கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்

உத்தரப்பிரதேச போலீசு கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது; யாத்திரிகர்களை அமரவைத்து கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.

0

வ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்து கடவுளான சிவனுக்காக இந்து பக்தர்கள் கன்வார் யாத்திரை செல்லும் வழக்கம் வட மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ஜூலை 11-ஆம் தேதி முதல் கன்வார் யாத்திரை நடைபெற்று வருகிறது. ஆனால், இது “கன்வார் யாத்திரையா? கலவர யாத்திரையா?” என்று கேட்கும் அளவிற்கு சங்கப் பரிவார குண்டர் படைகள் வன்முறை வெறியாட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த யாத்திரை தொடங்கிய முதல் ஐந்து நாட்களில் மட்டும் 170-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது இதனை நிரூபிக்கிறது.

குறிப்பாக, பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் யாத்திரிகர்கள் என்ற பெயரில் ஊடுருவி காவி குண்டர்கள் கட்டற்ற வகையில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் மத்திய ரிசர்வ் போலீசு படை (CRPF) ஜவான் மீது காவி குண்டர்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது; மீரட் மற்றும் முராத்நகர் பகுதிகளில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்; முசாபர் நகரில் உணவகத்தை சூறையாடி அதன் உரிமையாளரைத் தாக்கியது; காசியாபாத்தில் கார் கண்ணாடியை உடைத்தது என காவி குண்டர்களின் வன்முறை வெறியாட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அதேபோல், உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை முடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியது; உணவகங்களில் தாக்குதல் நடத்தி அங்கு பணிபுரிபவர்களின் ஆடைகளை அத்துமீறி களைந்து அவர்கள் இந்துவா இஸ்லாமியரா என்று சோதிக்க முற்பட்டது என்று பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த வன்முறைகள் அனைத்தும் பாசிச பா.ஜ.க அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையுடன்தான் நடைபெற்று வருகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


படிக்க: கன்வார் யாத்திரை: குறிவைக்கப்படும் இஸ்லாமியர்கள்!


பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் காவி குண்டர்களின் தாக்குதல்களை போலீசு வேடிக்கை பார்த்ததும், சில சமயங்களில் போலீசு வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் வன்முறையை நிறுத்துமாறு கெஞ்சியதும் இதனை நிரூபிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில், 2017-ஆம் ஆண்டு முதல் 14,973 எண்கவுண்ட்டர்களை நடத்தி 238 பேரைக் கொன்று, 9,467 பேரைக் காலில் சுட்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதை தம்பட்டம் அடிக்கும் உத்தரப்பிரதேச போலீசு, கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, யாத்திரிகர்களை அமரவைத்து அவர்களின் கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், சி.ஆர்.பி.எஃப் ஜவான் குண்டர்களால் தாக்கப்பட்டது பெரும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், கன்வார் யாத்திரையில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்துப் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “கன்வார் யாத்திரை சாதி – வர்க்கம் கடந்த ஒற்றுமையை பறைசாற்றுகிறது.” என்றும் “யாத்திரிகர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து இழிவுபடுத்தப்படுகிறார்கள்” என்றும் பேசினார். முன்னதாக, “ஒழுக்கத்துடன் கூட்டு வழிபாடு நடத்துவது எப்படி என்பதை கன்வார் யாத்திரிகர்களிடம் இருந்து இஸ்லாமியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று யோகி ஆதித்யநாத் இஸ்லாமிய வெறுப்பை கக்கியது குறிப்பிடத்தக்கது.

2014-இல் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய பின்னர் கன்வார் யாத்திரையில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. 2015-ஆம் ஆண்டில்தான் முதன் முதலில் காவிக் கொடியுடன் இந்தியாவின் மூவர்ணக்கொடியும் இணைந்து பறக்கவிடப்பட்டது. இதன்மூலம் பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தனது தேசவெறி-இந்துமதவெறி அரசியலை இந்த யாத்திரையினுள் நுழைக்கும் முயற்சியைத் தொடங்கியது. 2024-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்கள் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் சில நகரங்களில் யாத்திரிகர்கள் செல்லும் வழிகளில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது இஸ்லாமியர்களின் கடைகளை அடையாளம் கண்டு யாத்திரை செல்லும் இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் என என்பது அம்பலமாகி எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்தாண்டில், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க அரசு உத்தரவின்படி உணவகங்களில் பொருத்தப்பட்ட “கியூ.ஆர் கோட்”களை ஸ்கேன் செய்து இஸ்லாமியர்களின் கடைகளை அடையாளம் கண்டு யாத்திரை செல்லும் இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்துவது என்ற நிலைக்கு பாசிச கும்பலின் அச்சுறுத்தல் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.


படிக்க: கன்வார் யாத்திரையில் வன்முறை: முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கும் இந்துத்துவா குண்டர்கள்


இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?

இந்தியாவில் கும்பலாட்சியை நிறுவத்துடிக்கும் பாசிச கும்பல், உள்ளூர் அளவில் பாசிச கும்பலாட்சியை நிறுவுவதற்கான வடிவங்கள்-வழிமுறைகளாக இத்தகைய யாத்திரைகளையும் விநாயகர் சதுர்த்தி, இராம நவமி போன்ற இந்து பண்டிகைகளையும் பயன்படுத்துகின்றன. பா.ஜ.க ஆளும் வட மாநிலங்களில் யாத்திரை, பேரணி என்ற பெயரில் அரசு-அதிகார வர்க்கத்தின் துணையுடன், செல்லும் வழியெங்கும் சூறையாடல்களையும் இந்துத்துவ வெறியாட்டங்களையும் நிகழ்த்தி, மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி தனது அதிகாரத்தை நிறுவி வருகிறது காவி கும்பல். மேலும், பாசிச கும்பலாட்சிக்கு மக்களைப் பழக்கப்படுத்துவதற்கும், மக்களிடையே இந்து மதவெறியைப் பரப்புவதற்கும், இதுபோன்ற யாத்திரைகள், இந்து பண்டிகைகள் என்றாலே இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரிடத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டு முயற்சிக்கின்றன. இவையெல்லாம் பக்தி என்ற பெயரில் நடத்தப்படும் நிலையில், இதிலிருந்து மக்களை மீட்டெடுத்து பாசிச கும்பலை தனிமைப்படுத்தி முறியடிப்பது பாசிச எதிர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க