சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா என்பவர் வரதட்சணைக் கொடுமைத் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ரிதன்யா தன்னுடைய தந்தைக்கு அனுப்பிய குரல் பதிவில், “மனதளவிலும் உடலளவிலும் சித்திரவதையை அனுபவித்து வருகிறேன். எல்லோரும் சகித்துக்கொண்டு வாழ சொல்கிறார்கள். என்னால் முடியவில்லை” என்று கதறி அழுந்துகொண்டே கூறும் வார்த்தைகள் கேட்போரின் மனதை உலுக்குகிறது.
ரிதன்யாவின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வரதட்சணைக் கொடுமை சம்பவங்களும் வழக்குகளும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இச்சம்பவங்கள் மறுகாலனியாக்கக் காலகட்டத்தில், வரதட்சணைக் கொடுமைகளும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும் புதிய பரிமாணம் எடுத்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.
பெண்கள் மீதான குடும்ப வன்முறை
இந்தியாவில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மறுகாலானியாக்கக் காலகட்டத்தில் ஆபாச திரைப்படங்கள், போதைக் கலாச்சாரம் காரணமாக ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உச்சநிலையை அடைந்துள்ளன. இதன் விளைவாக, பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும் மிகவும் கொடூரமானதாக மாறியிருக்கின்றன.
சமீபத்தில், மதுரையைச் சேர்ந்த பூபாலன் என்பவன் வரதட்சணைக் கேட்டு தன் மனைவியை சித்திரவதை செய்ததை சிரித்துக்கொண்டே தன்னுடைய சகோதரியிடம் பகிர்ந்துகொள்ளும் குரல் பதிவு சமூக ஊடகங்களில் பரவி அனைவரிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய குரூர மனநிலைக் கொண்ட பூபாலன் ஒரு போலீசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், வேலூரில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் வீட்டை எழுதி வாங்கி வரச் சொல்லியும் கணவனே மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
இவ்வன்முறைகளில் பெண்களை அடித்து துன்புறுத்துவது மட்டுமின்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது. 2019-2021 இடையிலான ஆண்டுகளில், 31.2 சதவிகிதப் பெண்கள் இந்தியாவில் குடும்ப வன்முறையை எதிர்கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில், 5.7 சதவிகிதம் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். உண்மை நிலவரமோ இதனைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
ரிதன்யா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் தன் தந்தைக்கு அனுப்பிய குரல் பதிவில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். கணவன் குடும்பத்தாரின் கொடுமை தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு வந்த ரிதன்யா, நொண்டி நொண்டி நடந்ததாகவும் இடுப்பு அமைப்பே மாறியிருப்பதாகவும் அவருடைய அப்பா கூறியிருக்கிறார். இது இயற்கைக்கு மாறான பல வழிகளில் ரிதன்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
அதேபோல், கடந்த ஜூலை மாதம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் வரதட்சணைக் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தனது வாக்குமூலத்தில், மாமனாரும் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் சமூகத்தில் அரங்கேறும்போது அதற்கெதிராக குரல் கொடுக்கும் அளவிற்கு கூட, குடும்பத்திற்குள் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பப்படுவதில்லை.
ஏனெனில், பெரும்பான்மையானோர் கணவன் தனது மனைவியிடம் அத்துமீறுவதை வன்முறையாகவோ வல்லுறவாகவோ கருதுவதில்லை. குறிப்பாக, “பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள். அவளுக்குத் தனி உரிமைகள் கிடையாது. அவளும் அடிமையும் ஒன்றே.” என்ற பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்துகள் பெண்களை தனது உடைமையாக கருதுவதற்கும் வன்முறையை ஏவுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது.
திருமணம் என்பதே பெண்கள் மீது பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களைத் தொடுப்பதற்கு ஆணுக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரமாகத்தான் கருதப்படுகிறது.
எனவேதான், இத்தகைய அத்துமீறல்களை சகித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களே பெண்களை வற்புறுத்துகின்றனர். ரிதன்யா தனக்கு நேர்ந்த கொடுமைக் குறித்து, பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் ரிதன்யாவை சகித்துக்கொள்ள சொன்னதற்கும், ரிதன்யாவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய தந்தை “ஒருவனுக்கு ஒருத்தி என்று என்னுடைய மகள் இருந்துவிட்டாள்” என்று கூறியதற்கும் இந்த பார்ப்பனிய ஆணாதிக்க மனநிலையே அடிப்படை காரணம்.
மேலும், பல கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்துவிட்டோம், பெண் கணவனுடன் வாழாமல் பிரிந்து வந்துவிட்டால் “குடும்ப கௌரவம்” பறிபோய்விடும் என்ற ஆணாதிக்க-சொத்துடைமைக் கண்ணோட்டத்திலிருந்தும் இத்தகைய குடும்ப வன்முறைகளை பெண்களும் அவர்களது பெற்றோர்களும் சகித்துக் கொள்கின்றனர்.
மறுகாலனியாக்க நுகர்வுவெறி
தீவிரமாகும் வரதட்சணைக் கொடுமை
இந்தியாவில் வரதட்சணைக் கொடுமை எந்தளவிற்கு தீவிரமாக இருந்தது என்பதற்கான சாட்சியம்தான் பெண்சிசுக் கொலை. பெண் குழந்தையை வளர்த்து வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியாது என்று பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிடுவர். 1970-களில் தமிழ்நாட்டில் பெண்சிசுக் கொலை தலைவிரித்தாடியது. தற்போதும் அவ்வப்போது பெண்சிசுக் கொலை நடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை வரதட்சணைக் கொடுமை குறைந்து விட்டதால் பெண் சிசுக்கொலை குறைந்துவிட்டது என்று பார்க்க முடியுமா? உண்மையில், பெண் சிசுக்கொலை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கருக்கொலையாக பரிணமித்திருப்பதைப் போல, வரதட்சணையின் பரிமாணமும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாறியுள்ளது.
படித்த இளைய சமுதாயம் உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக குறைவதற்குப் பதிலாக, வரதட்சணை என்பது திருமணத்திற்கான நிபந்தணையாக மாறியிருக்கிறது.
இன்றைய காலத்தில் வரதட்சணையாக நகை, பாத்திரங்கள், பெட்டிப் பணம் கொடுப்பதைத் தாண்டி, பெண்ணின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைப்பது, நிலம்-வீடு என்ற வகையில் சொத்தாக எழுதிக் கொடுப்பது, மாப்பிள்ளை தொழில் செய்பவராக இருந்தால் அவருக்கு தொழில் ஏற்படுத்திக் கொடுப்பது என்று இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவையெல்லாம் வரதட்சணை இல்லையாம் திருமணப் பரிசாம். ஆம், இன்றைய காலகட்டத்தில் வரதட்சணையானது திருமணப் பரிசாகப் பரிணமித்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம், திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கிவரும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகள் கனிஷ்கா, கணவர் வீட்டில் இருட்டுக் கடை உரிமையை வரதட்சணையாக கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகாரளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மையில், வரதட்சணை என்பதே பெண்களை ஆடு, மாடுகளைப் போல பேரம் பேசி விற்கும் பெண்ணடிமைத்தனமாகும். இதனை சுயமரியாதையுடன் எதிர்த்து நிற்க வேண்டிய பெண்கள் இன்றைய திருமண சந்தையில், தங்களுக்கான வரதட்சணையைத் தாங்களே கேட்டு பெறும் இழிநிலை உருவாகியிருக்கிறது. மேலும், இந்தியாவில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என்று சட்டமிருந்தாலும், நடைமுறையில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை. இதனால் தங்களுக்கான குறைந்தபட்ச சொத்தாக வரதட்சணையை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கும் பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
திருமண சந்தை பகாசுரமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாளுக்கு நாள் திருமணங்களில் குடி-கூத்தின் பரிணாமங்கள் விரிவடைந்துக் கொண்டு செல்கின்றன. இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுப்பதற்கென பல நிகழ்ச்சி மேற்பார்வை நிறுவனங்கள் (Event Management) செயல்படுகின்றன. திருமண அரங்குகள், ஆடைகள், நகைகள், உணவு தானியங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஆடம்பர பரிசுப் பொருட்கள், சாராயம் என திருமணத்தையொட்டி மிகப்பெரிய வர்த்தகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் திருமணங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.10.7 லட்சம் கோடி என்று கணக்கிடப்படுகிறது.
இந்தத் திருமணச் சந்தையை ஊக்குவிப்பதற்காகவே “இந்தியாவில் திருமணம்” என்ற திட்டத்தை மோடி அரசு தொடங்கி வைத்துள்ளது. இத்திட்டத்திற்கான விளம்பரமாகவே அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெற்றது.
பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் இந்தியத் திருமணச் சந்தையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு கார்ப்பரேட்டுகள் போட்டிபோடுகின்றன. தங்களுடைய இலாபவெறிக்காக, வன்னியர், நாடார், செட்டியார் என ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனியாக “மேட்ரிமொனி” (Matrimony) செயலிகளை நடத்துவது தொடங்கி, வரதட்சணையை ஊக்குவிக்கும் வகையிலான நகை, ஆடை விளம்பரங்களை பரப்புவது வரை பார்ப்பனிய சாதி-ஆணாதிக்கப் பிற்போக்குத்தனங்களை கார்ப்பரேட்டுகள் ஊக்குவிக்கின்றன.
பாசிச கும்பலாட்சியில் தீவிரமாகும்
பெண்கள் மீதான வன்முறைகள்
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகளை தடுக்கப்பதாகக் கூறிக்கொள்ளும் போலீஸ், நீதித்துறை, இராணுவம் முதலிய அரசு நிறுவனங்கள்தான் பெண்கள் மீதான வன்முறைகளை பாதுகாக்கும் அமைப்பாக உள்ளன என்பதுதான் இந்திய சமூகத்தின் அவலநிலை.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 2017-2022 இடையிலான காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 7,000 வழக்குகள் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படுகின்றன. இதில் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளில் உத்தரப்பிரதேசம் (4,807) முதலிடத்திலும், பீகார் (3,580) இரண்டாம் இடத்திலும், கர்நாடகா (2,224) மூன்றாம் இடத்திலும் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே. உண்மையில், பல பெண்கள் குடும்ப மானம், குடும்பத்தினர் மிரட்டல் காரணமாக தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை வெளியில் சொல்வதே இல்லை. அப்படியே சொன்னாலும் அது குடும்பதிற்குள்ளேயே பஞ்சாயத்து செய்து முடித்து வைக்கப்படுகிறது. அதனை மீறி சிலர்தான் வழக்கு தொடுக்க முன்வருகின்றனர். அப்படி முன்வரும் பல வழக்குகளிலும் போலீசுத் துறையினர் – அது மகளிர் போலீசாக இருந்தாலும் – தம்முள் ஊறியுள்ள ஆணாதிக்கப் புத்தியைக் கொண்டு அக்குடும்பத்திற்கு அறிவுரைக் கொடுத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி அனுப்பி வைக்கின்றனர் என்பதே எதார்த்தம்.
தற்போது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கேற்ப மறுவார்ப்பு செய்துவருகிறது. இது, பெண்கள் மீது அரசு நிறுவனங்கள் தொடுக்கும் வன்முறைகளை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சான்றாக, 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை விகிதம் வெறும் 26.5 சதவிகிம்தான். அதேபோல், ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் திட்டமிட்டு புகுத்தப்படுவதால் காவிமயமாகிவரும் நீதிமன்றங்கள், பெண்களுக்கு எதிராக மனுநீதி அடிப்படையில் தீர்ப்புகளை வழங்கி பெண்களை வஞ்சிக்கின்றன.
கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறையை (Marital Rape) குற்றம் என்று அறிவிக்கக்கோரி நடந்த வழக்கில், திருமண பாலியல் வன்முறையை குற்றமாக்குவது மிகக் கடுமையானது என்றும் திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக போதுமான சட்டங்கள் உள்ளன என்றும் கூறி ஒன்றிய பா.ஜ.க. அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில், 25 பெண்களில் ஒருவர் தங்களது கணவனால் பாலியல் வன்முறையை அனுபவிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில், திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறையைக் குற்றமாக்கக் கூடாது என பா.ஜ.க. அரசு வாதிடுவது அதன் பெண்கள்-விரோத சித்தாந்தத்தைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகிறது.
அடிப்படையிலேயே பெண்களுக்கு விரோதமான பார்ப்பனியத்தை தனது சித்தாந்தமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆட்சியில், பாசிசமயமாகிவரும் அரசு கட்டமைப்பானது அப்பட்டமாக பெண்களுக்கு எதிரானதாக மாறி வருகிறது. இதனால், பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள், பாலியல் வன்முறைகள் மென்மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram