23.08.2025
ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமையைப் பறிக்கும்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம்!
பத்திரிகை செய்தி
சென்னை தரமணி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, விடுதி வசதியை ஏற்படுத்தித் தராமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களை வஞ்சித்து வருகிறது, பல்கலைக்கழக நிர்வாகம்.
தமிழ்நாட்டில், மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் தொழில்துறை படிப்புகளில் சேர்வதை ஊக்குவிப்பதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.
இதில் கல்விக் கட்டணத்தின் கீழ், சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், நூலகக் கட்டணம், இணையக் கட்டணம், சமூக நிதி, வளர்ச்சி நிதி, சிறப்புக் கட்டணம், கணினி நிதி, கல்வி ஊடக சேவை நிதி, பல்கலைக்கழக கலை மற்றும் தொழில் சேவை நிதி, மாணவர் விபத்து மற்றும் மருத்துவ சேவை நிதி, பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கட்டணம், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் கட்டணம், கொடி நாள் நிதி ஆகியவை அனைத்தும் அடங்கும்.
விடுதிக் கட்டணத்தில், நுழைவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம், அடிப்படை வசதி கட்டணம், வளர்ச்சி நிதி, அறை வாடகை, மின்சார கட்டணம், பாதுகாப்பு நிதி மற்றும் மாதாந்திர உணவுக் கட்டணங்கள் அடங்கும்.
ஆனால், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகமோ, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட 2021-ஆம் ஆண்டு தவிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளாகவே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வழங்காமல் அவர்களை வஞ்சித்து வருகிறது. பழைய விடுதியில் இடமிருந்தும் இடமளிக்க மறுத்து வருகிறது. விடுதி வசதி இல்லாததால், கல்வி பயிலும் சூழலின்மை, பாதுகாப்புக் குறைபாடு போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு அம்மாணவர்கள் ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, விடுதி கிடைக்காத காரணத்தால் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்கும் சூழல் ஏற்படுகிறது. தனியார் விடுதிகளில் வழங்கப்படும் தரக்குறைவான உணவால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு கல்வி கற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதீத கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகளில், விடுதி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் பகுதி நேர வேலைக்குச் சென்று கட்டணம் செலுத்துகின்றனர். இதனால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தேர்வில் தோல்வியடைவதும் மாணவர்களிடையே இடைநிற்றலும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மாணவர்கள் பலமுறை எழுத்துப் பூர்வமாகவும் வாய்மொழியாகவும் நிர்வாகத்திடம் புகாரளித்தும், தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தின் செயலற்ற தன்மைக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம், தங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை என்று ஒருங்கிணைப்புக் குழுவையும் (convenor committee) அரசாங்கத்தையும் கைக்காட்டுகிறது.
இதனை கண்டித்து கடந்த ஜூலை 7 அன்று விடுதி வசதி வேண்டி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போராடும் மாணவர்களை நேரில் சந்திக்கக் கூட தயாராக இல்லாத ஒருங்கிணைப்புக் குழு, ஒரு மாணவரை மட்டும் சந்திக்க அனுமதித்து, அவர் முன்வைத்த கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியது.
இதனையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் இப்போக்கினை கண்டித்து, கடந்த ஆகஸ்ட் 5 அன்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாணவர் கழகம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக-பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி உரிமியைப் பறிக்கும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மட்டுமின்றி, ஆண்கள் விடுதி கட்டடமே பழுதடைந்திருப்பதாகக் கூறி கடந்த நான்காண்டுகளாக விடுதியில் மாணவர் சேர்க்கையை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம். ஆண்கள் விடுதியருகே நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளதாலும், விடுதி நீதிபதிகளுக்கு ‘இடையூறாக’ இருப்பதால் மாணவர்கள் சேர்க்கையை நடத்தவில்லை.
மறுபுறம், பழுதடைந்த கட்டடத்திற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, தற்போது விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறினால், விடுதியே காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கென விடுதியே கிடையாது என்ற நிலை உருவாகும்.
எனவே, இப்பிரச்சினையில் உடனடியாக சட்டத்துறை அமைச்சரும், அரசும் நேரடியாக தலையிட்டு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கீழ் படிக்கும் மாணவர்களுக்கான விடுதியையும், அனைத்து மாணவர்களுக்கான விடுதி வசதியையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசு கல்லூரி-பல்கலைக்கழக மாணவர்களும் விடுதி பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். சென்னைப் பல்கலைக்கழக மாணவிகளின் சேப்பாக்க விடுதி வளாகம் “தோழி விடுதி” கட்டுவதற்கு தாரைவார்க்கப்படுவது; கோடம்பாக்கம், இராயபுரம் முதுகலை ஆண் மாணவர்கள் விடுதிகள் மாற்று ஏற்பாடின்றி இடிக்கப்படுவது; ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்படுவது என விடுதி கட்டமைப்பே ஒழித்துக்கட்டப்பட்டு வருகிறது. இது, தி.மு.க. ஆட்சியில் தீவிரமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
மாணவர்களை, குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மாணவர்களை உயர்கல்வியிலிருந்து வெளியேற்றுகின்ற இந்த சமூக அநீதி நடவடிக்கையை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. சிதைக்கப்பட்டுவரும் விடுதி கட்டமைப்பை சரி செய்து, மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விடுதி கட்டமைப்பை உருவாக்கித்தர வேண்டுமென புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram