எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமான விபத்து: அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்பது உயிர்கள்!

எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

0

ண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் வாயலூரில் உள்ள எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (Special Economic Zone) ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) மூலம் 1,320 மெகாவாட் (2×660 MV) திறன் கொண்ட மிக உய்ய அனல் மின் நிலையம் (Super Critical Thermal Power Station) அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளில் 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது 70 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று (30.09.25) அனல்மின் நிலையத்திற்கு முகப்பு அமைப்பதற்காக 45 அடி உயரத்தில் இரும்பு கம்பிகளால் சாரம் அமைத்து முகப்பு அமைக்கும் வேலையில் 10க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென்று சாரம் சரிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே நான்கு தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். தற்போது இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், “எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், சுமார் 45 அடி உயரத்தில் அனல் மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில், வடமாநில தொழிலாளர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் ஈடுபட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என்று அரசின் மீது எந்தவித தவறும் இல்லை என்ற வகையில் அலட்சியமாகப் பேசியுள்ளார்.


படிக்க: கடலூர் செம்மங்குப்பம் இரயில் விபத்து: தனியார்மயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதே தீர்வு!


தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வேலை தேடி வருகின்றனர். இதனைத் தன்னுடைய லாப வெறிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிற தனியார் நிறுவனங்களும் அரசும் கட்டுமானப் பணிகள், சாலை மற்றும் ரயில் பாதைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது போன்ற உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற வேலைகளில் குறைந்த கூலிக்கு இத்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல வேலைக்கு அமர்த்துகின்றன.

ஆனால் அத்தகைய தொழிலாளர்கள் தங்குவதற்கு உரிய வசதிகளை தனியார் நிறுவனங்களும் அரசும் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. தங்களின் வறுமையின் காரணமாக தகரங்கள் மூலம் கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பற்ற முறையில் தங்களது நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் இத்தொழிலாளர்கள்.

இவ்வாறு அதீத சுரண்டலுக்கு ஆளாகும் இத்தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதில்லை.

தற்போது எண்ணூரில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல்-இன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அரசு அலட்சியத்துடன் நடந்து கொண்டதன் விளைவாகவே அநியாயமாக ஒன்பது உயிர்கள் பறிபோயுள்ளன. ஆனால் இதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாத ஒன்றிய மாநில, அரசுகள், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை மட்டும் அறிவித்துள்ளன.

எனவே அரசு இதற்கு முழு பொறுப்பெடுத்துக் கொண்டு தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களை ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்துகின்ற தனியார் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலமே தொழிலாளர்கள் பலியாவதைத் தடுக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க