குஜராத் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை திணிப்பு

தேசிய கல்விக் கொள்கையின்படி ’பண்டைய அறிவியலை’ கல்வியுடன் இணைப்பது என்ற பெயரில் புராணக் குப்பைகளையும் போலி அறிவியலையும் பாடப்புத்தகங்களில் திணித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

0

ஜராத் மாநிலத்தில் பூபேந்திரபாய் பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான முதல் மொழி (குஜராத்தி, இந்தி, ஆங்கிலம், உருது) பாடப்புத்தகங்களில் 2025-26 கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையை கட்டாயமாக்கி திணித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வந்த இந்த அறிவிப்பானது கல்வியாளர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 2024-இல் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு மாநில பாடப்புத்தகங்களில் பகவத் கீதையை திணிப்பதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. கல்வியை காவிமயமாக்குவதற்கான இத்தீர்மானத்திற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் ஆதரவளித்து கரசேவையில் ஈடுபட்டன. பின்னர் அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தற்போது பாடபுத்தகங்களில் புராண குப்பை கதையான பகவத் கீதை திணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையின்படி (National Educational Policy – NEP) ’பண்டைய அறிவியலை’ கல்வியுடன் இணைப்பது என்ற பெயரில் புராணக் குப்பைகளையும் போலி அறிவியலையும் பாடப்புத்தகங்களில் திணித்து வருகிறது பா.ஜ.க. கும்பல். அதன் ஒரு பகுதியாகவே, குஜராத் பா.ஜ.க. அரசும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த கல்வியாண்டில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான துணைப் பாடப்புத்தகங்களில் பகவத் கீதை திணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒட்டுமொத்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதையை படிப்பது கட்டாயமாக்கியுள்ளது குஜராத் மாநில பாசிச பா.ஜ.க. அரசு.


படிக்க: சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!


பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இராமாயணம், பகவத் கீதை போன்ற புராண குப்பைகள் பாடத்திட்டங்களில் திணிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த மாதம் பா.ஜ.க. ஆளும் உத்தராகண்ட் மாநில பாடத்திட்டத்தில் பகவத் கீதை, இராமாயணம் போன்ற புராண கதைகள் திணிக்கப்பட்டன. சங்கி கூட்டத்தை உயர்கல்வி நிறுவனங்களில் புகுத்துவதற்காக, முறையான கல்வி தகுதி இல்லையெனினும் குருகுலத்தில் பயின்றவர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கான “சேதுபந்த வித்வான் யோஜனா” என்கிற திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு சமீபத்தில் அறிவித்தது.

இவ்வாறு, பாசிச கும்பலானது தன்னுடைய பிற்போக்கு-மதவெறி கருத்துகளை மாணவர்களிடையே திணிப்பதற்கும், அதன் மூலம் அவர்களது அறிவை மழுங்கடித்து அவர்களை தனக்கான அடித்தளமாக்கி கொள்வதற்கும் கல்வியை காவிமயமாக்குகின்ற நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நாளை பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் இத்திட்டம் திணிக்கப்படுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே, கல்வியை காவிமயமாக்குகின்ற பாசிச கும்பலின் நடவடிக்கைக்கு எதிராக கல்வியாளர்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமே நாளைய இளைய தலைமுறையை பாதுகாக்க முடியும்


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க