கடந்த ஜூலை 29 அன்று ஒன்றிய பா.ஜ.க. அரசு “சேதுபந்த வித்வான் யோஜனா” (Setubandha Vidwan Yojana) என்ற கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டமானது முறையான பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும், ‘பாரம்பரிய’ குருகுலங்களில் கல்வி பயின்ற மாணவர்களை ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (Indian Institute of Technology) சேர்ந்து ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட அனுமதிக்கிறது.
அதாவது ஐ.ஐ.டி-யில் படிப்பதற்கு முறையாகப் பன்னிரண்டு வருடங்கள் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்லூரி பட்டப்படிப்பு மட்டுமின்றி ஜே.இ.இ. (JEE – Joint Enter Examination), கேட் (GATE – Graduate Aptitude Test In Engineering) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், இவை எதுவும் இல்லாமல் குருகுலங்களில் பயின்ற மாணவர்களை ஐ.ஐ.டி-க்குள் புகுத்துவதற்கு “சேதுபந்த வித்வான் யோஜனா” திட்டம் அனுமதியளிக்கிறது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் ஐ.ஐ.டி-களில் சேர வேண்டுமென்றால், மாணவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட குருகுலத்தில் பயின்றிருக்க வேண்டும்; சமஸ்கிருதம், ஆயுர்வேதம், தத்துவம், கணிதம் அல்லது ‘பாரம்பரிய’ கலைகள் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற சில பெயரளவிலான விதிமுறைகளை விதித்துள்ளது பா.ஜ.க. அரசு.
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் (Central Sanskrit University) இந்திய அறிவு அமைப்பு (IKS – Indian Knowledge Systems) என்ற பிரிவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், முதுகலை மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.40,000 சம்பளம் (fellowship) மற்றும் ரூ.1 லட்சம் மானியம் (annual grant); முனைவர் பட்ட மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.65,000 சம்பளம் மற்றும் ரூ.2 லட்சம் மானியம் என இரண்டு பிரிவுகளில் உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்களில் புராணக் குப்பைக் கதைகளைப் புகுத்தியும் வரலாற்றைத் திரித்தும் கல்வித்துறையைக் காவிமயமாக்கி வரும் மோடி அரசு இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களையும் காவிமயமாக்கத் திட்டமிட்டுள்ளது.
படிக்க: ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!
ஏற்கெனவே, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகளவில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவற்றில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. பல்வேறு தடைகளை மீறி தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் இந்நிறுவனங்களில் சேர்ந்தாலும் சாதிய வன்கொடுமையால் பலர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக் கொள்கின்றனர். பல மாணவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிப்படைந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஆண்டுக்கு ஐந்து மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் தனக்கு ஏற்படுகின்ற சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாதி ரீதியான வன்முறைகளால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் எந்தவித முறையான கல்வி அறிவும் இல்லாமல் குருகுலத்தில் படித்தவர்களை ஆராய்ச்சிக் கூடங்களில் உட்கார வைக்க சேதுபந்த வித்வான் யோஜனா திட்டத்தின் மூலம் வழிவகுக்கிறது மோடி அரசு. குறிப்பாக, குருகுலங்களில் பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சங்கி கும்பலை ஆதரிப்பவர்களாகவுமே இருப்பர். பழைய மூடநம்பிக்கைகளையும் புராண குப்பை கதைகளையும் கற்றவர்களாக இருப்பர்.
இவர்களை ஐ.ஐ.டி-களின் ஆராய்ச்சி துறைகளில் சேர்ப்பதன் மூலம் அறிவியலுக்கு புறம்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்துத்துவத்தின் அடிப்படையிலான கல்வி கற்பிக்கப்படும். ஏற்கெனவே சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் பூர்வமான கல்வி என்பதையே முற்றாக ஒழித்து, மூட நம்பிக்கை கருத்துகளுக்கேற்ப ‘ஆராய்ச்சிகள்’ மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களையும் பார்ப்பனர்கள், சங்கி கும்பல் கைகளில் தூக்கிக் கொடுப்பதற்கான சதித்திட்டமும் இதில் உள்ளது. மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் தலித், சிறுபான்மை மாணவர்கள், பேராசிரியர்கள் மீதான சாதிய-மதவாத தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் அபாயமும் இதில் உள்ளது.
ஆகவே, பாசிச மோடி அரசின் இத்திட்டத்திற்கு எதிராக அனைத்து கல்வியாளர்களும் மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram