பெரியளவில் யாருக்கும் தெரியாது. ஆனால், மருத்துவக் கனவை இழந்த மாணவர்களிடத்தில் இது மாற்றாக திணிக்கப்பட்டதன் விளைவாய் இன்று துணை மருத்துவத்துறை இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக்கப்பட்டு வருகிறது. ஆனால், அத்துறை சார்ந்த ஊழியர்கள் அற்பக் கூலிக்கு நாகரிக கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிரம் காட்டிவரும் தி.மு.க அரசு, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவரின் பணிகளையும் காண்ட்ராக்ட்மயமாக்கி வருகிறது. இதில் ஏற்கெனவே திண்டாடிக் கொண்டிருக்கும் துணை மருத்துவ ஊழியர்களின் நிலை குறித்து தனியாக விளக்க வேண்டியதில்லை. எனவே, துணை மருத்துவ மாணவர்கள் – ஊழியர்களின் பிரச்சினைகள் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயத்துடன் இணைந்ததாகும். இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியதும் போராட வேண்டியதும் அத்துறைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரின் கடமையாகும்.


கெவின்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க