உமர் காலித்திற்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக டெல்லி உயர்நீதிமன்றம்!

மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட ஏழு காவி பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. ஆனால், எந்தவொரு குற்றமும் செய்யாத உமர் காலித் உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுப்பது, சனாதன விதிகளின்படியே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை நிரூபிக்கிறது.

பாசிச மோடி அரசால் ஊஃபா கருப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட ஒன்பது பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட ஏழு காவி பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. ஆனால், எந்தவொரு குற்றமும் செய்யாத உமர் காலித்  உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுப்பது, சனாதன விதிகளின்படியே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை நிரூபிக்கிறது.

இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுகின்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) கடந்த 2019-ஆம் ஆண்டில் பாசிச மோடி அரசு கொண்டுவந்தது. அதனை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் மையக்களமாக மாறியது.

நாடு முழுவதுமுள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை போல டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகமும் இப்பாசிச சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வகித்தது. ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு ஊக்கமாக வினையாற்றினர். மோடி அரசின் இச்சட்டம் எத்துணை கொடூரமானது என்பது குறித்து உமர் காலித் போராட்டக்களத்தில் தொடர்ந்து உரையாற்றி வந்தார். இப்போராட்டங்கள் பாசிச கும்பலை பீதியில் ஆழ்த்தின.

இதனையடுத்து, பெருகிவரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, பிப்ரவரி 24, 2020 அன்று டெல்லியில் அமைதி வழியில் நடந்துவந்த போராட்டத்தில் மதவெறி கும்பல் மூலம் திட்டமிட்ட கலவரத்தை நடத்தியது, மோடி-அமித்ஷா கும்பல். இஸ்லாமியர்களின் கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தியது. இக்கலவரத்தில் இஸ்லாமிய மக்கள் குறிவைத்து கொல்லப்பட்ட நிலையில், மொத்தம் 53 பேரை பாசிச கும்பல் படுகொலை செய்தது. 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


படிக்க: உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை


ஆனால், இக்கலவரத்தை நடத்தியதாக பொய்யாக முத்திரைக் குத்தி, மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு 18 பேரை ஊபா கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது பாசிச மோடி அரசு. அவர்களில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், காலித் சைஃபி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பிணையும் வழங்காமல் விசாரணையும் நடத்தாமல் டெல்லியின் திகார் சிறைக் கொட்டடியில் முடக்கி வைத்துள்ளது. ஒன்பது பேரின் தரப்பிலிருந்து பலமுறை ஜாமீன் கோரப்பட்டும் அதனை நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

சமீபத்தில், விசாரணை நீதிமன்றத்தில் ஒன்பது பேரின் தரப்பிலிருந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் ஒத்திவைத்தது. பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தில், உமர் காலித் உள்ளிட்ட ஒன்பது பேரும் ஜாமீன் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணை ஜூலை 9-ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “ஒன்பது பேரும் ஐந்து ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை விசாரணையும் தொடங்கப்படவில்லை. விசாரணைக்கு அதிக காலமாகும் என்பதால் தேவங்கனா கவிதா மற்றும் நடாஷா நர்வால் ஆகியோருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது. எனவே, சமத்துவத்தின் அடிப்படையில், மீதமுள்ள ஒன்பது பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இக்கலவரம் நன்கு திட்டமிடப்பட்ட சதி. உலக அளவில் இந்தியாவை இழிவுப்படுத்துவதற்காக டிரம்ப் இந்தியா வரவிருந்தபோது டெல்லி கலவரத்திற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது” என்று மாணவர்கள், செயற்பாட்டாளர்களை பயங்கரவாதிகளாக முத்திரைக் குத்தும் வகையில் வாதிட்டார்.

ஆனால், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர், “தங்களிடமிருந்து குற்றப் பொருள்களோ அல்லது பணமோ மீட்கப்படவில்லை. போலீசு குற்றம் சுமத்தியது போல் எந்த வகையான சதித்திட்டத்திலும் நாங்கள் பங்கேற்கவில்லை. எங்களின் பேச்சுக்கள் மற்றும் வாட்ஸ்-அப் குறுஞ்செய்திகள் அமைதியின்மைக்கு வழிவகுக்கவில்லை” என்று வாதத்தின் போது கூறினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதன்படி, செப்டம்பர் 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,“மேல்முறையீட்டாளர் உமர் காலித் 17.02.2020 அன்று அமராவதியில் உரையாற்றினார். 24.02.2020 அன்று போராட்டங்களை வலியுறுத்தினார். இது அமெரிக்க அதிபரின் அரசு வருகையுடன் ஒத்துப்போனது. எனவே, சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக 23.02.2020 மற்றும் 24.02.2020 ஆகிய தேதிகளில் வன்முறை கலவரங்களை ஏற்படுத்த வேண்டுமென்றே நேரம் ஒதுக்கப்பட்டது என்று மேல்முறையீட்டாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு தெரிவித்துள்ளதை எளிதில் ஒதுக்கி தள்ளிவிட முடியாது” என்று மோடி அரசின் ஊதுகுழலாக பேசினர்.

மேலும், “உமர் காலித் ஒரு பொது உரையில் “இன்குலாபி சலாம்”, “கிராந்திகாரி இஸ்திக்பால்” (புரட்சிகர வாழ்த்துகள்) என்ற சொற்களைப் பயன்படுத்தியது குற்றமாகும். ஏனெனில், உங்கள் பேச்சு அமைதியான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கலாம். ஆனால், நீங்கள் மறைமுகமாக வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறீர்கள் என்ற அனுமானம் உள்ளது. எனவே, உங்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது” என்று அனைவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து பாசிச கும்பலுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.


படிக்க: டெல்லி கலவரம் : உமர் காலித் கைது ! குறிவைக்கப்படும் அறிவுத்துறையினர் !


மோடி அரசானது உமர் காலித் உள்ளிட்டோர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான எந்தவித ஆதாரங்களையும் வெளியிடாமல் வார்த்தை ஜாலங்கள் மூலமாகவே வழக்கை நகர்த்திக் கொண்டிருக்கிறது. நீதிமன்றமும் உமர் காலித் உள்ளிட்ட ஆர்வலர்கள் போராட்டத்தில் என்ன பேசினர், அவர்கள் குற்றம் செய்தனரா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்துவதற்கு தயாராகவில்லை. இது, இந்தியாவில் நீதிமன்றங்கள் பாசிசத்தின் ஓர் அங்கமாக மாறி வருவதை துலக்கமாகக் காட்டுகிறது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக உமர் காலித் உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், உச்சநீதிமன்றமும் இத்தகைய தீர்ப்பை வழங்கவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்வலர்களை விடுவிக்க வலியுறுத்தி அனைத்து சமூக செயற்பட்டாளர்களும், ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும். அதுவே, உச்சநீதிமன்றத்தையும் நிர்பந்திக்கும்.

மேலும், பாசிச சட்டங்களுக்கு எதிராகப் போராடி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இச்செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியதும் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க