ஜூலை 21-ஆம் தேதி அன்று சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் 1080-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவிகித பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பட்டாசு என்றால் வாண வேடிக்கைகள், சத்தம், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றுடன் அத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் அவலமும் அடங்கியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சிவகாசி அருகே உள்ள நாரணா புரத்தில் ”மாரியம்மாள் ஃபயர் ஒர்க்ஸ்” என்கிற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு நாக்பூரில் உள்ள ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 49-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜூலை 21-ஆம் தேதி அன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். மாலை நேரத்தில் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலம் தீயை அணைத்தனர்.
பின்னர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன், லட்சுமி, சங்கீதா ஆகிய மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி அன்று கீழ்த்தாயில்பட்டியில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்தச் சுவடுகள் மறைவதற்குள் தற்போது மீண்டும் வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வழக்கம்போல் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசு, ஆலை போர் மேன் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் தன் பங்கிற்கு தற்காலிகமாக ஆலை உரிமையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
படிக்க: தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள்: அரசே குற்றவாளி!
பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில், ஜூலை 8 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம், விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தையும் 10 நாள்களுக்குள் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆலைகளில் விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால், ஆலைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரத்தில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நடந்துள்ளதானது அரசு பட்டாசுத் தொழிலாளர்கள் மீது கொண்டிருக்கும் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது.
மேலும், அரசு வகுத்துள்ள விதிமுறைகளே கூட முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அதிகார வர்க்கமும் பட்டாசு ஆலை முதலாளிகளும் கூட்டுச்சேர்ந்து இந்த விதிமீறல்களை மேற்கொள்கின்றனர். அதனால்தான் நாளுக்குநாள் பட்டாசு ஆலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே, கண் துடைப்பிற்காக ஆலைகளைத் தற்காலிகமாக மூடுவது, கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களுக்கு இழப்பீடு தருவது என்பதைத் தாண்டி பட்டாசுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறும் ஆலைகளை நிரந்தரமாக மூடுவது; ஆலை உரிமையாளர்களைக் கைது செய்வதுடன் அப்பட்டாசு ஆலைகள் இயங்கும் பகுதியின் வி.ஏ.ஒ, ஆர்.டி.ஓ, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram