இயற்கைப் பேரிடர், அமெரிக்க பொருளாதாரத் தடை – இருமுனைத் தாக்குதலில் ஆப்கான்

குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

0

ந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் வறுமை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடாகும். ஏற்கெனவே 20 ஆண்டுகளாக அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரினாலும், தாலிபான்களின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கான் மக்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் பேரழிவிற்குள் தள்ளியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான ஜலாலாபாத் அருகே ஆகஸ்ட் 31- ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சுமார் (10 கி.மீ ஆழத்தில்) 6.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆழமற்ற நிலநடுக்கம் என்பதால் இது அதிக பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு மாகாணங்களான குனார், நாங்கர்ஹார் (Kunar and Nangarhar) மாகாணங்கள் பேரழிவைச் சந்தித்தன. அதிலும் செங்குத்தான மலை மற்றும் பள்ளத்தாக்குகளில் வசிக்கும் குனார் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிக்குச் செல்வதற்கான பாதை கரடு முரடாக உள்ளதால் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செவ்விதிற்குச் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் 2-ஆம் தேதி 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மலைகளிலிருந்து மண்ணும் பாறையும் சாலைகளில் விழுந்து பாதிப்புக்குள்ளான பகுதியில் உள்ள மக்களை மீட்பதற்கும், நிவாரணப் பொருட்களையும் கிராமங்களுக்குக் கொண்டு செல்வதற்கு மேலும் தடைகள் உருவாகின. அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்களால் இரண்டு மாகாணங்களும் தரைமட்டமாகி இடிபாடுகளாக மாறியுள்ளன.

இஸ்லாமிய உலகளாவிய நிவாரணம் (Islamic Relief Worldwide) என்ற பிரிட்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சில கிராமங்களில் கட்டட இடிபாடுகளில் சிக்கி மூன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் 98 சதவிகித கட்டடங்கள் அழிக்கப்பட்டும் சேதமடைந்தும் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

மேலும் நிலநடுக்கத்தால் 6,700க்கும் மேற்பட்ட வீடுகளை இழந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் திறந்தவெளியில் கூடாரங்கள் அமைத்து தங்கி வருகின்றனர். மேலும் குனாரின் நூர்கல் மாவட்டத்தில் வசிப்பவர்கள், மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சுற்றியுள்ள உயரமான நிலப்பகுதியான ஆற்றின் அருகே அல்லது திறந்தவெளியில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ளனர்.


படிக்க: ஆப்கான் பேரழிவு: அமெரிக்க அரசே முதன்மைக் குற்றவாளி


நிலநடுக்கத்தில் தன்னுடைய வீட்டை இழந்த குனாரைச் சேர்ந்த ஆலெம் ஜான் என்பவர் ”எங்களிடம் இருந்த அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. எங்கள் முதுகில் இருக்கும் இந்த ஆடைகள் மட்டுமே எஞ்சியுள்ளன,” என்று கூறினார். அவரது குடும்பத்தினர் தங்கள் உடைமைகளை அருகில் குவித்து வைத்துக்கொண்டு மரங்களுக்கு அடியில் அமர்ந்துள்ளனர். உள்நாட்டிலேயே அகதிகள் போன்று வாழவேண்டியது அம்மக்களின் துயர நிலையாக மாறிப்போயுள்ளது.

மேலும் நெருக்கமான கூடாரங்களில் மக்கள் தங்கியுள்ளது, பாதுகாப்பற்ற நீரைக் குடிப்பது மற்றும் முறையான, பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லாதது போன்றவை நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

முக்கியமாக சமூக வலைத்தளத்தில் வெளியான காணொளியில், மலைப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சில லாரிகள் மாவு மூட்டைகள் ஏற்றிக்கொண்டும், மற்றவை மண்வெட்டிகளுடன் ஆட்களை ஏற்றிக்கொண்டும் உயர்ந்த மலைச்சரிவுகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்குச் செல்கின்றன. ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத இடங்களில்  ஆயிரக்கணக்கான ராணுவ  வீரர்களை விமானம் மூலம்  கீழே இறக்கி மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது தாலிபான் அரசு.

குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இடிபாடுகளின் நடுவே தேடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் உயிரிழந்தவர்களை ஸ்ட்ரெச்சர்களில் சுமந்து சென்று, உதவி வரும் வரை காத்திருந்து கோடாரிகளைப் பயன்படுத்தி கல்லறைகளைத் தோண்டி புதைத்து வருகின்ற காட்சிகள் வெளியாகி இதயத்தை ரணமாக்குகிறது.

இந்நிலையில் ”நிலநடுக்கத்தால் 84,000 பேர் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்” என்று ஆரம்ப புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி ”மனிதாபிமானத் தேவைகள் பரவலாக அதிகரித்து வருகின்றன” என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (International Federation of Red Cross and Red Crescent Societies) எச்சரித்துள்ளது. மேலும் உயிர் பிழைத்தவர்களுக்கு வழங்குவதற்கான உணவு மற்றும் நிதி இன்னும் நான்கு வாரங்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளதாக ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் (UN World Food Programme) தலைவர் ஜான் அய்லீஃப் ( John Aylieff ) செப்டம்பர் 3 ஆம் தேதியன்று எச்சரித்திருந்தார்.


படிக்க: ஊட்டச்சத்து குறைபாட்டால் பரிதவிக்கும் ஆப்கான் குழந்தைகள்


உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக 4 மில்லியன் டாலர் நிதி உடனடியாக தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நெருக்கடி சர்வதேச ஆதரவின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் ஆப்கானியர்களுக்கு வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை உறுதி செய்வதற்காக, உயிர்காக்கும் நிவாரணங்களைக் கடந்து நன்கொடையாளர்கள் உதவ வேண்டும் என்று நார்வே அகதிகள் கவுன்சிலின் (Norwegian Refugee Council) ஜாகோபோ கரிடி (Jacopo Caridi) தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் “நிலநடுக்கம் ஒரு தெளிவான நினைவூட்டலாக இருக்க வேண்டும்; ஆப்கானிஸ்தானை ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடியை எதிர்கொள்ள விட முடியாது,” என்று தன்னுடைய அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இதற்குமுன்பாக 2023 அக்டோபரில் மேற்கு மாகாணமான ஹெராட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒரு வருடம் முன்பு, கிழக்கு மாகாணங்களான பக்திகா, பக்தியா, கோஸ்ட் மற்றும் நங்கர்ஹாரில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்கா, ஆப்கான் சீனாவிடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஆப்கானுக்கு நிதியளித்து வந்த உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை நிறுத்தியது. இதன் மூலம் அம்மக்களை வறுமையினால் பட்டினி போட்டு படுகொலை செய்து தன்னுடைய மேலாதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்ள நினைக்கிறது.

இதன் காரணமாகத் தீவிரமடைந்த நிதி நெருக்கடியால் பேரிடர் காலங்களில் உரிய நேரத்தில் மக்களுக்குத் தேவையான மருத்துவம், உணவு உள்ளிட்ட நிவார உதவிகள் கிடைக்காமல் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது அண்டை நாடான ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதானது நிதி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் இயற்கைப் பேரிடர்களாலும், மறுபுறம் அமெரிக்காவின் நிதிவெட்டு நடவடிக்கையாலும் ஆப்கான் மக்கள் இருமுனை தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது அது தீவிரமடைந்துள்ளது என்பதையே தொடர் பேரிடர் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க