“தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழில் (சிறப்பிதழ்) வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இது கட்டுரையின் முதல் பாகம்.
***
உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கும் இச்சமூகம் எந்த அளவிற்கு கடமைப்பட்டுள்ளதோ, அதனைவிட கூடுதலாக, கழிவுகளைத் தூய்மை செய்யும் தொழிலாளர்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. அத்தொழிலாளர்களின் வேலை நிலைமை ஜனநாயகமாக இருப்பதையும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் இந்தச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்.
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?
தூய்மைப் பணியாளர்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்தியா போன்ற ஜனநாயகமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத நாடுகளின் பெருநகரங்களின் உருவாக்கத்தையும் அதன் கட்டமைப்பையும் நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.
தூய்மைப் பணியாளர்கள் என்பவர்கள் அராஜகமான முறையில் வளர்கின்ற நகரங்களின் ஆக அனைத்துக் கழிவுகளையும் அகற்றுபவர்களாகவும் சுகாதாரக் கட்டமைப்பின் பெரும் சுமையைத் தாங்குபவர்களாகவும் விளங்குகின்றனர்.
மக்கள்தொகை அதிகரித்தல், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுதல், பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேற்றப்படுதல் ஆகியவற்றால் தீவிரமடைந்துவரும் நகரமயமாக்கல் என்பது அதன் இயல்பிலேயே அராஜகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் முன்னரே மக்கள் குடியேற்றம் செய்யப்படுவது அதன் இயல்பாக அமைந்துள்ளது.
இதனால், இந்திய நகரங்கள் என்பதே தொடர்ச்சியாக மறுகட்டமைப்பு செய்யப்படுவதாகவும் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் அமைந்துள்ளதை நாம் பார்க்க முடியும். இதனால், மலை போன்று கட்டடக் கழிவுகள் குவிவதையும் நாம் காண்கிறோம்.
இத்துடன், அதிகரித்துவரும் சமூக இடைவெளியானது, சமூக உற்பத்தியின் பெரும் பகுதியை மேட்டுக்குடி சமூகம் நுகர்வதற்கேற்ப இந்நகரங்கள் விரிவாக்கமும் நகர ஆதிக்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சமூகத்தின் இந்த மேட்டுக்குடி பிரிவின் மூலமாக, பெரும் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்துடன், நகர வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் குறைவான அளவே நுகர்கின்றனர். அதன் விளைவாக இன்னொரு பகுதி கழிவுகளும் சேருகின்றன.
முதலாளித்துவத்தின் இந்த அராஜகமான வளர்ச்சியானது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை வளர்த்துவிட்டு, அதனைக் கட்டுப்படுத்த துப்புக்கெட்டு நிற்பதைப் போன்று, அராஜகமான உற்பத்தியின் விளைவாக உருவாகும் கழிவுகளையும் மேலாண்மை செய்வதில் திறனின்றி நிற்கிறது.
மேலும், சமூகம் முழுவதும் அதிகரித்துவரும் நுகர்வுவெறி – குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் (Use and throw) வகையிலான பொருட்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்தல், சுற்றுச்சூழலுக்குக் கேடான நெகிழி போன்ற பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்தல், வகைவகையான நுகர்வுப்பொருட்கள் அதிகரிப்பு இவற்றின் காரணமாக, ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுடன் இணைந்த வகையில், நகரங்களின் கழிவுகள் மிகப்பிரம்மாண்டமாகப் பெருகுகின்றன.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.1 முதல் 2.3 பில்லியன் டன் நகர்ப்புறக் கழிவுகள் உருவாகின்றன என்று உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டிற்குள் இந்த அளவு 3.4 பில்லியன் டன் முதல் 3.8 பில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 62 மில்லியன் டன் குப்பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மிதமிஞ்சிய கழிவு உற்பத்தி, வசதி படைத்த முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமான கழிவு மேலாண்மை என்ற அராஜகமும் இத்துடன் இணைந்து கொள்கிறது. ஒவ்வொரு பகுதியின் ஆட்சியாளர்களின் தன்மைக்கேற்ப சமூகத்தின் பிற பிரிவு மக்களுக்கான சுகாதார மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அராஜகத்தின் மொத்த சுமையும் தூய்மைப் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதுதான் அவர்களது வாழ்நிலையை மிகவும் அவலம் நிறைந்ததாக மாற்றியுள்ளது.
நாட்டின் மையப்பகுதியாக கருதப்படும் தொழில் நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை அகற்றுவதற்காக அந்நகரங்களின் கடைக்கோடி விளிம்பில், எவ்வித பாதுகாப்புமின்றி, கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
நிலக்கரி சுரங்கங்களிலும் அணு உலைகளிலும் பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களைப் போல, மிக உயரமான கட்டடங்களில் அந்தரத்தில் கயிறுகளில் தொங்கிக்கொண்டு வேலை செய்யும் கட்டடத் தொழிலாளர்களைப் போல, மிக ஆபத்தான நிலையில் வேலை செய்பவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்.
எனினும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவான நிலையிலும் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய, அராஜகமான சுகாதாரக் கட்டமைப்பினால் சமூகத்தில் ஏற்படும் மொத்த அழுத்தத்தையும் தாங்குபவர்களாகவும் அவர்களே இருக்கின்றனர்.
எந்தவொரு நாட்டிலும் மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை உத்தரவாதப்படுத்துவதில் கழிவுகள் மேலாண்மை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், நமது நாட்டில் கழிவுகள் உற்பத்தியாவதிலும் அதனை அப்புறப்படுத்துவதிலும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கையாளும் வழிமுறைகளும் கொள்கைகளும் பெரும்பாலும் மக்கள் விரோதமாகவே இருக்கின்றன. கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் போதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு நிதி ஒதுக்குவதில்லை; போதுமான அளவு நவீனப்படுத்துவதில்லை; மேற்கொள்ளும் சில நவீனப்படுத்துதல்களும் கார்ப்பரேட் நலனிலிருந்தும் வேண்டாவெறுப்பான முறையிலுமே மேற்கொள்ளப்படுகின்றன.
கழிவு மேலாண்மையில் அரசு காட்டிவரும் அக்கறையின்மையால், பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும் சுகாதாரச் சீர்கேட்டாலும் பல்வேறு நோய்த் தொற்றுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களில் இந்தச் சீர்கேடுகளை முன்வரிசையில் நின்று எதிர்கொள்பவர்களாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்களின் நிலை மிகவும் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது.
அராஜகமான நகரமயமாக்கம்
அரசின் அலட்சியம்
பொது அறிவில்லாத பொதுமக்கள்
சாதி ஆதிக்க – ஆணாதிக்க மனநிலை
“மலம் அள்ளும் வேலையை நாங்கள் செய்யவில்லை என்றாலும் நகரத்தின் குப்பைகளில் மனித மலம், நாய், மாடுகள் போன்ற விலங்குகளின் கழிவுகளும் கலந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் நாங்கள் அள்ளுகிறோம்.”
“பயன்படுத்தப்பட்ட நேப்கின்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், குழந்தைகளின் டயப்பர்கள் என அனைத்தையும் சேர்த்தே அள்ளுகிறோம்.”
“திடக்கழிவுகளை அள்ளுவதுதான் எங்களது வேலை என்றாலும் சிறுநீர் கலக்கப்படாத திடக்கழிவுகள் மிகக்குறைவு.”
“உலர்ந்த கழிவுகளை சேகரிக்க வேண்டும்; குப்பைகளைப் பிரிக்க வேண்டுமென்று வழிகாட்டப்படுகிறது. ஐந்து நாட்கள், பத்து நாட்களாகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக் கழிவுகளில் வெளிப்படும் துர்நாற்றமும் அவற்றில் இருக்கும் சமையல் கழிவுகளும் மிகவும் அருவருப்பானவை.”
“மருத்துவக் கழிவுகள், ஆபத்தான ரசாயனக் கழிவுகள், குப்பைகளில் கொட்டப்படும் கண்ணாடித் துண்டுகள், உடைந்த பாட்டில்கள், துருப்பிடித்த கம்பிகள், துருப்பிடித்த தகரங்கள், உடைந்த பல்புகள் போன்ற அனைத்தும் குப்பைகளில் கலந்துள்ளது. அந்தக் குப்பையைத்தான் அள்ளவேண்டியுள்ளது.”
“டிரான்ஸ்பார்மர்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. அவற்றின் அருகிலேயே குப்பைகளைக் கொட்டுகின்றனர். அக்குப்பைகளைச் சேகரிக்கச் செல்லும்போது மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பலர், நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மேலும் பலர்”
“மழைக்காலங்களில் திடக்கழிவு, திரவக் கழிவு என்றெல்லாம் கிடையாது; சாக்கடைக் கழிவுகளையும் மலங்களையும் சேர்த்துதான் அள்ளுகிறோம்”
“எலி இறந்தாலும் தெருவில்தான், நாய் இறந்தாலும் தெருவில்தான். செத்துக் கிடக்கும் எலி, பூனை, நாய் முதல் கேட்பாரற்ற பிணங்கள் வரை, அவை அழுகி, புழுவைத்து எந்த நிலையில் இருந்தாலும் இறந்த உடல்கள் அனைத்தையும் நாங்கள்தான் அள்ளுகிறோம்.”
“தெருக்களில் முளைக்கும் புல்பூண்டுகள், மர விழுதுகள் முதல் அனைத்தையும் நாங்களே அகற்ற வேண்டும். சுடுகாடுகளிலும் இடுகாடுகளிலும் உள்ள குப்பைகளையும் அங்கே போடப்படும் இறந்தவர்களின் பொருட்களையும் நாங்கள்தான் அப்புறப்படுத்த வேண்டும்.”
“அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், திருவிழா, பண்டிகை என்றால் ஊருக்குத்தான் கொண்டாட்டம், எங்களுக்கு வேலைச்சுமை. திருவிழாவுக்கு முன்னதாக மருந்து போடுவது முதல், திருவிழா முடிந்து குப்பைகளை அகற்றுவது வரை அனைத்தையும் நாங்கள்தான் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, தீபாவளி குப்பைகளை அள்ளுவது என்பது ஆபத்தானதும் கூட.”
“மழை வெள்ளம் வந்தாலும் கொரோனா போன்ற நோய் தொற்றாக இருந்தாலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடங்கிவிடுவர். நாங்கள்தான் அந்த ஆபத்துகளை எதிர்கொண்டு வேலை செய்ய வேண்டும்.”
இவை, தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் வேலையின் கொடூரத் தன்மை மட்டுமல்ல, இவை அராஜகமான நகரமயமாக்கம், ஜனநாயகப்படுத்தப்படாத சமூகத்தின் இழிந்த நிலைக்கு சாட்சிகள்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களின் தூய்மைப் பணியாளர்கள் தெரிவிக்கும் இந்த பொதுவான அனுபவங்கள், உலகத்தின் நான்காவது பொருளாதாரம் என்று மார்தட்டிக்கொள்ளும் நமது நாட்டின் யோக்கியதையை எடுத்துக்காட்டுகிறது.
பராமரிப்பு இல்லாத பொதுக்கழிவறைகள் ஒருபக்கம், கழிவறைகளுக்கு வெளியே சிறுநீர், மலம் கழிக்கும் அராஜகம் இன்னொரு பக்கம்; பராமரிப்பு இல்லாத குப்பைத் தொட்டிகள் ஒருபக்கம், குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடாமல் கொட்டிவிட்டுச் செல்லும் அராஜகம் இன்னொரு பக்கம் என பொது இடங்களைப் பராமரிப்பதில் அரசின் அலட்சியமும் பொது அறிவு இல்லாமல் பொதுமக்கள் நடந்துகொள்ளும் அராஜகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தூய்மைப் பணியாளர்கள் மீதான சுமையாக மாறுகின்றன.
இதுபோல, மலம் அள்ளுதல், குப்பைகளை அள்ளுதல், சாக்கடை தூர்வாருதல், கொசு மருந்து அடித்தல், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல், குடிநீர் குழாய்களைப் பராமரித்தல், மழைநீர் வடிகால்களைப் பராமரித்தல், தேசிய நெடுஞ்சாலைகளைத் தூய்மை செய்தல் போன்ற பணிகள் ஒவ்வொன்றிலும் அரசின் அலட்சியங்கள், அராஜகமான நகர மேலாண்மை, பொது அறிவு இல்லாமல் மக்கள் கையாளும் வழிமுறைகள் அனைத்தையும் தூய்மைப் பணியாளர்களே எதிர்கொள்கின்றனர். இந்த துன்பங்களை விவரிக்கத் தொடங்கினால் அது பெரும் தொடர்கதையாக நீளும்.
‘கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றுவது’ என்பதற்குப் பதிலாக ‘கண்களுக்குத் தெரியாமல் மூடி மறைப்பது’ என்பதே ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இந்நிலையில், இத்தகைய பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பது கழிவு மேலாண்மையை மேலும், அபாயகரமான சூழலுக்குத் தள்ளுவதுடன் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காலங்காலமாக ஒடுக்கப்பட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை முற்றிலும் கைவிடுவதாகவும் அமைகிறது.
000
இவை அனைத்திலும் மக்களின் பொது அறிவில்லாத செயல்பாடு, அரசின் அலட்சியம் ஆகியவை மட்டுமல்ல, சாதி ஆதிக்க மனநிலை முக்கியமான பங்கு வகிக்கிறது. தாங்கள் வீசும் குப்பைகளை அள்ளுவதற்கு ஒருவர் இருக்கிறார், தான் கழிக்கும் மலத்தை அள்ளுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்ற மனநிலையும் அல்லது அது பற்றிய அக்கறையில்லாத உணர்வும் இந்நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, சாதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் தலித் மக்கள், கல்வி கற்க வாய்ப்பில்லாத நிலையில், வேறு தொழில் எதுவும் தெரியாததால் மீண்டும் மீண்டும் தூய்மைப் பணிகளுக்கே திரும்புகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பிற வகைகளிலும் குறிப்பிட்ட அளவு பிற சாதியினர் இப்பணிக்கு வந்தாலும் சாதி ரீதியாக இழிவானவர்கள் செய்யும் தொழிலாகவே இத்தூய்மைப் பணியானது சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது தூய்மை குறித்து அதிக அக்கறை கொள்ளும் ஒவ்வொருவரும் நகரங்களில் தமது வாழ்க்கைமுறையே தூய்மைப் பணியாளர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வதில்லை. இப்பணியை இழிவானதாகக் கருதும் மனநிலையும் சாதி ஆதிக்க மனநிலையும் இந்த உணர்வின்மைக்கு அடிப்படையான காரணமாக அமைந்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதில் அரசே முதல்நிலையில் இருக்கிறது. 2016-இல் சென்னை பெரு மழை வெள்ளப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவை, நெல்லூர் என தொலைதூரங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்களைக் குப்பை வண்டிகளில் அழைத்து வந்த கொடுமைதான் இதற்கு சான்றாகும். அத்தொழிலாளர்களுக்கு குப்பை வண்டிகளின் மூலமாகவே குடிநீரும் உணவுப் பொட்டலங்களும் வினியோகம் செய்யப்பட்டது. இவை ஊடகங்களில் வெளிவந்தபோதும், அரசு அதிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. இது, அரசின் அலட்சியம் மட்டுமல்ல, அரசிலும் அதிகார வர்க்கத்திலும் நிலவும் சாதியாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.
முக்கியமாக, நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களில் 77 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாவர். எனவே, தூய்மைப் பணியாளர்களின் உத்தரவாதமற்ற வாழ்க்கை நிலை என்பது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை மென்மேலும் விளிம்பு நிலையில் அழுத்தி வைப்பதற்கான பார்ப்பனிய சாதியாதிக்க கண்ணோட்டத்தை உள்ளடக்கியதாகும்.
000
நமது நாட்டின் தூய்மைப் பணியாளார்களில் பெரும்பான்மையினர் பெண்கள். அதிலும் மலம் அள்ளும் வேலையில் பெண்கள்தான் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கையினால் மலம் அள்ளும் முறையை ஒழித்துவிட்டதாக அரசுகள் கூறிக்கொண்டாலும் எல்லா இடங்களிலும் “பயோ கழிவறைகள்” அமைக்காமையே இதற்கு சிறந்த சான்றாகும். இத்துடன், பாதுகாப்பான கருவிகள் வழங்காமை, முறையாக கழிவறைகளை பராமரிக்காமை, நீரில்லாத கழிவறைகள் போன்றவை, கையினால் மலம் அள்ளும் பணியை தூய்மைப் பணியாளர்கள் மீது இன்னும் சுமத்திதான் உள்ளது. ஆகையால், தூய்மைப் பணியாளர்களில் கீழ் நிலையில் இருக்கும் பெண்களே, கையினால் மலம் அள்ளும் வேலையில் பெரிய அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் குறைந்த கூலி என்ற வகையிலும் தூய்மைப் பணியில் பெண்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். பணியிடங்களில் இப்பெண்கள் மீது தொடுக்கப்படும் ஆணாதிக்கப் பாலியல் துன்புறுத்தல்கள் மிக அதிகம். தலித்தாகவும் பெண்ணாகவும் தூய்மைப் பணியைச் செய்பவர்களாகவும் இருப்பதால், ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளையும் இப்பெண் தொழிலாளர்களே சுமக்கின்றனர்.

நச்சுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட
தூய்மைப் பணியாளர்கள்
“பொதுவில் திடக்கழிவுகளை அள்ளுவதற்கான கருவிகளை மட்டுமே எங்களுக்கு வழங்குகின்றனர். 2013 மனிதக் கழிவுகளை அள்ளும் தடைச் சட்டம் 44 வகையான பாதுகாப்புக் கருவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறது. ஆனால், நடைமுறையில் கையுறைகளைக் கூட முறையாக வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் கையுறைகள் கூட ஊசி குத்தினாலோ, பிளேடு கீறினாலோ, சேதமடைந்த கண்ணாடிகள் குத்தினாலோ உடனே கிழிந்து விடும் அளவிற்கு தரமற்றவையாக உள்ளன. அந்த ரப்பர் கையுறைகளே மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுபவையாக உள்ளன” என்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.
மற்றொருபுறம், அபாயகரமான தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகளும் முறையாக கையாளப்படுவதில்லை. நச்சுத்தன்மை வாய்ந்த, தோல் அரிப்பை உண்டாக்குகின்ற, வெடிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருட்கள், ஆபத்தான நோய்களை உண்டாக்கக்கூடிய மருத்துவக் கழிவுகள் ஆகியவை மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களால், முறையாக சுத்திகரிக்கப்படாத நிலையில் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதில் அரசு மருத்துவமனைகளும் அடக்கம் என்பது மிகப்பெரும் அவலநிலையாகும்.
பாம்புகள், பூரான்கள் மற்றும் ஆபத்தான பூச்சிகள் நிறைந்த சாக்கடைகளுக்குள் எவ்வித பாதுகாப்புமின்றி இறங்கி கழிவுகளை அகற்றி வருகின்றனர். இவற்றால் அன்றாடம் தூய்மைப் பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலை செய்து வருகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் மின்கசிவினால் தூய்மைப் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதிய படிப்பறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாத தொழிலாளர்கள் வெறும் கைகளால் குப்பைகளைக் கையாளும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னை கண்ணகி நகரில் வரலக்ஷ்மி என்ற தூய்மைப் பணியாளர் அதிகாலையில் தூய்மைப் பணி செய்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
2009-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, பணியில் இருக்கும்போதே இறந்த 1,244 சென்னை மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளுக்கு 2009-2010 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டது. இவ்வாறு இறந்தவர்களில் 924 பேர் தூய்மைப் பணியாளர்களாக இருந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது, தூய்மைப் பணியின் ஆபத்தை உணர்த்துகிறது.
இத்துடன், மருத்துவக் கழிவுகள் ஏற்படுத்தும் தொற்றுகள் தூய்மைப் பணியாளர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நமது நாட்டில் ஆண்டுதோறும் 2,71,000 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 90 சதவிகிதம் மட்டுமே முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் பொதுக் கழிவுகளுடன் கலக்கப்படுகின்றன. இவற்றில், 15 சதவிகிதம் ஆபத்தான கழிவுகளாகும். இது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்தான். உண்மை நிலை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இக்குப்பைகளைத் தரம் பிரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்கள் பல்வேறு ஆபத்தான நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நமது நாட்டில் குப்பைகளைக் கையாளும் பணியாளர்களில் 33,800 பேருக்கு எச்.ஐ.வி. தொற்றும், 1,70,000 பேருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்றும், 3,15,000 பேருக்கு மஞ்சள் காமாலை (ஹெபடைட்டிஸ் சி) தொற்றும் ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர். இவ்வாறு தீவிர நோய் தாக்கம் கொண்ட தொழிலாளர்கள் வேலை செய்ய இயலாமல் சிறிது காலம் வீட்டிலேயே முடங்கிப் போய், விரைவிலேயே மரணமடைந்து விடுகின்றனர்.
குடும்பச் செலவுகளை தாங்கி நிற்கும் இப்பணியாளர்களின் மரணம் இவர்களின் அடுத்த தலைமுறையை வேறு வழியின்றி இத்தொழிலுக்குள் ஆழ்த்துகிறது. ஒரு நச்சுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட இம்மக்கள் அதற்குள்ளேயே தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடித்துக் கொள்கின்றனர்; தலைமுறை தலைமுறையாக இப்பணியிலேயே உழல்கின்றனர்.
(தொடரும்…)
பாரி, தங்கம்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram