ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு: தீவிரமடையும் சூழியல் நெருக்கடி!

ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர்.

0

மீபத்தில் ஜம்மு காஷ்மீரின் கதுவா (Kathua) மற்றும் கிஷ்த்வார் (Kishtwar) மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத்காடி, பாக்ரா ஆகிய இரு கிராமங்களில் ஆகஸ்ட்17 ஆம் தேதியன்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பெய்த கனமழையால் ஜோத்காடி கிராமத்தில் உருவான வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாக்ரா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தாய், மகள் என இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 போ் குழந்தைகள் என்பது மிகவும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் தகவல் அறிந்து இரு கிராமங்களுக்கும் சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில மீட்புப் படையினர் (SDRF), உள்ளூர் நிர்வாக மீட்புக் குழுவினருடன் இணைந்து பலரைப் படுகாயங்களுடன் மீட்டுள்ளனர். நிலச்சரிவினால் வீடுகளும், சாலைகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனா கிராமங்களுக்குச் செல்வதற்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டா்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று கதுவா மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


படிக்க: சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்


அதேபோல், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி (Chisoti) கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற மச்சைல் மாதா கோவில் (Machail Mata temple) கடல் மட்டத்திலிருந்து 2,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் செல்வதற்கு சஷோதி கிராமம் வரை மட்டுமே வாகனத்தில் செல்ல வேண்டும். அங்கிருந்து பாதயாத்திரையாக நடந்துதான் செல்ல வேண்டும். ஆனாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்குச் சென்று வருகின்றனர்.

தற்போதைய வருடாந்திர பாதயாத்திரை ஜூலை 25 ஆம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று வருடாந்திர யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பு பக்தர்கள் சிசோட்டி கிராமத்தில் உள்ள உணவுக் கூடங்களில் (லங்கர்கள்) உணவு சாப்பிட்டுக் கொண்டும், கடைகளில் தேநீர் குடித்துக் கொண்டும் இருந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாகப் பெய்த கனமழையால் செனாப் ஆற்றின் நீர்மட்டம் நொடியில் உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளும், உணவுக்கூடங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில மீட்பு படையுடன் (SDRF) உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினர் மருத்துவக் குழுவுடன் இணைந்து நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

இத்துயர சம்பவத்தில் குழந்தைகள், வயதானவர்கள் உள்பட 70 பேர் கை, கால்கள் உடைந்த சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் வாயில் மண் புகுந்ததால் மூச்சு விட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 110 பேர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

துயரச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில் “நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ராணுவ வீரர்கள் ‘ஓடுங்கள், ஓடுங்கள்’ என்று கத்தினர். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. எழுந்தவுடன் எல்லாம் தகர்ந்து போனது, பாலத்தைக் கடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர்,” என்றார்.

தீவிரமடையும் சூழியல் நெருக்கடி!

பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் மேகவெடிப்பு ஏற்படுகிறது. சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு என்று கருதப்படுகிறது. இந்த அளவிலான மழைப்பொழிவு திடீர் பெருவெள்ளத்தை ஏற்படுத்தி அதிக பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் உண்டாக்குகிறது.

கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தினால் இயற்கைச் சீற்றங்கள் தீவிரமடைந்துள்ளன. அதன் விளைவாகத்தான் காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மேக வெடிப்புகளினால் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மக்களின் நலன்களைப் பற்றியெல்லாம் பாசிச மோடி அரசு கவலைப்படுவதில்லை. மாறாக அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் நலன்களை பாதுகாக்கப்படுதற்காக காடுகளையும், மலைகளையும் கட்டற்ற முறையில் அழித்து சூழியல் நெருக்கடியைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையிலான மாற்றுத்திட்டத்தை முன்வைத்துப் போராடுவதே நமது முதன்மைப் பணியாகும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க