உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்

கல்லறை இடிக்கப்படுவதைக் கண்ட முஸ்லீம் மக்கள் அதைத் தடுக்க முயன்றபோது காவி குண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி வன்முறையை நடத்தியுள்ளனர்.

0

கஸ்ட் 11 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தின் அபு நகரில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் பழமையான கல்லறையை (mausoleum) காவி குண்டர்கள் இடித்து மத வன்முறையைத் தூண்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் சதூர் தாலுகாவில் அபு நகரில் நவாப் அப்துல் சமத்தின் பழமையான கல்லறை அமைந்துள்ளது. இக்கல்லறை அரசாங்க ஆவணங்களில் காஸ்ரா எண் 753 இன் கீழ் தேசிய சொத்து (Maqbara Mangi) என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ”அந்த கல்லறை கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது. கல்லறைக்குள் ஒரு தாமரை மலர் மற்றும் திரிசூலம், பரிக்ரம மார்க் (நடைபாதை) மற்றும் ஒரு கிணறு ஆகியன ஆதாரமாக உள்ளது. அதனை ஜன்மாஷ்டமிக்கு முன்னதாக புதுப்பித்து அழகுபடுத்த அனுமதிக்க வேண்டும்” என்று .சுமார் 15 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை ”மத் மந்திர் சன்ரக்ஷன் சமிதி” (Math Mandir Sanrakshan Samiti) அமைப்பு ஃபதேபூர் மாவட்ட நீதிபதிக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அனுப்பியுள்ளது.

அதன்பிறகு பாதுகாப்பிற்காக கல்லறை முன்பு போலீசார் தடுப்புகளை அமைத்தனர். ஆனால் பா.ஜ.க மாவட்டத் தலைவர் முகலால் சிங் “எங்கள் கோவிலின் வடிவம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டுள்ளது . சனாதன இந்துக்களாகிய நாங்கள் இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். தாமரை மலர்கள் மற்றும் திரிசூலங்கள் போன்ற தெளிவான அடையாளங்கள் உள்ளன. நாளை (ஆகஸ்ட் 11 அன்று) எந்த முறையிலும் கோவிலில் பிரார்த்தனை செய்வோம். காலை 9 மணிக்கு பூரி தாக்கூர் டாக் பங்களாவில் அணிவகுத்து பூஜை செய்ய சனாதனிகள் கூட வேண்டும்” என்று காவி குண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


படிக்க: உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையில் மதவெறிக்கு பலியிடப்படும் சிறுவர்கள்!


அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று காலை 11 மணியளவில் பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற மதவெறி அமைப்பின் தலைமையில் நூற்றுக்கணக்கான காவி குண்டர்கள் காவிக் கொடிகள், குச்சிகள், மரக் கம்பங்களுடன் போலீஸ் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்தனர். கல்லறையின் கூரை மீது ஏறி காவிக் கொடியை ஏற்றியும், சங்கினை ஊதியும், ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் ஆரத்தி எடுத்தும் குச்சிகளைக் கொண்டு கல்லறையின் மேற்பகுதிகளை இடித்தும், உள்ளே இருந்த கல்லறைகளையும் சேதப்படுத்தியும் அனுமன் சாலிசா ஓதியும் உள்ளனர் . இவை அனைத்தும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

கல்லறை இடிக்கப்படுவதைக் கண்ட முஸ்லீம் மக்கள் அதைத் தடுக்க முயன்றபோது காவி குண்டர்கள் அவர்கள் மீது கற்களை வீசி வன்முறையை நடத்தியுள்ளனர். வன்முறை எப்போது நடைபெறும் என்று காத்துக் கொண்டிருந்த போலீசார் வன்முறை நடந்த பின்னர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ஜ.க, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 10 பேர் மீதும், அடையாளம் தெரியாத 150 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஃபதேபூர் போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால் யாரும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு போலீஸ் பாதுகாப்புடன் மசூதிகள், கல்லறைகள் மற்றும் முஸ்லீம் மக்கள் மீது இதுபோன்ற திட்டமிட்ட தாக்குதல்களை உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க