பா.ஜ.க. ஆட்சி செய்யும் இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) முகமது ஃபர்ஹத் என்ற இஸ்லாமிய மாணவன் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்திலுள்ள தண்டியபூர் கிராமத்தை சேர்ந்தவர், முகமது ஃபர்ஹத். 23 வயதான இவர் ஐ.ஐ.எம். உதய்பூரில் எம்.பி.ஏ. முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த முகமது ஃபர்ஹத்தை அவரது சகோதரிகளே வளர்த்து, படிக்க வைத்துள்ளனர். முகமது ஃபர்ஹத் தினமும் தனது சகோதரிகளுடன் கைப்பேசியில் பேசிவந்த நிலையில், செப்டம்பர் 7 அன்று அவரிடமிருந்து அழைப்பு வராததால் சந்தேகமடைந்த சகோதரிகள், பலமுறை ஃபர்ஹத்தை தொடர்புகொள்ள முயன்றும் அவர் எடுக்கவில்லை.
இந்நிலையில், அன்று நள்ளிரவு சமீர் என்ற மாணவன் ஃபர்ஹத்தின் மூத்த சகோதரி சோயா கானை அழைத்து முகமது ஃபர்ஹத் வளாகத்தில் இறந்து கிடந்ததாகத் தெரிவித்துள்ளார். ஃபர்ஹத் செப்டம்பர் 6 அன்றிரவு விடுதியில் தூக்கிட்டு இறந்ததாக ஐ.ஐ.எம். நிர்வாகமும் போலீசும் தெரிவித்துள்ள நிலையில், ஏறக்குறைய ஒரு நாளுக்கு பிறகே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், நிர்வாகம் முறையாகத் தகவல் தெரிவிக்காமல் சக மாணவன் மூலம் தெரிவித்துள்ளது. இதுவே முகமது ஃபர்ஹத்தின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
மேலும், தகவல் தெரிந்தவுடன் ஃபர்ஹத்தின் சகோதரி சோயா கானும் ஐந்து உறவினர்களும் விமானத்தில் புறப்பட்டு மறுநாள் காலையே உதய்பூரைச் சென்றடைந்துள்ளனர். ஆனால், ஃபர்ஹத்தின் விடுதி அறைக்கு அவர்களை உடனடியாக அழைத்துச் செல்லாமல், பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடச் செய்து போலீசும் ஐ.ஐ.எம். நிர்வாகமும் மணிக்கணக்கில் அலைக்கழித்துள்ளது. மேலும், ஃபர்ஹத்தின் வகுப்பு தோழர்களுடனும் பேச விடாமல் தடுத்துள்ளது.
இதனையடுத்து, விடுதி அறையைப் பார்வையிட்ட மாணவனின் சகோதரி சோயா கான் கூறுகையில், “அறைக்குள், மின்விசிறியில் கட்டப்பட்ட ஒரு நைலான் கயிறு, ஈரமான துண்டு இருந்தது. அவரது புத்தகங்கள், உடைகள் மற்றும் காலணிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. மின்விசிறி நல்ல நிலையில், பிரச்சினை இல்லாமல் இருந்தது. அந்த அறையின் உயரத்தைப் பார்த்தால், ஒரு குழந்தை கூட தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் சகோதரர் உயரமாகவும் பெரியவராகவும் இருப்பார். அந்த மின்விசிறியில் அவர் தொங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தார்.
படிக்க: கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!
ஃபர்ஹத் தனது முதல் முயற்சியிலேயே 98 சதவிகித மதிப்பெண்ணுடன் சி.ஏ.டி. (CAT) தேர்வில் தேர்ச்சி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவரது சகோதரி, என் சகோதரர் இறப்பதற்காக ஐ.ஐ.எம். உதய்பூருக்குச் செல்லவில்லை. அவர் கனவுகள் மற்றும் உறுதியுடன் அங்கு சென்றார். வாழ்வில் லட்சியம் நிறைந்த அவர் எப்படி திடீரென்று தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், “எங்கள் ஃபர்ஹத் தனது உயிரை மாய்த்துக் கொள்ள எந்த காரணமும் இல்லை. இது ஒரு கொலை வழக்கு. ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உண்மையை மறைக்கின்றனர். இதனைத் தற்கொலை என்று புறக்கணிப்பதற்குப் பதிலாக, விடுதிக்குள் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஐ.ஐ.எம். நிறுவனம் தாமாக முன்வந்து விளக்க வேண்டும். நிர்வாகத்தின் இந்த மௌனத்தை நாங்க ஏற்க மாட்டோம். ஐ.ஐ.எம். போன்ற உயர்மட்ட நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவதில் பாதுகாப்பாக உணர முடியாது” என்று இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் அவலநிலையை சோயா கான் அம்பலப்படுத்தினார்.
மேலும், தற்போது வரை ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகம், மாணவனின் மரணம் குறித்தும் உறவினர்களின் குற்றச்சாட்டுகள் குறித்தும் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. மாறாக, விசாரணையே நிறைவடையாமலேயே, முகமது ஃபர்ஹத்தின் மரணம் தற்கொலைதான் என்று ஐ.ஐ.எம். உதய்பூர் இயக்குநர் அசோக் பானர்ஜி ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார். அதேபோல், கோவர்தன் விலாஸ் போலீசும் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவே தெரிவித்துள்ளது. மாநில மனித உரிமைகள் அமைப்பு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மையின மாணவர்களும் தலித் மாணவர்களும் மர்மமான முறையில் உயிரிழப்பதும், தற்கொலைக்குத் தள்ளப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக, பாசிச மோடி ஆட்சியில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்-கள் தலித், சிறுபான்மையின மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் கொலை கூடாரங்களாக மாறி வருகின்றன.
தற்போது, ஐ.ஐ.எம். ராய்பூரில் இஸ்லாமிய மாணவனான முகமது ஃபர்ஹத் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதையும் இதனுடன் இணைத்தே பார்க்க வேண்டியுள்ளது. அதற்கேற்றார் போலவே ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகமும் துளியும் வெளிப்படைத்தன்மை இன்றி இவ்விவகாரத்தை அணுகி வருகிறது. எனவே, முகமது ஃபர்ஹத்தின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு அவரது இறப்புக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுக்க வேண்டும். இச்சமயத்தில், முகமது ஃபர்ஹத்தின் மர்ம மரணம் குறித்து ஊடகங்கள் பெயரளவிற்குக் கூட வாய்திறக்காமல் இருப்பது அயோக்கியத்தனமானதாகும்.

சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











