ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் கர்நாடகத்தைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமான மகாராஷ்டிரத்திலும் தொழிலாளர் நலன் மற்றும் தொழிற்சாலை சட்டத்தைத் திருத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பது, உழைக்கும் மக்களை மேலும் கசக்கிப் பிழியும் முயற்சியே ஆகும். தொழிலாளர் உரிமைகளை, வாழ்வை ஒரு நூற்றாண்டு அதாவது ஆங்கிலேயர்களின் காலனிய காலத்துக்குத் தள்ளும் நடவடிக்கையாகும்.
கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழிலாளர் நலச் சட்டம் – 1948. மற்றும் தொழிற்சாலை சட்டம் – 2017 ஆகிய இரண்டு சட்டங்களிலும் இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
வேலை நேரத்தைக் கூட்டுவது, அதன் மூலம் ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தை அதிகரிப்பது, ஓய்வு இடைவேளைகளைக் குறைப்பது அல்லது நீக்குவது மிகைப்பணி நேரத்தைக் கட்டாயமாக்குவது அதற்கான ஊதியத்தைக் குறைப்பது (ஏற்கனவே மிகைப்பணி என்றால் இரு மடங்கு ஊதியம் என்பது விதிமுறை) போன்ற திருத்தங்கள் முன்மொழியப்பட்டு செப்டம்பர் 9 அன்று அவற்றுக்கான அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் நல்ல நோக்கத்தில் சர்வதேச மூலதனத்தை ஈர்ப்பதற்காக என்று உருவாக்கப்பட்ட மையப்பணிக் குழுவின் பரிந்துரைப்படியே இந்த சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக மகாராஷ்டிரா மாநில அரசு கூறுகின்றது.
தங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதன் மூலம் தங்கள் மாநிலத்து மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்குவதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்கிற ஒரே பொய்யைத்தான் எல்லா அரசுகளும் கூறிவருகின்றன.
உண்மை என்னவென்றால் இவை எல்லாமும் இந்திய மற்றும் சர்வதேச கார்ப்பரேட் முதலாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளேயாகும். தங்களின் வர்க்க நலன் என்கிற நிலையில் இருந்துதான் பா.ஜ.க மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் இந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருகின்றன.
படிக்க: சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!
தொழிலாளர்களை மேலும் இறுக்கிப் பிழியும் இந்தக் கொள்கைகளுக்கு தொழில் வளர்ச்சியை இலகுவாக்குவது (Ease of doing Business) என்று முதலாளிகள் விளக்கம் அளிக்கிறார்கள். இவற்றையே வேறு வார்த்தைகளில் மாநிலங்களுக்கிடையிலான தொழில் வளர்ச்சிக்கான போட்டியில் தங்கள் மாநிலமும் ஈடுபட்டிருப்பதாக அந்தந்த மாநில அரசுகளும் பெருமையுடன் கூறிக் கொள்கின்றன.
ஏற்கெனவே இதே தொழில் வளர்ச்சியைக் காரணமாகச் சொல்லித்தான் நிரந்தர வேலை என்பதை ஒழித்துக் கட்டி எல்லாத் துறைகளிலும் ஒப்பந்த முறை புகுத்தப்பட்டது. இன்றைய நிலையில் பல்வேறு பெயர்களில் இயங்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் எவருக்கும் 8 மணி நேர வேலை என்பது கிடையாது.
கிட்டத்தட்ட அனைவருமே 12 மணி நேரம் 14 மணி நேரம் என்று தொழிலின் நெருக்கடிக்கு ஏற்ப இழுத்த இழுப்புக்கு வேலை செய்ய வேண்டிய கொடுமையான வேலைச்சூழலில் வதைபட்டு வருகிறார்கள்.
இப்போது இந்த நிலைமைகளை அப்படியே சட்டச் சரத்துக்குள் கொண்டு வருகிறது அரசு. எட்டு மணி நேர வேலை, மிகை பணிக்கு இரட்டை ஊதியம், கட்டாய வார விடுமுறை, தேநீர் மற்றும் உணவு இடைவேளை போன்ற அனைத்தையும் சட்டப்படியே மாற்றி அமைக்கிறார்கள். அதாவது உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமை முறையை சட்டப்பூர்வமானதாக்குகிறார்கள் என்பதே உண்மை.
ஊழியர்களுக்கும் உரிமையாளர்களுக்குமான பிரச்சனைகளில் தேவையில்லாமல் ஒரு சார்பாக அரசு தலையிடக்கூடாது என்பது முதலாளிகளின் கோரிக்கை. அதை நிறைவேற்றித் தருவதே மாநில அரசுகளின் இந்த சட்டத் திருத்தம்.
நவீன கொத்தடிமை முறையை சட்டப்பூர்வமாகக் கொண்டு வருவதே இதன் நோக்கம். மற்றபடி வேலை வாய்ப்பு உருவாக்குகிறோம் வேலையின்மையை ஒழிக்கப் போகிறோம் என்பதெல்லாம் முழு பித்தலாட்டமே.
படிக்க: ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கை: பேச வேண்டிய பக்கங்கள்
கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது. மிகைப்பணி மூன்று மாதத்திற்கு 115 மணி நேரம் மட்டுமே என்றிருந்ததை (இது சில ஆண்டுகளுக்கு முன் 75 மணி நேரம் என்றிருந்தது) 144 மணி நேரம் என்று மாற்றியமைக்கப்படுகிறது.
இச்சட்டங்களைத் திருத்தி அமைத்திருப்பதுடன் இந்த தொழிலாளர் நலச் சட்டமே 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறிவிட்டது. அதாவது மகாராட்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 85 லட்சம் குறு, சிறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களில் வெறும் 56,000 நிறுவனங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். மற்ற பல இலட்சம் நிறுவனங்களின் தொழிலாளர் நலனுக்கென்று எந்த சட்டமும் கிடையாது. அதாவது அங்கெல்லாம் முதலாளி வைத்ததே சட்டம். தொழிலாளி விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் என்றாக்கிவிட்டது. அதாவது கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பொருத்தவரை ஆண்டு முழுவதும் 365 நாளும் உழைத்துக் கிடப்பதே கடமை அதுவே அவர்கள் வாழ்வு என்றாக்குகிறது புதிய சட்டத் திருத்தம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் அழிக்கப்படும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலைக் காப்பாற்றிக் கொள்ளவே அதன் தொழிலாளர்களோடு சேர்ந்து அரசை எதிர்த்துப் போராட வேண்டிய இன்றைய சூழலில் “உன் தொழில் நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்ள உன் தொழிலாளர்களை மேலும் சுரண்டிக் கொள்” என்று அரசே கூறுகிறது. இந்த அயோக்கியத்தனத்தை தொழிலாளி வர்க்கம் சகித்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறது.
எனவே, நிரந்தரப் பணிக்கு நிரந்தர ஊழியர் என்பதை நிலைநாட்டவும், நிரந்தரமற்ற தற்காலிக ஊழியம் என்பதை ஒழித்துக் கட்டவும், அனைவருக்கும் வேலை என்பதை உரிமையாக்குவதற்கும், குறு சிறு தொழில்களை, வணிகத்தைப் பாதுகாக்கவும் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடுவது காலத்தின் கட்டாயமும் இன்றைய தருணத்தின் தேவையும் ஆகும்.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram