தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?

போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது.

வெறிபிடித்த தெருநாய்கள் தங்கள் கண்ணில் படும் மனிதர்களையும் விலங்குகளையும் கடித்துக் குதறுவதைப் போல, அதிகார வெறிபிடித்த போலீசு மிருகங்கள் காலங்காலமாக ஏழை-எளிய, தலித், பழங்குடியின, சிறுபான்மையின மக்கள் மீது தனது கோரமுகத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஜூன் 27 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்குட்பட்ட மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, போலீசால் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து கொட்டடிப் (லாக்கப்) படுகொலை செய்யப்பட்டிருப்பது இதனை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

போலீசின் பச்சைப் படுகொலை

கடந்த ஜூன் 27 அன்று மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்துவந்த அஜித்குமார் மீது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா, திருப்புவனம் போலீசு நிலையத்தில் நகை திருட்டு புகாரளித்தார். ஜூன் 27 அன்று நிகிதா தனது தாயுடன் மடப்புரம் கோவிலுக்கு சென்றதாகவும், தனது காரை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தக்கூறி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், கோவிலிருந்து திரும்பிவந்த போது வாகனத்தின் பின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த 9.5 சவரன் தங்க நகை மற்றும் ரூ.2,500 பணத்தை காணவில்லை என்றும் அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருப்புவனம் போலீசு நிலையத்தில் பல நகைத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், 27-ஆம் தேதி இரவே விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துக் கொடுமைப்படுத்தியது போலீசு. தான் நகையை திருடவில்லை என்று அஜித்குமார் கூறிய போதிலும், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர் தகுதிக்குரிய அதிகாரி மூலம் சிவகங்கை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆதிஷ் ராவத்திற்கு நிகிதா அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அன்றிரவே மானாமதுரை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தின் கீழ் உள்ள குற்றப்பிரிவு தனிப்படையைச் சார்ந்த ஆறு போலீசுகளிடம் அஜித்குமார் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழ்நாடு போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்ட காவலாளி அஜித்குமார்.

எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் கைது செய்யப்படுபவர்கள் 24 மணி நேரத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், போலீசு மிருகங்கள் அஜித்குமார் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல், ஏறக்குறைய 40 மணி நேரம் அவரை பல்வேறு இடங்களில் வைத்து இரும்புக்கம்பிகள், மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பைப்களால் உடல் முழுவதும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து துன்புறுத்தியுள்ளன. அவரின் பிறப்புறுப்பு, வாய், காதுகளில் மிளகாய் பொடியை கொட்டுவது; குடிக்கத் தண்ணீர் கேட்டால், தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து கொடுப்பது உள்ளிட்ட சகித்துக்கொள்ள முடியாத கொடூரங்களை அரங்கேற்றியுள்ளன. இதனால் வலிப்பு வந்து சிறுநீரில் இரத்தம் வெளியேறி துடிதுடித்து இறந்து போயிருக்கிறார், அஜித்குமார்.

அஜித்குமார் இறந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழத் தொடங்கிய பிறகுதான் போலீசு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதிலும், அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதை மூடிமறைத்து, போலீசிடமிருந்து தப்பிச் செல்லும்போது வலிப்பு வந்து இறந்துவிட்டதாக அயோக்கியத்தனமாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், அஜித்குமார் போலீசால் மிருகத்தனமாக தாக்கப்படும் காணொளியும் அவரது உடலில் 44 காயங்கள் இருப்பதை அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகி அஜித்குமார் போலீசால் பச்சைப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.

இச்சம்பவம் பெரும் பேசுபொருளான பிறகு, அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவர் என்பதும் இவர் தனது குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தியும் போலீசின் துணையுடனும் பலரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்ததும் அம்பலமானது. மேலும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அஜித்குமார் மீது நிகிதா பொய்யாக புகாரளித்திருப்பார் என்றும் நிகிதாவால் பாதிக்கப்பட்டவர்கள் அம்பலப்படுத்தினர். ஆனால், அப்பாவியான அஜித்குமாரை அநியாயமாக படுகொலை செய்துள்ளது போலீசு.

போலீசை பாதுகாக்கும் தி.மு.க. அரசு

அஜித்குமார் இறந்த உடனேயே போலீசும் அரசும் கூட்டு சேர்ந்துகொண்டு குற்றத்தை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. ஜூன் 28 அன்று மாலையில் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் மாலைதான் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் அஜீத்குமாரின் தம்பிக்கு கோயிலில் பணியும் வழங்குவதாக தி.மு.க-வினரும் போலீசும் பேரம் பேசி படுகொலையை மூடிமறைக்க முயன்றனர்.

ஆனால், அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட ஜூன் 28 அன்று மாலையே அவரின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் திருப்புவனம் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மடப்புரம் பகுதி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால், அஜித்குமார் படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவி தி.மு.க. அரசுக்கு கண்டனங்கள் வலுக்கத் தொடங்கின.

அஜித்குமாரின் படுகொலையை அலட்சியமாக கையாண்டுவந்த தி.மு.க. அரசு, மக்கள் போராட்டத்தையடுத்து வேறுவழியின்றி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆறு தனிப்படை போலீசுகளை பணியிடை நீக்கம் செய்து, அவர்களில் வாகன ஓட்டுநர் தவிர மற்ற ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது; அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியது; வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது தி.மு.க அரசு. ஆனால், சண்முக சுந்தரம், ஆதிஷ் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமலும் போலீசுக்கு அழுத்தம் கொடுத்த தலைமைச் செயலக அதிகாரி யார் என்பதை வெளிக்கொணராமலும் மூடிமறைத்து குற்றவாளிகளை பாதுகாத்தது.

தி.மு.க. ஆட்சியில் நடந்த கொட்டடிக் கொலைகள் குறித்து போலீசுதுறை அமைச்சரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதுவரை வாய்திறந்ததில்லை. ஆனால், தி.மு.க. அரசு மீதான மக்களின் அதிருப்தியை குறைப்பதற்காக, அஜித்குமார் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் ஸ்டாலின் ‘மன்னிப்பு’ கேட்டார்; அஜித்குமாரின் குடும்பத்திற்கு மூன்று செண்ட் வீட்டு மனை பட்டாவும் அவரது தம்பிக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததைப் போலவே, தி.மு.க. ஆட்சியிலும் கொட்டடிப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 31 கொட்டடிப் படுகொலைகள் நடந்துள்ளதாக “மக்கள் கண்காணிப்பகம்” அமைப்பு கூறுகிறது. உண்மை நிலவரங்கள் இதை விட அதிகமாகவே இருக்கும்.

இப்படுகொலைகள் ஊடக வெளிச்சம் பெறுவதிலிருந்து திட்டமிட்டு தடுக்கப்படுவதால் அரிதினும் அரிதாக சில செய்திகள் மட்டுமே வெளியாகின்றன. அஜித்குமார் தவிர்த்த மற்ற கொட்டடிப் படுகொலைகளில், போலீசு மீது குற்ற வழக்கு கூட பதிவு செய்யாமல் அவர்களை தி.மு.க. அரசு பாதுகாத்து வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது.

அதேபோல, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் -பென்னிக்ஸை அடித்துப் படுகொலை செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையின் இறப்பிற்கு பிறகு அவரது மகனுக்கு போலீசு வேலை கொடுத்திருப்பது; நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 15 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற 17 கொலைகாரப் போலீசுகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மறுத்ததுடன், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது; பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை முன்னின்று பாதுகாத்த போலீஸ் கண்கானிப்பாளரான எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே துணை ஆணையராக நியமித்திருப்பது என அ.தி.மு.க. ஆட்சியில் கொடூர குற்றமிழைத்த போலீசுகளையும் தி.மு.க. அரசு பாதுகாத்து வருகிறது.

காவல்படை அல்ல, சட்டப்பூர்வ ரவுடிக் கும்பல்

தமிழ்நாடு போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்படுபவர்கள் அஜித்குமார், ஜெயராஷ்-பென்னிக்ஸ் ஆகியவர்களைப் போன்று சாதி, மத, வர்க்க ரீதியாக பின்தங்கியவர்களாகவே உள்ளனர். மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்களோ பணக்காரர்களோ போலீசால் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு நிகழ்வைக் கூட நாம் காண இயலாது. தங்களது அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகவும் பொய் வழக்குகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகவும் மிகக்குறைந்த தண்டனைக் கொண்ட குற்றச் செயல்களுக்காகவும் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து வருகிறது.

மேலும், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்கள் போலீசின் கொட்டடிச் சித்திரவதைகளால் உடலுறுப்புகள் சிதைக்கப்பட்டு தங்களின் அன்றாட தேவைகளுக்குக் கூட பிறரை சார்ந்திருக்கும்படி முடமாக்கப்படுகிறார்கள். போலீசு மிருகங்களிடம் சிக்கிக்கொள்ளும் பெண்கள் போலீசு நிலையத்திலேயே நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன. ஆனால், இச்செய்திகள் எந்த ஊடகங்களிலும் வெளியாகுவதில்லை.

மேலும், விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்து மாவுக் கட்டு போடுவதும், கழிவறையில் வழுக்கி விழுந்து அடிபட்டுவிட்டதாக திமிர்த்தனமாக பொய்யுரைப்பதும் தமிழ்நாடு போலீசுத்துறையில் இயல்பாக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட கைதிகளில் 300-க்கும் மேற்பட்டோரின் கை, கால்கள் உடைக்கப்பட்டிருப்பதாக யூ-டர்ன் (YouTurn) இணையதளம் கூறுகிறது.

மேலும், யூ-டர்ன் இணையதளத்தின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் 21 போலி என்கவுண்டர்கள் (Encounters) போலீசால் நடத்தப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் ‘தற்காப்புக்காக சுடுதல்’ என்ற ஒரே கதையே கூறப்படுகிறது. ஆனால், இந்த போலி என்கவுண்டர் மூலம் உண்மையான குற்றவாளிகளைப் போலீசு பாதுகாப்பது மட்டுமின்றி, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுவது போன்ற பொய்யான பிம்பத்தை மக்களிடத்தில் கட்டமைக்க முயல்கிறது. இதன்மூலம் யாரையும் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம் என்ற கட்டற்ற அதிகாரத்தை போலீசு நிறுவி வருகிறது.

இவ்வாறு போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது. தனது ஆட்சிக்கு எதிரான குரல்களை நசுக்குவதற்கும் மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்குவதற்கும் சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து சிறையிலடைப்பதற்குமான சட்டப்பூர்வ ரவுடிக் கும்பலாக போலீசை பயன்படுத்தி வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளுக்கு கூட நெருக்கடி கொடுக்கிறது.

போலீசுதுறை கிரிமினல்மயமாகி வருவதன் விளைவாக, முன்னர் கனிமவளக் கொள்ளையர்கள், சமூக விரோதிகளுக்கு மூளையாகவும் கூட்டாளியாகவும் செயல்பட்டுவந்த நிலை மாறி, தற்போது குற்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் கிரிமினல் கும்பலாக போலீசு மாறியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் கனிமவள-இயற்கைவள கொள்ளைக்கு எதிராகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு சுமத்தி ஒடுக்குவதுடன், திட்டமிட்டே பாதுகாப்பு வழங்காமல் அவர்களை கொலையுண்டு வருகிறது.

ஆதிக்கச் சாதி வெறியர்கள் போலீசுதுறைக்குள் திட்டமிட்டு புகுத்தப்படுவதால் தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதல்கள், படுகொலைகளில் போலீசு நேரடியாக ஈடுபடுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் பெரம்பலூரில் ஏட்டு ஸ்ரீதர் துணையுடன் தாழ்த்தப்பட்ட இளைஞர் மணிகண்டன் கழுத்தறுத்து கொல்லப்பட்டது; நெல்லையில் ஐ.டி. ஊழியரை போலீசு உதவி ஆய்வாளர்களின் மகன் சுர்ஜித் ஆணவப்படுகொலை செய்தது இதனை நிரூபிக்கின்றது.

அதுமட்டுமின்றி, பாலியல் வக்கிர புத்தி கொண்டவர்கள் போலீசுதுறையில் நிரம்பியுள்ளதால் அண்ணா நகர் சிறுமி பாலியல் வல்லுறவு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, விருத்தாச்சலம் மனநலம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை என அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரோதமாகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவுமே போலீசு செயல்பட்டு வருகிறது.

மாற்றுத் தீர்வு என்ன?

கொட்டடிப் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும், போலீசு சித்திரவதை எதிர்ப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்வுகளை முன்வைக்கின்றனர். ஆனால், கொட்டடிப் படுகொலைகள் பற்றிய செய்திகளே வெளிவராத சூழலில், கடுமையான தண்டனைகளும் புதிய சட்டங்களும் இப்பிரச்சினைக்கான தீர்வாகாது.

மேலும், கட்டமைப்பு ரீதியாகவே போலீசு, இராணுவம் உள்ளிட்ட அதிகார வர்க்க உறுப்புகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷின் காலனியாதிக்க காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த அதிகார வர்க்கக் கட்டமைப்புகள், 1947-ஆம் ஆண்டு போலி சுதந்திரத்திற்குப் பிறகு சிற்சில மாற்றங்களுடன் அப்படியே பெயர்த்தெடுத்து நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுடன், மக்களிடமிருந்து மேலும் அந்நியமாகி மக்கள்விரோதமாகிக் கொண்டிருக்கின்றன.

போலீசின் இந்த கட்டற்ற அதிகாரம் குறித்து தேர்தல் அரசியல் கட்சிகள் அறிந்திருந்த போதிலும், போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்பதுபோல மக்களிடத்தில் போலியான நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், போலீசு துறையை ஜனநாயக விழுமியங்கள் கொண்டதாக மாற்றாமல் மக்கள் மீதான போலீசின் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே, போலீசு பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் மக்கள் சேவையிலும் சமூகநலப் பணியிலும் ஈடுபட்டிருப்பதை கட்டாயமாக்க வேண்டும்; ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளில் செயல்பட்டுள்ளவர்கள், தொடர்பிலுள்ளவர்கள் போலீசு பணிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும்; போலீசு துறையை மக்கள் கண்காணிப்பின்கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட மாற்றங்களை போலீசு துறையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.

ஆனால், இந்தியாவில் பாசிசத்தை அரங்கேற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல், மக்களை மென்மேலும் ஒடுக்கி அம்பானி-அதானிகளின் கார்ப்பரேட் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்கு போலீசு கும்பலாட்சியை நிறுவுவதற்கு ஏதுவாக மூன்று குற்றவியல் சட்டங்களை கொண்டுவந்துள்ளது.

எனவே, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று கட்டமைப்பில்தான் மேற்கூறிய மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவர முடியும். எனவே, கொட்டடிப் படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி போராட்டங்களைக் கட்டியமைப்பதும், அப்போராட்டங்களை பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான பாதையில் வளர்த்தெடுப்பதுமே கொட்டடிப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே தீர்வு.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க