பிரிட்டிசார் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றியபோது வளம் நிறைந்த நீர்ப் பாசனமுள்ள விளைநிலங்களெல்லாம் ஒரு சில பார்ப்பன, வெள்ளாளப் பண்ணையார்களிடம் குவிந்திருந்தது. அப்பண்ணையார்கள் தங்கள் நிலங்களைப் பயிரிடுவதற்கான பண்ணையடிமைகளாக, பெரும்பாலும் பஞ்சமர்களாக அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பறையர் மக்களைத்தான் சுரண்டிக் கொண்டிருந்தனர்.
பிரிட்டிசார் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் கொண்டுவந்த மிராசி முறையானது, நிலவுடமையாளர்களாக இருந்த ஆதிக்கச் சாதி மிராசுதார்களுக்கே சாதகமாக இருந்தது. அதாவது, கிராமத்துக்குப் பொதுவாக இருந்த நிலங்கள் எல்லாம், பார்ப்பன, வெள்ளாள ஆதிக்கச் சாதியினருக்கும், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் வசமும் ஒப்படைக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு வரி கட்டும் பொறுப்பு மிராசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த நிலங்களைக் குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுக்கு வரியாகச் செலுத்துவார்கள்.
இந்நிலையில், தரிசு நிலங்களில் கூட பட்டியலின மக்களுக்கு உரிமை பறிக்கப்பட்டது. மிராசுதார்கள் சிறிதளவு நிலம் வைத்திருக்கும் பட்டியலின மக்களிடம் அதிகமாக வரி வசூலிப்பது, நிலத்துக்குத் தண்ணீர் மறுப்பது, மீண்டும் மீண்டும் வரி கட்டச் சொல்வது என அடாவடியாக நடந்துகொண்டனர். இதனால் ஏற்கெனவே சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வந்த பட்டியலின மக்கள், மேலும் பாதிப்புக்குள்ளாயினர்.
அதன் பின்னர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் த்ரெமென்கீர் என்பவர் “பறையர்கள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் பறையர் சாதி மக்கள் குறித்த நீண்டதொரு அறிக்கையைத் தயாரித்து, 1891-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார்.
பஞ்சமர்கள் (பறையர்கள்) மனிதர்களாக நடத்தப்படவும் சுயமரியாதையுடன் சுயமுன்னேற்றம் காணவும், வாழ்க்கைத்தரம் மேம்படவும் அவர்கள் நிலவுடைமையாளர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு முன்னதாகவே, திராவிட மகா ஜன சபை நிறுவனரும், “ஒரு பைசா தமிழன்” பத்திரிக்கை ஆசிரியருமான அயோத்திதாச பண்டிதர், கிருத்துவ மிஷனரி சபையைச் சேர்ந்த ஆடம் ஆண்ட்ரூ மற்றும் வெஸ்லியன் சபையைச் சார்ந்த வில்லியம் கௌடி ஆகிய மூவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான விவாதங்களைத் தொடங்கி வைத்திருந்தனர்.
ஆனால், த்ரெமென்ஹீரின் அறிக்கையை வருவாய்த்துறை ஏற்றுக்கொள்ளாமல் மிராசுகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டது. அதன் பின்னர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 1892, மே 16-ஆம் தேதி அந்த அறிக்கை விவாதத்துக்கு வந்தது. இதனையடுத்து, 1892-இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், பட்டியலின மக்களுக்கு நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் பட்டியலின மக்களான பறையர்களுக்கு 12 இலட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகளைக் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு இந்நிலங்களை யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடைமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோக் கூடாது; அதன் பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச் சார்ந்தவர்களிடம் விற்பதற்கான உரிமையே வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும் அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்திய அரசு, வருவாய்த்துறை பதிவேடுகளில், பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், புறம்போக்கு என்றும் அனைத்து விளைநிலங்களையும் வகைப்படுத்தியுள்ளது.
1950-க்குப் பிறகு, பூமி தான இயக்கத்தை மேற்கொண்ட வினோபா பாவே, இந்தச் சட்டப்படிதான் பட்டியலின மக்களுக்கு அரசின் மூலம் நிலங்களை வழங்கினார். 1960-களில் கூட்டுறவு முறையில் நிலங்கள் வழங்கப்பட்டதும் இதனடிப்படையில்தான்.
பஞ்சமி நிலங்களைப் பட்டியல் வகுப்பினருக்குத் தவிர பிற வகுப்பினருக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றமும் 2012-ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.
இவ்வாறு சட்ட ரீதியாக உரிமை நிலைநாட்டப்பட்டிருந்தும் பஞ்சமி நிலத்தின் இன்றைய உண்மை நிலை என்ன?
தற்போது தமிழ்நாட்டில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் பஞ்சமி நிலம்தான் இருப்பதாக நில நிர்வாகத்துறையின் அறிக்கை கூறுகிறது. மீதமுள்ள 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளதை பல்வேறு புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடிகிறது. பஞ்சமி நிலங்களை வேறுவகையில் மாற்றி ஆதிக்கச் சாதி பண்ணையார்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மொத்த பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில்தான் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 77 சதவிகித பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளன. இந்த நிலங்களை மீட்க தற்போது வரை பட்டியலின மக்கள் சட்டரீதியாகவும் களத்திலும் போராடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காரணை கிராமத்தில் 1994-இல் பஞ்சமி நில மீட்புப் போராட்டம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1994 அக்டோபர் 10-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் ஜான்தாமஸ், ஏழுமலை ஆகிய செயற்பாட்டாளர்கள் அரசின் அடக்குமுறையால் கொல்லப்பட்டனர்.
1996-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து பட்டியலின மக்களிடம் ஒப்படைப்பதற்கென அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்னர், பல ஆண்டுகள் கழித்து ஜனவரி 2011-இல் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பஞ்சமி நிலங்களை மீட்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்கள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் ஒரு குழு அமைத்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து குழு அமைத்தது.
அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன. உண்மையில் பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் எதுவும் மீட்கப்பட்டு பட்டியலின மக்களிடம் அரசினால் ஒப்படைக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
தமிழ்நாட்டில் இருக்கும் மத நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் எல்லாம் பஞ்சமி நிலங்கள் மீதுதான் எழுப்பப்பட்டுள்ளன. அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பஞ்சமி நிலத்தை வாங்கியது அதிகாரப்பூர்வமாக அம்பலமாகி, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கார்ப்பரேட்கள் சிப்காட் அமைப்பதற்குப் பஞ்சமி நிலங்களைக் கைப்பற்றுவதை எதிர்த்து மக்கள் போராடியதும் செய்திகளாக வெளிவந்துள்ளன.
10 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என்பது கடந்து போகும் செய்தி அல்ல. அது பட்டியலின மக்களின் உரிமைகள் எப்படிக் கேட்பாரற்று பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு முக்கிய சான்று.
இயல்பாகவே தலித் மக்கள் மீதான வெறுப்புணர்ச்சியை கொண்டுள்ள அரசு, பஞ்சமி நிலத்தை மீட்பது ஆதிக்கச் சாதி வாக்கு வங்கியை பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால் இதில் தலையிடுவதில்லை. இது பட்டியலின மக்களை அரசு எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதற்கு துலக்கமான சான்றாகும்.
இதனை வெறும் புறக்கணிப்பு என்று மட்டும் கடந்து சென்று விட முடியாது. ஒரு பக்கம் ஆதிக்கச் சாதியினர், அதிகார வர்க்கம், நிலவுடைமையாளர்கள், அரசியல் கொள்ளைக் கும்பல் பஞ்சமி நிலங்களை அபகரித்துக் கொண்டுள்ளதை ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் கார்ப்பரேட்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பஞ்சமி நிலங்கள் அரசின் துணையோடு அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளால் அபகரிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.
இது வெறும் அவதானிப்பு அல்ல. வக்ஃபு சொத்துகளை இஸ்லாமியர்களிடமிருந்து பறித்து, கார்ப்பரேட்டுகளுக்கு படையலிட பாசிச பா.ஜ.க. அரசு துடித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அவ்வாறு சட்டப்படியே கூட, வளர்ச்சி என்ற பெயரில் பஞ்சமி நிலங்கள் பறிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.
எனவே, பட்டியலின மக்களின் பஞ்சமி நில உரிமையை முழுமையாக மீட்பதற்கான களப்போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதும், அதனை பேசுபொருளாக மாற்ற வேண்டியதும் அவசியமான பணியாகும்.
அய்யனார்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram