“தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழில் (சிறப்பிதழ்) வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இது கட்டுரையின் இரண்டாவது பாகம்.
***
மனிதக் கழிவுகளை மனிதர்களே
கையினால் அள்ளும் அவலம்
மேலே குறிப்பிட்டது போல, பெரும்பாலும் மலத்தை கையால் அள்ளும் நிலையில்தான் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிலைமைகள் அமைந்துள்ளன.
நகர்ப்புறங்களில் மிக சொற்பமான மக்களே போதிய சுகாதாரக் கட்டுமானங்களுடன் வீடுகளைக் கட்டுகின்றனர். நகரங்களில் கட்டப்படும் பல வீடுகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதியின்றி தெருக்களில் நிறுத்தி வைக்கும் வகையில்தான் பெரும்பாலான வீடுகள் கட்டப்படுகின்றன என்பது நகர விரிவாக்கத்தின் நிலைமையாகும். அது போலத்தான் கழிவுகள் மேலாண்மையும் குப்பை மேலாண்மையும் அமைந்துள்ளன.
புதிய குடியிருப்பு விரிவாக்கப் பகுதிகளுக்கு நீண்ட நாட்கள் கழித்துதான் பாதாள சாக்கடை கட்டுவது, குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவையும் அப்பகுதிகளின் எதிர்கால தேவைகளைக் கணக்கில் கொள்ளாமல், தற்காலிகமாக, சடங்கிற்காக மேற்கொள்ளப்படும் பணிகளாகவே இருக்கின்றன. அதனால்தான், பாதாள சாக்கடைகள், நிலத்தடி மின் கேபிள்கள், குடிநீர் குழாய்கள் போன்றவை அடிக்கடி தோண்டி மறுகட்டுமானம் செய்வது நடக்கின்றன.
இதனால், பல நேரங்களில் அனைத்து வகையான குப்பைகளும் கழிவுகளும் பொதுக்கழிவுகளுடனேயே கலக்கப்படுகின்றன. இந்த அராஜகம் அடிப்படை உழைக்கும் மக்கள் வாழும் பகுதியில் இன்னும் மோசமாக இருக்கின்றது. பொதுக் கழிப்பறைகள் கட்டப்படாத நிலையில் தெருக்களில் மலம் கழிப்பது, குப்பைகளில் சிறுநீர் கழிப்பது போன்றவை பெரு நகரங்களில் கூட இன்றும் தொடர்கிறது.
‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கிய வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி கூறுகையில், “சானிடேசன் இன்ஜினியரிங் (Sanitation Engineering) படிப்பும் அதற்கென தனியாக துறையும் இல்லாத இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மனிதக் கழிவுகளை அள்ளுபவர்கள் என்ற முடிவுக்கு வருவதே சரியாக இருக்கும்” என்கிறார். மனிதக் கழிவுகள் மட்டுமன்றி நாய்கள், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளின் கழிவுகளும் இதில் அடக்கம்.
மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான வரையறையை சட்டத்தை இயற்றியதன் மூலம் மாற்றிவிட்டதாகவும், எனவே, கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழித்துவிட்டதாகவும் ஒன்றிய, மாநில அரசுகள் தம்பட்டம் அடிக்கின்றன. இது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை கக்கூஸ் என்ற ஆவணப்படத்தில் திவ்யபாரதி அம்பலப்படுத்தியிருப்பார்.
2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நாடு முழுவதும் சுமார் 377 பேர் சாக்கடை மற்றும் மலக்குழிகளில் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டதன் மூலம் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரங்கள் இதனைவிடப் பல மடங்கு இருக்கும். 2023-2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 113 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பா.ஜ.க. ஆளும் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன.
கையினால் மலம் அள்ளுவதைத் தடுக்காத சட்டங்கள்,
கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்த கதை
நமது நாட்டில் பட்டியலின மக்களுக்கு முக்கியமான சட்டங்களாகக் கருதப்படும், சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1976 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆகியவை கையினால் மலம் அள்ளுவதைத் தடை செய்யவில்லை; தடுக்கவும் இல்லை.
இந்நிலையில்தான், 1980-களின் பிற்பகுதியில் உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், உலக நாணய நிதியம் ஆகியவை கல்வி, மருத்துவம், சாலை வசதி போன்ற அடிப்படை சேவைத் துறைகளைத் தனியார்மயமாக்க வேண்டுமென வளரும், பின்தங்கிய நாடுகளின் அரசுகளுக்கு உத்தரவிடத் தொடங்கின.
அதன் ஒரு பகுதியாக தூய்மைப் பணியை நவீனமயமாக்குவதற்கும் அதன் ஊடாக, தனியார்மயமாக்குவதற்கும் உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தன.
அதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக, கையால் மலம் அள்ளுபவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் (தடை) சட்டம் 1993 கொண்டுவரப்பட்டது. இது, சட்டப்பூர்வமாக கையினால் மலம் அள்ளுவதைத் தடை செய்வதாகக் கூறியது. எனினும், இந்தச் சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகளே மதிக்கவில்லை.
இந்நிலையில்தான், 2013-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், கையால் மலம் அள்ளுவோர் பணித்தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் கையினால் மலம் அள்ளுவதைத் தடுப்பது, தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களைக் கொடுத்தது.
அதன்பின்னர், 2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, 2014 அக்டோபர் மாதத்தில் “தூய்மை இந்தியா (சுவச் பாரத்) இயக்கத்தை”த் தொடங்கியது. இது, முதன்மையாக, பின்தங்கிய வடமாநிலங்களில் உள்ள கிராமப்புற மக்கள் மத்தியில் திறந்தவெளி மலம் கழிப்பதற்கு எதிரான பிரச்சாரமாக அமைந்தது. ஆனால், மோடி புகழ் பாடுதல், விளம்பரம் தேடிக்கொள்ளுதல் என்ற வகையில் இந்த இயக்கம் அமைந்ததே அன்றி, கையினால் மலம் அள்ளுவதையும், மலக்குழி மரணங்களையும் தடுக்கவும் இல்லை, குறைக்கவும் இல்லை.
மாறாக, நகராட்சிகள், மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகள், குறிப்பாக, கையினால் மலம் அள்ளும் வகையிலான தூய்மைப் பணிகள் ஒப்பந்த முறையில் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டன. அதுவரை மாநில அரசு, உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பின் கீழ் செயல்பட்டுவந்த தூய்மைப் பணியாளர்கள், காண்ட்ராக்ட் நிறுவனங்களால் சுரண்டப்பட்டதைத் தாண்டி இந்தச் சட்டம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தூய்மைப் பணிகள் அனைத்தும் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படலாகின.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட சட்டங்களில் வழங்கப்பட்ட அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றும் கடமையில் இருந்து அரசுகளும் அரசு நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டன. அதனால், மலக்குழி மரணங்கள், விபத்துகள் தொடர்பான பதிவுகள் அனைத்தும் கைவிடப்பட்டன. இழப்பீடுகள் வழங்குவதும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு என்றாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதும், பணியாளர்களின் பாதுகாப்பு, கையினால் அசுத்தங்களைத் தொடும் நிலைமையை தடுப்பது போன்றவற்றிற்காக அன்றி, இலாப நோக்கில்தான் மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டத்தில், ஒதுக்கப்பட்ட நிதியில் குறிப்பிட்ட அளவு கழிவறைகளைக் கட்டும் நோக்கத்தில் செலவிடப்பட்டதே அன்றி, மலக்குழி மரணங்களைத் தடுப்பதற்காகவோ, கையினால் மலம் அள்ளுவதைத் தடுப்பதற்காகவோ செலவிடப்படவில்லை.
தற்போது “தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0” அறிவிக்கப்பட்டு, அது 2025-26 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வர இருப்பதாகக் கூறியுள்ளது மோடி அரசு. இந்தத் திட்டத்திற்காக மட்டும் முதல் கட்டத்தைவிட இரண்டரை மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.1,41,600 கோடி ரூபாய் ஆகும். இதுவும் திறந்தவெளி மலம் கழிப்பதைத் தடுப்பது, கழிவறைகளைக் கட்டித் தருவது, பொதுக்கழிவறைகள் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், நவீனமயமாக்கம் என்ற பெயரில், தூய்மைப் பணிகளைக் காண்ட்ராக்ட்மயமாக்குவது மற்றும் கார்ப்பரேட்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கு இணையாக, 2023-இல் உச்சநீதிமன்றம், “பாதுகாப்புக் கருவி மற்றும் சுத்தப்படுத்தும் கருவிகளுடன் மனிதர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மலக்குழி சுத்தம் செய்யும் பணி அனுமதிக்கத்தக்கதே. அபாயகரமான தூய்மைப் பணி செய்பவரும் மற்றும் கையால் மலம் அள்ளுபவரும் மனித மலத்தைக் கையாள்கின்றனர் என்றாலும், இந்தச் சட்டம் அபாயகரமான தூய்மைப் பணிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கிறது; மற்றும் அத்தொழிலாளர்களின் மறுவாழ்விற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை இது வழங்காது” என்று ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கி, 2013 சட்டத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டது.
இதனால், இத்தனை செலவுகள் செய்தும், கடந்த 10 ஆண்டுகளில் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி 453 தொழிலாளர்கள் செப்டிக் டேங்க்-களை தூய்மைப்படுத்தும் போது இறந்துள்ளனர். இதில் கையினால் மலம் அள்ளும் பிற பணிகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களையும் கணக்கில் கொண்டால், மோடி அரசின் “தூய்மை இந்தியா இயக்கம்” யாருக்கானது என்பதை உணர முடியும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும்
நவீன கொத்தடிமைத்தனமும்
2014-இல் மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முன்னிலைக்கு வந்தன. இந்தியாவின் பெருநகரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு எந்தக் கட்சியாலும் சரியான மாற்றுத் திட்டங்களை முன்வைக்க இயலாததாலும், அதற்கான திறனும் உணர்வும் இல்லாததாலும் ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மோடி-அமித்ஷா கும்பல் முன்தள்ளியது, அதனை எதிர்க்கட்சிகளும் வரவேற்றன. இந்தியாவின் உள்கட்டமைப்பில் பெரும் மூலதனத்தை இடும் இத்திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிதும் வரவேற்றுப் பிரச்சாரம் செய்தன.
அதற்கு முன்பே, பெருநகரங்களில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குடியிருக்கும் சேரிப் பகுதிகளைக் கைப்பற்றி, அவர்களை பெருநகரங்களின் தொலைவிலிருக்கும் பகுதிகளுக்கு வெளியேற்றும் வேலையை செய்யத் தொடங்கியிருந்தன. அதனால், குடிசை மாற்று வாரியங்கள் மூலமாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
இப்போக்கை ஸ்மார்ட் சிட்டி திட்டமானது மேலும் தீவிரமான நிலைக்கு உயர்த்திக் கொண்டு செல்கிறது. கோவிட் பெருந்தொற்றின் போது இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. சமூகத்தில் உயர் வருவாய் கொண்ட 20 சதவிகித மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, அரசு வழங்கும் சட்டப்பூர்வ உரிமைகள் அனைத்தும் இந்த 20 சதவிகித வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு அரசின் சட்ட உரிமைகள் பொருந்தாது.
தொழில்நுட்ப வளர்ச்சியானது நகரத்தின் சேவைகளை சிறப்பாக வழங்கும் என்ற முதலாளித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படுகின்றன. அதற்கேற்ப, நகரக் கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தையும் வடிவமைக்கின்றன.
தெருக்களின் வசதி, பாதாள சாக்கடை வசதி, திடக்கழிவுகள் சேகரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், தண்ணீர் வினியோகம், மின்சாரப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறைகளில் மேற்கொள்வதற்கேற்ப புதிய இணையவழி பொருட்கள் (மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்கள்) உருவாக்கப்படுகின்றன. குப்பை அள்ளும் இயந்திரங்கள் உள்ளிட்ட பலவகை இயந்திரங்களும் வடிவமைக்கப்படுகின்றன. மேலும், நவீன நகரங்கள் எதிர்கொள்ளும் காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசுபாடுகளைக் கையாள்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்கும் நோக்கத்திலிருந்துதான் தற்போதைய பெருநகரங்கள், கிராமப்புற நகரங்களில் உள்ள அனைத்து சிக்கல்களும் கையாளப்படுகின்றன. சான்றாக, சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள், அதற்கு அருகில் குடியிருந்தனர். அந்தக் குடியிருப்புகளை அகற்றி நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் கண்ணகி நகருக்கு மாற்றியுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுக் கல்லூரிகள் நகரத்தின் மையப் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து சிறிது சிறிதாக அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு வருகின்றன. சாலையோரக் கடைகள், சிறுவியாபாரிகளின் கடைகள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் அகற்றப்படுகின்றன.
முழுமையான வடிவங்களில் இந்த ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படும் பொழுது தற்போதைய தூய்மைப் பணியாளர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் தேவைப்பட மாட்டார்கள். அதனால், அவர்கள் எதிர்க்காலத்தில் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கும் சமூகத்திற்கு ‘நெருக்கடி’, ‘ஆபத்துகளை’ ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கத்திலிருந்து இந்த புறநகர் குடியிருப்புகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
அதாவது, எதிர்காலத்தில், உயர் வருவாய் கொண்டவர்களுக்கான நகரமாக தற்போதைய நகரங்களை மாற்றுவது, ஸ்மார்ட் சிட்டிகளை அமைப்பது என்ற நோக்கத்திலிருந்து மட்டுமே தூய்மைப் பணிகளைக் கையாளும் முறைகளும் அணுகப்படுகிறது. மாறாக, தூய்மைப் பணியாளர்களின் நலனிலிருந்து அல்ல.
(தொடரும்…)
பாரி, தங்கம்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram