ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறி, தேசவெறி, இந்துமதவெறியை கிளப்பியது போல, வங்கதேச அகதிகளால் நாட்டிற்கு ஆபத்து என்றுக் கூறி ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இந்துமதவெறி- தேசவெறியை கிளப்பி வருகிறது.

ந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலிருந்து அகதிகளாக வந்த இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் பாசிச மோடி அரசு சமீப மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. “ஆபரேஷன் புஷ் பேக்” (Operation Push Back) என்ற பெயரில் இப்பாசிச நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்நடவடிக்கையின் மூலம் 2,000-த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய அகதிகளை இந்தியாவிலிருந்து வெளியேற்றியிருப்பதாக செய்திகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகளை குறிவைத்தே ஆபரேஷன் புஷ் பேக்-ஐ மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வங்கதேச அகதிகளே ஆவர்.

மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, அசாம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் புஷ் பேக், மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. உழைக்கும் மக்கள் வாழும் குடியிருப்புகள், அகதிகள் முகாம்களில் சோதனையிடப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் கைது நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

கைது செய்யப்படுபவர்களின் பயோமெட்ரிக் (Biometric) தகவல்களை சேகரித்துக் கொண்டு, துப்பாக்கி முனையில் மிரட்டி விலங்குகளைப் போல இழிவான முறையில் அண்டை நாட்டு எல்லைக்குள் விரட்டியடிக்கிறது பாசிச மோடி அரசு. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளையும் ஈவிரக்கமின்றி நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறது. இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியாமல் நிர்கதியாக வயல்வெளியில் நிற்கும் காணொளிகளும் புகைப்படங்களும் நெஞ்சை உலுக்குகின்றன.

குறிப்பாக, மே 12-ஆம் தேதி அன்று தென்கிழக்கு மியான்மர் கடற்கரைக்கு அருகில் இந்திய அதிகாரிகள், 43 ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை படுகொலை செய்யும் விதமாக கப்பலில் இருந்து கடலில் தள்ளிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மனிதத் தன்மையற்ற இக்கொடூர செயலுக்குப் பிறகுதான், ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இஸ்லாமிய அகதிகளை பாசிச மோடி அரசு சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற்றி வருவது கவனம் பெறத் தொடங்கியது.

ஆபரேஷன் புஷ் பேக்:
தூண்டப்படும் இந்துமதவெறி-தேசவெறி

ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கவெறி காரணமாக நடைபெறும் போர்கள், கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற இயற்கைவளச் சுரண்டல், உள்நாட்டுப்போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் உலகம் முழுவதும், தங்களுடைய நாடுகளிலிருந்து மக்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்படுவதும், பிழைப்புத்தேடி மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்வதும் ஒரு போக்காக உள்ளது.

இவ்வாறு புலம்பெயர்ந்துவரும் மக்கள் மிகக் குறைவான கூலிக்கு கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இன்றி சிறைபட்டுக் கிடக்கின்றனர். இராணுவத்தாலும், போலீசாலும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கப்படுவது; வழக்குகளை முடிக்க குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது என வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பாசிச சக்திகள் வளர்ந்துவரும் சூழலில், புலம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள் மீதான வெறுப்புணர்வு திட்டமிட்டு தூண்டப்படுகிறது. மதவெறி, தேசவெறி, இனவெறி என பல்வேறு வகைகளில் மக்களை அணித்திரட்ட முயற்சிக்கும் பாசிஸ்டுகள், நாட்டில் நிலவும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி, தேசவெறியை தூண்டுவது உலகம் முழுவதும் ஒரு போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பெயரில் பலரை வெளியேற்றிவருவது இதனுடன் இணைந்ததுதான்.

இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாடு கடத்தப்பட்ட மேற்கு வங்கத் தொழிலாளர்கள்.

இவ்வாறே, இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி கும்பலும் இஸ்லாமிய அகதிகளை காரணம் காட்டி இந்துமதவெறி-தேசவெறியூட்டி வருகிறது. “இந்துக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள், வேலைகளை பறிக்கிறார்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள், இவர்களால் நாட்டிற்கு ஆபத்து” என பல்வேறு நச்சுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளின் சட்டப்பூர்வமான வடிவமே ஆபரேஷன் புஷ் பேக். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்றுக் கூறி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறி, தேசவெறி, இந்துமதவெறியை கிளப்பியது போல, வங்கதேச அகதிகளால் நாட்டிற்கு ஆபத்து என்றுக் கூறி ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இந்துமதவெறி- தேசவெறியை கிளப்பி வருகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட விதிகளை எல்லாம் தூரவீசிவிட்டு, துளியும் ஈவிரக்கமின்றி மூர்க்கத்தனமாக தன்னுடைய இந்துராஷ்டிரக் கொள்கையிலிருந்து இப்பாசிச நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

சான்றாக, இந்தியாவிற்குள் முறையான ஆவணங்களின்றி புலம்பெயர்ந்துள்ள அகதிகளை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், அந்நாடுகளின் ஒப்புதலுடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று “வெளிநாட்டினர் சட்டம், 1946” கூறுகிறது. மேலும், சர்வதேச சட்டங்களின்படி, அகதிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய ஓர் நாட்டிற்கு அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. ஐ.நா-வில் உறுப்பினராக உள்ள நாடு இவ்விதியை பின்பற்ற வேண்டும். ஆனால், மோடி அரசு இவ்விதிகளை ஓர் பொருட்டாகக்கூட மதிக்காமல் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாமல் தனக்கே உரிய பாசிசத் திமிருடன் நடந்துகொள்கிறது.

குறிப்பாக, அசாம் மாநிலத்தின் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசானது வெளிநாட்டினர் என்று தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும், 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களையும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று வெளியேற்றி வருகிறது. அசாம் மாநிலத்திற்காக சிறப்பாக இயற்றப்பட்ட “குடியேறிகள் (அசாமில் இருந்து வெளியேற்றம்) சட்டம், 1950” மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்நடவடிக்கைகளில் அசாம் அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், கடந்த ஜூன் 10-ஆம் தேதி, “அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளவர்களையும், நாங்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று உறுதிசெய்தால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று அசாம் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அறிவித்திருக்கிறார். அதாவது, தாங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று வெளியேற்றுவோம் என்பதையே வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.

அதுமட்டுமின்றி, ஆபரேஷன் சிந்தூர் போன்று ஆபரேஷன் புஷ் பேக்கையும் தங்களுடைய தேர்தல் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க. கும்பல் விரும்புகிறது. குறிப்பாக, அசாம் மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற, ஆபரேஷன் புஷ் பேக்கை பயன்படுத்தி தீவிரமான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்

மோடி அரசின் ஆபரேஷன் புஷ் பேக் எனும் இப்பாசிச நடவடிக்கைக்கு உறுதுணையாகவே உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அகதிகள் வெளியேற்றப்படுவது தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளை உச்சநீதிமன்றம் கையாளும் முறையே இதனை தெளிவுப்படுத்துகிறது.

நாடுமுழுவதும் மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும் மேற்பட்டோர் வசித்துவரும் நிலையில், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம், ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்ததுடன், “ரோஹிங்கியாக்கள் இந்திய குடிமக்கள் அல்ல. நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை” என்று கூறியது.

அதேபோல், இந்திய அதிகாரிகளால் 43 ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகள் கடலில் தள்ளப்பட்ட கொடூரச் சம்பவத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.

இதன் உச்சமாக, இந்தியாவில் வசிக்க அனுமதிக் கோரி இலங்கை நாட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, “உலகம் முழுவதுமிருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது” என துளியும் மனிதாபிமானமின்றி பேசினார்.

மொத்தத்தில், ஆபரேஷன் புஷ் பேக் எனும் பாசிச திட்டத்திற்கு ஆதரவாக பாசிஸ்டுகளின் ஊதுகுழலாகவே மாறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்களை
எதிர்நோக்கியுள்ள பேரபாயம்

ஆபரேஷன் புஷ் பேக் என்ற பாசிச திட்டமானது வங்கதேசம், மியான்மர் நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய மக்களுக்கும் எதிரானதாகும்.

சான்றாக, இந்த மாதத் தொடக்கத்தில் மும்பையில் பணிபுரிந்துவந்த மூன்று மேற்குவங்கத் தொழிலாளர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) நாடு கடத்தப்பட்டனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களும் இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால் அத்தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட மூன்று தொழிலாளர்களும் காணொளி வாயிலாக தங்களின் உறவினர்கள் மற்றும் மேற்குவங்க அரசிடம் தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்ததையடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

அதாவது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்று கூறி இடிப்பதைப்போல, இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சதித்திட்டமும் ஆபரேஷன் புஷ் பேக்-இன் பின்னணியில் உள்ளது.

ஏற்கெனவே, இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய பாசிச சட்டங்களை கொண்டுவந்துள்ள மோடி அரசு, மக்கள் எதிர்ப்பினால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது, ஆபரேஷன் புஷ் பேக் மூலம் மறைமுகமாக இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும், ஆபரேஷன் புஷ் பேக் பாசிசத் திட்டத்தால் தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படும் அபாயமும் உள்ளது.

கூடுதலாக, ஆபரேஷன் புஷ்பேக் மூலம் தன்னுடைய பிராந்திய மேலாதிக்க நோக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் முகமது யூனிஸ் தலைமையிலான வங்கதேசத்தின் இடைக்கால அரசிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கமும் பாசிச கும்பலுக்கு உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அதானி குழுமமானது, வங்கதேச அரசு மின்சார விநியோகத்திற்கான 800 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது. அதேபோல், பாசிச மோடி அரசு வங்கதேசத்தின் சரக்குகளை இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்கள் மூலம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது; ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யவும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் தொடர்ச்சியாகவே வங்கதேச இஸ்லாமிய அகதிகளை வெளியேற்றுவதில் தீவிரம்காட்டி வருகிறது.

அதுமட்டுமின்றி, தன்னுடைய அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகளை சகல வசதிகளுடன் பராமரித்துவரும் மோடி அரசானது, இஸ்லாமிய அகதிகளை இந்தியாவை விட்டு அடாவடித்தனமாக வெளியேற்றி வருவதற்கு அதனுடைய பிராந்திய மேலாதிக்க நலனும் முக்கிய காரணமாகும்.

பாசிச கும்பலின் இத்தகைய பாசிச நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள், எந்தவித கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்யாமலிருக்கின்றன. இது, இஸ்லாமிய அகதிகள் பிரச்சினையை தங்களுடைய அரசியல் நலனுக்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றனரே தவிர, அவர்களின் நலனில் உண்மையாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

எனவே, இந்தியாவில் வசித்துவரும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய, ஈழத் தமிழ் அகதிகளையும், இந்திய இஸ்லாமியர்களையும் சூழ்ந்துள்ள இப்பேரபாயத்திலிருந்து அவர்களை காப்பது இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிசத்திற்கு எதிராக போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க