இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்: ராஜஸ்தான் பா.ஜ.க அரசே குற்றவாளி

சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவாரில் (Jhalawar) உள்ள பிப்லோடி அரசு மேல்நிலை தொடக்கப்பள்ளியின் (Piplodi Government Upper Primary School) மேற்கூரை ஜூலை 25 அன்று இடிந்து விழுந்ததில் 35 குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் 7 அப்பாவி குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் காலை 7:45 மணியளவில் பிரார்த்தனை கூட்டத்தின்போது நடந்துள்ளது. பள்ளியில் இறைவணக்க கூட்டம் முடிந்து அனைத்து மாணவர்களும் வகுப்பறைக்குள் சென்றனர். திடீரென்று மேற்கூரை பிளவுபட்டு உள்ளே இருக்கும் மாணவர்கள் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்டனர். அதன்பிறகு விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவ-மாணவியர், ஆசிரியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஏழு குழந்தைகள் இறந்துள்ள நிலையில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், ஆசிரியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மேற்பரப்பு சிமென்ட் மற்றும் பிளாஸ்டரிங் மூலம் தற்காலிகமாக கூரை சரிசெய்யப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர். இதுகுறித்து விபத்திலிருந்து தப்பிய எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கண்ணீருடன் கூறுகையில், “மேலே இருந்து கற்கள் விழுவதாக ஆசிரியர்களிடம் கூறினோம். ஆனால் அவர்கள் எங்களைத் திட்டி வகுப்பறையில் உட்காரச் சொன்னார்கள். அப்போது, கூரை இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது” என்று கூறினார். இது ஆசிரியர்களின் கடுமையான அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பலியான தங்களது குழந்தைகளை எண்ணி துக்கம் கொள்ளும் தாய்மார்கள்

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர், “பிப்லோட் கிராமத்தில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுவிட்டது. காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான முழுமையான உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்” என பேசியுள்ளார். இதனையடுத்து ஜூலை 26 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கட்டங்களை முறைப்படுத்துவது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, “இது ஒன்றும் சொந்த வீடு கட்டும் பணி அல்ல; தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுப்பதற்கு. எல்லா வேலைகளையும் பொறுமையாக தான் செய்ய முடியும்” என்று கல்வி அமைச்சர் அராஜகமாகப் பதில் அளித்துள்ளார்‌.


படிக்க: மீண்டும் பால விபத்து: நாறுகிறது குஜராத் மாடல்!


இத்துயர சம்பவத்திற்குப் பிறகு, ஜாலாவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோட், அலட்சியத்திற்காக ஐந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளார். “ஜூன் மாதத்திலேயே மாணவர்களைப் பாழடைந்த பள்ளி கட்டடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தோம். இந்த சம்பவத்தில் தெளிவான அலட்சியம் உள்ளது. நாங்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம், அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மாவட்ட ஆட்சியர் கூறியுள்ள இக்கருத்து ஒரு தரப்பினர் (ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள்) மட்டுமே தவற்றுக்குப் பொறுப்பானவர் என்ற வகையில் உள்ளது. அவ்வாறெனில், கல்வி அமைச்சரின் அராஜகமான பேச்சிற்கு மாவட்ட ஆட்சியரின் கருத்து என்ன? தனது உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யாத ஆட்சியரின் பங்கு என்ன? முழு அரசு கட்டமைப்புமே இச்சம்பவத்திற்குப் பொறுப்பு என்பதே உண்மை. இந்த சீர்கேடான அரசு கட்டமைப்புக்குள் பலியான பிஞ்சு குழந்தைகளுக்கான நீதி, கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் பிற மாணவர்களின் எதிர்காலம், அவர்கள் குடும்பங்களின் நிலைமை என அனைத்துமே கேள்விக்குறி தான்.

ராஜஸ்தான் மாநில ஆய்வறிக்கை ஒன்றில் சுமார் 8,000 கல்வி நிறுவனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. பருவமழை காலகட்டத்தில் மாணவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகுகின்றனர். இதில் 2,710 கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து மறுகட்டமைப்பு செய்வதற்காக 254 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது என்ற செய்தி வந்தது. சம்பவத்தில் இறந்த குழந்தைகளுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.

தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளை மூர்க்கமாக அமல்படுத்தும் பா.ஜ.க அரசு கல்விக்கான நிதியைக் குறைத்து ஏழை மக்களுக்கு அடிப்படையாக விளங்கும் கல்வி ஆதாரங்களை அடியோடு அழித்து வருகிறது. அதன் விளைவுதான் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்றுள்ள இந்த பள்ளி விபத்துமாகும்.


சைரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க