தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 3

நாக்பூர், இண்டூர், சண்டிகர், நவி மும்பை, பாஞ்சுகால், தானே, மைசூரு ஆகிய பெருநகரங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் அதனைக் கழற்றி வைத்துவிட்டு வேலை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அவர்கள் வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தினால், இந்த டிஜிட்டல் அடக்குமுறையை சகித்துக் கொண்டிருக்கின்றனர்.

“தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழில் (சிறப்பிதழ்) வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இது கட்டுரையின் மூன்றாவது மற்றும் இறுதிப் பாகம்.

***

தூய்மைப் பணியாளர்கள் கண்காணிப்பு:
டிஜிட்டல் அடக்குமுறை!

நகர்ப்புற கழிவு மேலாண்மை என்பது இன்றைய ஆட்சியாளர்களாலும் கொள்கை வகுப்பாளர்களாலும் தீர்க்க இயலாத பிரச்சினையாகும். இதனால், ஏகாதிபத்திய நிறுவனங்களால் முன் தள்ளப்படும் திட்டங்களை அப்படியே நமது நாட்டிற்குப் பொருத்துவதற்கு முயற்சிக்கின்றன. அந்தவகையில், நகர குப்பை மேலாண்மைக்கு அரசால் தற்போது ஏற்றிப்போற்றி செயல்படுத்தும் வழிமுறைதான், “ஸ்மார்ட் கழிவு மேலாண்மை” ஆகும்.

இதன் மூலமாக, பெருநகரங்களின் கழிவு மேலாண்மையைப் பல துறைகளாகப் பிரித்து அவற்றை தனிச்சிறப்புமயமாக்கி, அவற்றில் ஒவ்வொன்றிலும் நவீன இயந்திரங்களையும் டிஜிட்டல்மயமாக்கத்தையும் புகுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். கழிவு மேலாண்மையின் பிரச்சினைகளான, திட மற்றும் திரவக் கழிவுகளைக் குறைத்தல், அவற்றை அப்புறப்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் போன்ற ஒவ்வொரு அம்சத்தையும் முதன்மைப் பணிகள், துணைப் பணிகள் என பலவாறாகப் பிரித்து அவற்றை நவீனப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் பெருநகரங்களில் குப்பைகளைக் குறைப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள முறை என்பது, ஒரு நாளைக்கு இத்தனை கிலோ குப்பைகளைச் சேகரிக்க வேண்டும் என இலக்கு தீர்மானித்து, அந்த இலக்கிற்கு ஏற்ப தூய்மைப் பணியாளர்களை விரட்டிவிரட்டி வேலைவாங்குவதாகும். இதனை அயல்பணி மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடுவது, அவற்றின் மூலமாக, தூய்மைப் பணியாளர்களைக் கண்காணித்து வேலை வாங்குவது போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியதாகும்.

இந்த வகையில், சமீப ஆண்டுகளாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஒரு வழிமுறைதான் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் (Smart Watch) மூலமாக தூய்மைப் பணியாளர்களைக் கண்காணிப்பதாகும்.

நாக்பூர், இண்டூர், சண்டிகர், நவி மும்பை, பாஞ்சுகால், தானே, மைசூரு ஆகிய பெருநகரங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இதனை அணிந்து கொண்டுதான் வேலைக்குச் செல்ல வேண்டும். அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்றுவிட்டார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இதிலிருக்கும் கேமரா எந்த நேரத்திலும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக, வேலையை முடித்த பின்னர், அந்த இடத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இதனால், அவர்களின் தனியுரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் எந்நேரமும் இந்த கேமரா இயங்குவதால், அதனை அணிந்து கொண்டிருப்பது பெண் தொழிலாளர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும், அவர்களால் அதனைக் கழற்றி வைத்துவிட்டு வேலை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அவர்கள் வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தினால், இந்த டிஜிட்டல் அடக்குமுறையை சகித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனினும், இதன் விளைவு மிகவும் மோசமானது. வேலை நேரங்களின் போது தொழிலாளர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள்; அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டுவிடும். இது தொழிலாளர்களுள் ஒருவரை மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்திவிடும். இதனால், தொழிலாளர்கள் ஒருவரின் நல்வாழ்வு, சமூகம் மற்றும் தன்னைப் பற்றிய உணர்வுகளிலிருந்தும் கூட அந்நியப்படுத்தி விடுகிறது. அவர்களது வேலை நிலைமைகளில் உருவாக்கப்படும் மனிதாபிமானமற்ற நிலைமையும் கண்காணிப்பு உணர்வும் இயல்பாகவே, தொழிலாளர்களை மனித நேயத்திலிருந்தே விலக்கிவிடுகின்றன. சாதி அமைப்பு மறைமுகமாக நிலைநாட்டப்படுகிறது. இது அரசின் கண்காணிப்பால் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இதனால், எதிர்காலங்களில் தொழிலாளர்கள் தமது உரிமையைக் கோருவதற்கான உணர்வையும் அமைப்பாக இணையும் வாய்ப்பையும் தடுக்கிறது. மேலும், அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தொழிலாளர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைச் செலுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது.

இதுதான், டிஜிட்டல்மய அடக்குமுறையாகவும் வெளிப்படுகிறது.

சண்டிகர் மாநகராட்சி இந்த முறையை 2019-லேயே அறிமுகப்படுத்திவிட்டது. மோடியின் தூய்மை இந்தியா – டிஜிட்டல் இந்தியா என்பது தூய்மைப் பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ள நவீன அடிமை விலங்கு என்பதை இது உணர்த்துகிறது.

000

2014-இல் மோடி-அமித்ஷா கும்பல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்மார்ட் சிட்டிகள் குறித்துப் பேசியது. ஆட்சிக்கு வந்த பின்னர், 2020-க்குள் நூறு ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படும் என்று அறிவித்து பல லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அக்கும்பல் அறிவித்த காலம் முடிந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் முன்வைத்த திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்ற நேர்மையான பரிசீலனையை அக்கும்பலிடம் எதிர்பார்க்க முடியாது. இதைப்போல இக்கும்பலால் முன்வைக்கப்பட்ட “ஸ்மார்ட் கழிவு மேலாண்மை” (கழிவுகளைக் குறைத்தல், அவற்றை அப்புறப்படுத்துதல், மறுசுழற்சி செய்தல்…) என்பதும் அனைத்து வகையிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.

கார்ப்பரேட் கும்பலின் கொள்ளை அதிகரித்திருப்பதையும் தூய்மைப் பணியாளர்களின் பணி நிலைமையும் வாழ்க்கை நிலைமையும் மேலும் கொடியதாக்கியிருப்பதையும் கடந்து இவை வேறெதையும் சாதிக்கவில்லை.

மக்கள் நலனை முதன்மைப்படுத்தாத, குறைந்தபட்ச ஜனநாயக விழுமியங்கள் அற்ற, கார்ப்பரேட் கொள்ளையை மட்டுமே இலக்காகக் கொண்ட “ஸ்மார்ட் கழிவு மேலாண்மை”, “ஸ்மார்ட் சிட்டி”, “உள்கட்டமைப்பு வளர்ச்சி” போன்ற நாசகாரத் திட்டங்களை முறியடிப்பதும் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து முன்னேறுவதும் சாதியத்தையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் எதிர்க்கின்ற ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

தனியார்மயத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள்
எதிர்கொள்ளும் சவால்கள்

ஒன்றிய, மாநில அரசுகளோ, நகர மயமாக்கல், தொழில்துறை வளர்ச்சி, அந்நிய மூலதன ஈர்ப்பு உள்ளிட்ட கார்ப்பரேட் நலைனையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த வளர்ச்சிப்போக்கின் தன்னியல்பான அடுத்தகட்ட அபாயம்தான் கழிவு மேலாண்மையை தனியார்வசம் ஒப்படைப்பதாகும்.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கே இன்னும் கழிவு மேலாண்மை பற்றிய போதுமான கொள்கைகள் இல்லாத நிலையில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட கழிவு மேலாண்மையை தனியார்வசம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானதாகும். பாசிச பா.ஜ.க. ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் இந்த அம்சத்தில் தனியார்மயத்தை போட்டி போட்டு அமல்படுத்தி வருகின்றன.

அராஜகமான நகரமயமாக்கல் காரணமாக குப்பைகள் தெருக்களில் குவியத் தொடங்குகின்றன. அந்நகரங்களைத் தூய்மை செய்வதற்கு மாறாக, ஒரு நாளைக்கு எத்தனை டன் குப்பைகள் அள்ளப்பட வேண்டும் என்ற இலக்கிலிருந்து தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், நகரத்தை சுத்தம் செய்வது என்ற இலக்கு மாறி, கணக்கு காட்டுவதற்காக குப்பைகளை எடைக்கணக்கில் அள்ளுவதாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னையில் இராம்கி என்ற தனியார் நிறுவனமானது கான்கிரீட் கழிவுகளையும் சேர்த்து எடைக்காக கணக்கு காட்டும் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய போலித்தனமான தூய்மைப்படுத்தலுக்கும் கடுமையான சுரண்டலுக்கும் மத்தியில் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

தனியார்மயத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் சொல்லொணா துயரத்தை சந்திக்கின்றனர்.

  1. பணிப் பாதுகாப்பின்மை மற்றும் ஆபத்தான பணிச்சூழல்:

தனியார் நிறுவனங்கள் வேலை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் பணியாளர்களை நியமிக்காமல் மிகக் குறைவான பணியாளர்களையே பணியமர்த்துகின்றன. இதனால், தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அத்துடன் பயிற்சியற்ற தொடக்கநிலை ஊழியர்களை பணிக்கமர்த்துவதன் மூலம் கொள்ளை இலாபம் அடிப்பதையே இலக்காக கொண்டுள்ளன. இதனால், ஆபத்தான சூழல்களில் விழிப்புணர்வின்றி பணிசெய்யும் பரிதாபகரமான நிலைக்கு தூய்மைப் பணியாளர்கள் தள்ளப்படுகின்றனர்.

  1. பொருளாதார மற்றும் சமூக ரீதியான ஒடுக்குமுறை:

பொருளாதார ரீதியாக விடுதலை பெற்ற எத்தனையோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சாதி இழிவை துடைக்க வழியின்றி அதன் கொடூரங்களை இன்னும் தங்களது தோள்களில் சுமந்து வருகின்றனர். சமீபத்தில், நெல்லையில் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது இதற்கு சான்றாதாரமாகும். மாதம் ஒரு இலட்சம் சம்பளம் வாங்கும் டி.சி.எஸ். (TCS) நிறுவனத்தில் பணிபுரியும் ஐ.டி. ஊழியரான கவின் போன்றோருக்கே இன்னும் சமூக விடுதலை என்பது பகல் கனவாக இருக்கிறது.

இந்நிலையில், அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத மிகக் குறைவான ஊதியத்திலும் பணிப்பாதுகாப்பின்றியும் இருத்தி வைப்பதானது இப்பணிகளில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கான கல்வியையும் வேலைவாய்ப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

  1. உயிர் மற்றும் உடல் ரீதியான பாதுகாப்பின் மீதான அச்சுறுத்தல்:

தனியார் நிறுவனங்கள் இலாபத்தையே தங்களது முதன்மை இலக்காகக் கொண்டிருப்பதால் ஆபத்தான நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் மேலாண்மை செய்வதற்குப் போதுமான, நவீன கருவிகளை பயன்படுத்தாமல் குறைந்தக் கூலியில் வேலைகளை செய்யும் பணியாளர்களையே ஈடுபடுத்துவர்.

  1. சங்கம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுதல்:

தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை தனியார் நிறுவனங்கள் மறுக்கின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமைகளை போராடிப் பெறுவதற்கான எவ்வித ஜனநாயக வாய்ப்புகளையும் வழங்குவதில்லை.

  1. சூழலியல் சீர்கேடு:

நகரக் கழிவுகள் என்பவை நெகிழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், மின்சாதனக் கழிவுகள், வெடி மருந்துகள், உயிரி கழிவுகள் போன்ற பல்வேறு தன்மையான கழிவுகளை உள்ளடக்கியவை. இவற்றை முறையாக தரம் பிரித்து மறுசுழற்சி மற்றும் அப்புறப்படுத்துவதற்கு விரிவான கட்டமைப்புகள் தேவை.

இவற்றை இலாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் நிறுவனங்களால் நிச்சயமாக பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள இயலாது. பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த மேற்கொள்ளும் வழிமுறை என்பது எரியூட்டுதலும், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள், நிலங்களில் கொட்டிவைப்பதுதான். இவை மிகப்பெரும் அளவிலான சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குகின்றன.

  1. வசதி படைத்தவர்களுக்கான சேவையாக
    தூய்மைப்பணி மாற்றப்படும் அபாயம்

தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் இடங்களின் தன்மை, அங்கு கொட்டப்படும் குப்பைகளின் தன்மைக்கு ஏற்ப குப்பை சேகரிப்புத் தொட்டிகளை ஏற்படுத்துவதில்லை. அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்கள் வாழும் இடங்களை முற்றிலும் புறக்கணிக்கின்றன. இவை, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சூழலியல் சீர்கேட்டையும் நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்துகிறது. மற்றொருபுறம் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் இத்தகைய பகுதிகள், நகரம் முழுவதிலும் உள்ள தெருநாய்களின் நிரந்தர வசிப்பிடமாக மாறுகின்றன. இதனால், இத்தகைய பகுதி மக்களே பெரும்பாலும் தெரு நாய்க்கடிக்கு ஆளாகின்றனர்.

சென்னையின் பல மண்டலங்களில் தூய்மைப் பணிகளை செய்வதற்கு ஒப்பந்தமிட்டுள்ள இராம்கி நிறுவனம் மேற்கொண்ட தூய்மைப் பணிகள் தொடர்பாக, 13-01-2017 தேதியிட்ட “டெக்கான் கிரானிக்கல்” நாளிதழில் வெளியான விவரங்கள் இவற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இராம்கி நிறுவனமானது சாதாரண ஏழை எளிய மீனவ மக்கள் வாழும் பகுதிகளில் 50 சதவிகிதமும் வசதி படைத்த மேட்டுக்குடியினர் வாழும் பகுதியில் 90 சதவிகிதமும் தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தது. மற்றொருபுறம், குப்பை நிரப்பும் கிடங்குகளும் மற்றும் எரியூட்டும் இடங்களும் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

மாற்றும் தீர்வும்

மனுநீதி நேரடியாக ஆட்சியிலிருந்த காலத்தில் குலத்தொழில் முறை என்பது அக்கால சமூகத்தால் திணிக்கப்பட்டும் நிர்பந்திக்கப்பட்டும் வந்தது. ஆனால், சட்டத்தின் ஆட்சி எனப்படும் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பல்வேறு போராட்டங்களின் மூலம் பெரும்பாலும் குலத்தொழில் முறை சட்ட ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், தூய்மைப் பணி என்பது மட்டும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் மேற்கொள்ளும் தொழிலாகவே இன்னமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை பொருளாதார ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பரிசீலிப்பது பொருத்தமற்றதாக இருக்கும்.

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், ஆதித்தமிழர் கட்சி தலைவர் அதியமான் போன்றவர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கக் கூடாது, இத்தொழிலில் இருந்து விடுபடுவதுதான் சரியானது என்கின்றனர். இவ்வாறு சொல்லும் தலைவர்கள் இத்தொழிலில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை முன்வைப்பதில்லை. உத்தரவாதமான வாழ்க்கை முறைக்கான கோரிக்கையை முன்வைக்காமல் இதிலிருந்து மீண்டுவரவேண்டும் என்று சொல்வது அம்மக்களை நிர்கதியாக கைவிடுவதற்கு சமமாகும். இந்த இழிநிலையிலிருந்து மீண்டுவருவதற்கான பொறுப்பை அவர்கள் தலையிலேயே சுமத்திவிடுவதுமாகும்.

முக்கியமாக, தூய்மைப் பணி என்பது மலம் அள்ளும் தொழிலில் இருந்து வேறுபட்டதாக இந்தியாவில் இல்லை. மேலும், தூய்மைப் பணி என்பது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உத்தரவாதமான வாழ்க்கைக்கான தொழிலாகவும் இல்லை. எனவே, ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டுவரும் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களைத் தவிர வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வெகு சொற்பமாகவே இத்தொழில் செய்வதற்கு முன்வருகின்றனர்.

மற்றொருபுறம், ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு இந்த இழிநிலையிலிருந்து மீண்டு வருவதற்கான சமூக அடித்தளத்தை திட்டமிட்டே ஆளும் அரசுகள் உருவாக்கித் தருவதில்லை.

பெரும்பாலும் வீட்டிற்கு ஒருவர் மீண்டும் இத்தொழிலை மேற்கொள்ளும் நிலையில்தான் இருக்கின்றனர். போதிய படிப்பறிவு இன்றியும் வேறு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையிலும் மீண்டும் அவர்கள் இந்தத் தொழிலையே மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகையால், முதலாவதாக, தூய்மைப் பணியும் மலம் அள்ளும் பணியும் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும். கையால் மலம் அள்ளும் பணியை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அத்தொழில் இயந்திரமயமாக்கப்பட வேண்டும்; நவீனமயமாக்கப்பட வேண்டும்.

“சானிடேசன்” தொடர்புடைய துறைகள் உருவாக்கப்பட்டு அதற்கான தனித்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்க வேண்டும். நகரக் கட்டுமானங்களை மறுசீரமைக்க வேண்டும்.

கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அனைத்து பிரிவு மக்களுக்கும் ஊட்டப்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் தூய்மைப் பணி என்பது இழிவான தொழில் என்ற கருத்து மாறும்.

தூய்மைப் பணியை நிரந்தர அரசு வேலையாக மாற்ற வேண்டும். “சர்வீஸ் கோட்டா” இருப்பது போன்று தூய்மைப் பணி செய்யும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் பிள்ளைகளுக்கு தொழில் கல்விகளிலும் வேலைவாய்ப்பிலும் தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும், வேறு சுயதொழில்கள் மேற்கொள்வதற்கான கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களை இந்த சமூக அவலத்திலிருந்து விடுபட வைக்க இயலும்.

எனினும், மோடி-அமித்ஷா தலைமையிலான ஆட்சியானது பார்ப்பனிய சித்தாந்த ஒடுக்குமுறைகளையும் கார்ப்பரேட் ஒடுக்குமுறைகளையும் இணைந்தே மேற்கொண்டு வருகிறது. அத்துடன், ‘விஸ்வகர்மா யோஜனா’ போன்ற திட்டங்களின் மூலம் மீண்டும் குலத்தொழில் முறையை சட்டப்பூர்வமாக அமல்படுத்தும் இலக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும், பெயரளவிலான ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்பட்டு வரும் சூழலில், இந்தக் கோரிக்கைகளை நிலவுகின்ற அரசியல் அமைப்பு கட்டமைப்புக்குள் நிறைவேற்றிட முடியாது. மாறாக, உழைக்கும் மக்களுக்கும் பாசிசத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் ஜனநாயகத்தை வழங்குகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசில்தான் மேற்கொண்ட கோரிக்கைகளை முழு நிறைவாக நிறைவேற்றிட முடியும். அந்தவகையிலான போராட்டங்களுக்கு தூய்மைப் பணியாளர்களை அணிதிரட்டிப் போராடுவது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

இத்துடன், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டும் போதும் அசுத்தம் செய்யும் போதும் அத்தகைய நிகழ்வுகளைக் காண நேரிடும் போதும் சமூகத்தின் உறுப்பினர் என்கிற வகையில் ஒவ்வொருவரும் தமது சமூகப் பொறுப்பை உணர வேண்டும். அதுதான், அரசின் அலட்சியப் போக்கிற்கு எதிரான போராட்டத்திற்கு அடித்தளமாக அமையும்; சாதியாதிக்க, ஆணாதிக்க மனநிலையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதை நோக்கி முன்னேற உதவும்.


பாரி, தங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க