தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது! | சாவித்திரி கண்ணன்

முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்.

உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது!

நிச்சயம் இந்த போராட்டம் வரலாற்றில் நிற்கும்.

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் இருந்த ஒழுங்கமைவும், கட்டுப்பாடும், இரவு, பகல் எனத் தொடர்ந்து குடும்பத்தை துறந்து அமர்ந்திருந்த பெண்களின் மன உறுதியும் வியப்பில் ஆழ்த்தின.

இவர்கள் இயற்கை உபாதைகளை எப்படியெல்லாம் சமாளித்திருப்பார்கள்…? இந்த 13 நாட்களுக்கான சம்பள இழப்பு ஒரு புறமும், மறு புறம் தினசரி உணவுக்கான செலவுகளையும் எப்படி சமாளித்திருப்பார்கள்..? என் எண்ணும் போது.. ‘இதுவல்லவா? பட்டாளி வர்க்கத்தின் அசல் போராட்ட குணம்’ என மனம் பெருமிதப்பட்டது.

விரிந்த சாலையின் ஒரு ஓரமாக பிளாட்பாரத்தில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டம் பொது மக்களுக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை. சாலை போக்குவரத்து அதன் இயல்பில் நடந்து கொண்டிருந்ததை அங்கு சென்றவர்கள் அனைவரும் உணரலாம்.

இப்படி இருக்க, இந்த போராட்டத்தை பொதுமக்களுக்கு இடையூறு என்று வழக்கு போட்டதே அபத்தமானது.

மாண்புமிகு நீதிபதியவர்கள் நீதிமன்றத்தில் இருந்து பத்து நிமிட டிராவலில் இந்த போராட்ட இடத்திற்கு வந்துவிட முடியும். உண்மையை உறுதிபடுத்திக் கொள்ள முடியும். அப்படி இருக்க ஒரு வடிகட்டிய பொய்யின் அடிப்படையில் இந்த போராட்டத்தை நீதிமன்றம் தடை செய்தது மிகவும் வேதனைக்குரியது.

மேலும் நமது அரசியல் சட்டம் மக்களுக்கு போராடும் உரிமையைத் தந்துள்ளது. தொழிலாளர்களுக்கு தங்கள் உழைப்பிற்கான கூலியை வலியுறுத்த உரிமையுள்ளது. இதையும் மீறி நீதிபதி போராட்டத்திற்கு தடை விதித்தது எளியோருக்கு இழைக்கப்பட்ட அநீதியே!

ஆட்சியாளர்கள் தாங்களே முடிவெடுத்து இந்த போராட்டதை ஒடுக்கினால் மக்களிடம் கெட்ட பெயர் என்பதால், நீதிமன்றம் வழியே இந்த அராஜத்தை சூட்சுமமாகச் செய்கிறார்கள். பிரதமரையோ, முதல்வரையோ நாம் கடுமையாக விமர்சிப்பதைப் போல, நீதிபதியை விமர்சிக்க முடியாது.

நள்ளிரவில் கைது செய்யும் போது அந்த தாய்மார்களிடையே ஏற்பட்ட உள்ள கொந்தளிப்பும், அவர்கள் கண்களில் வழிந்த கண்ணீரும் பார்க்கையில்…, நெஞ்சை பதைபதைக்க வைத்தது. தாய்மார்களின் கதறலை பொருட்படுத்தாமல் குண்டுக்கட்டாக அவர்கள் தூக்கி செல்லப்பட்ட போதும், சிலர் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட போதும் என்னையும் அறியாமல் உள்ளம் துடித்து அழுகை பீறிட்டது.

இந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வை பெரும்பாலான காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த போதிலும், சமூக ஊடகங்களில் பல தோழர்கள் நேரலை செய்தனர். இந்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தந்ததற்காக தோழர்கள் வளர்மதியும், நிலவு மொழியும் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

எங்கோ ஆந்திராவில் இருக்கும், ஊரை அடித்து உளையில் போடும் ஒரு கார்ப்பரேட் ரெட்டிகாரு சம்பாதித்து கொழுப்பதற்காக, காலம் காலமாக உழைத்த நம் மண்ணின் பெண்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நியாயமா?

எத்தனையெத்தனை வழிமுறைகளில் டாஸ்மாக், குவாரிகள், பொதுப் பணித் துறை மற்றும் சாலை பணிகள் ஆகியவற்றில் சம்பாதித்து கொள்கிறீர்களே போதாதா? இந்த ஏழைகளை ஒட்டுமொத்தமாக ஒப்பந்ததாரருக்கு விற்று கமிஷன் பார்த்து காசு பார்க்காவிட்டால், என்ன குறைந்துவிடப் போகிறீர்கள்.?

‘திமுக ஆட்சியில் நாம் பாதுகாக்கப்பட்டோம். நமக்கு தந்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றினார்’ என காலமெல்லாம் நன்றி பாராட்டி இருப்பார்களே.

13 நாள் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்.

இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் வி.சி.க-வின் தூய்மை பணியாளர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்காமல் வெறுமனே ஒரு நாள் வந்து வாழ்த்திச் சென்றது முறையல்ல. நீங்கள் வழி நடத்தி, தலைமை தாங்கி இருக்க வேண்டாமா?

இதற்கிடையில் சின்மயி, மதுவந்தி, அம்பிகா.. போன்றவர்கள் வந்து ஆதரித்து சென்றதை வைத்து திமுக ஆதரவாளர்கள் தூய்மை பணியாளர் போராட்டத்தை களங்கப்படுத்துகிறார்கள். போராடும் எளியோருக்கு உற்ற துணையாக இருக்கத் தவறியது யார் குற்றம்…?

இந்தச் சூழலில் மனசாட்சியுள்ள திமுக-வினர் தூய்மை பணியாளர்களுக்கு நியாயம் வழங்கக் கோரி, தங்கள் கட்சித் தலைமைக்கு நிர்பந்தம் தந்திருக்கலாமே.


முகநூலில்: சாவித்திரி கண்ணன்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க