கேரளா: கழிவுநீர் தொட்டியில் விசவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி!

கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

0

கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு – கேரளத்தின் எல்லைப் பகுதியில் உள்ள தேனி மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கேரளாவிற்குச் சென்று கட்டட வேலை, தேயிலைத் தோட்ட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் அங்கேயே தங்கி வேலை செய்தும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் 30 அன்று இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் உள்ள தனியார் விடுதியின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இவர்களில் ஜெயராமன் தேனி மாவட்டத்தின் கம்பத்தைச் சேர்ந்தவர். மைக்கேல் என்கிற செல்வம் மற்றும் சுந்தரபாண்டியன் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் இறங்கிய மைக்கேல் நீண்ட நேரமாக மேலே வரவில்லை. இதனையடுத்து, ஒப்பந்ததாரர் ஜெயராமனும் உள்ளே இறங்கியுள்ளார். அவரும் மயக்கமடைந்ததால் இருவரையும் காப்பாற்றுவதற்காக சுந்தரபாண்டியன் உள்ளே இறங்கியுள்ளார். ஆனால், மூன்று பேரும் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

இதனையடுத்து, உணவக நிர்வாகம் போலீசு மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மூன்று பேரையும் தொட்டிக்குள் இருந்து மீட்டு கட்டப்பனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் தொட்டிக்குள் விசவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிழைப்புக்காக வேலைப் பார்க்கச் சென்ற இடத்தில் மூன்று தொழிலாளர்கள் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் குடும்பத்திற்கு அதிர்ச்சியையும் பெரும் இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மூன்று தொழிலாளர்களை நம்பியிருந்த அவர்களின் குடும்பம் தற்போது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

இத்தொடர் நிகழ்வுகள் தமிழ்நாடு – கேரளா இரு மாநில அரசுகள் மலக்குழி மரணங்களைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை உணர்த்துகின்றன. குறிப்பாக, கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு கையுறை, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் அரசும் தனியார் நிறுவனங்களும் வழங்குவதில்லை. அற்பக் கூலிக்கு தொழிலாளர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.


படிக்க: திருப்பூர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் தொடரும் மலக்குழி மரணங்கள்!


மேலும், கைகளால் மலம் அள்ளுவதையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டு “கைகளால் மலம் அள்ளுவோர் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013” (The Prohibition of Manual Scavenging And their Rehabilitation Act, 2013) அன்றைய காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி, கைகளால் மலம் அள்ளுவது 06.12.2013 முதல் தடை செய்யப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டது. இந்நாளிலிருந்து, எந்தவொரு தனிநபரும் தனியார் நிறுவனமும் கைகளால் மலம் அள்ள எவரையும் ஈடுபடுத்தவோ பணியமர்த்தவோ கூடாது; சட்டத்தை மீறுபவர்கள் மீது இச்சட்டத்தின் பிரிவு 8-இல், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இச்சட்டம் மலக்குழியில் இறங்கும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவும் இல்லை; மலக்குழியில் விசவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாவதைத் தடுக்கவும் இல்லை. நாடு முழுவதும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுகின்ற அவலநிலை அரசின் அனுமதியோடு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. மலக்குழியை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துகின்ற தனியார் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வது, அபராதம் விதிப்பது போன்ற எந்தவித நடவடிக்கையையும் அரசு எடுப்பதில்லை.

இதன் விளைவாக, தனியார் நிறுவனங்கள் குறிப்பாக, உணவகங்கள் மலக்குழியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை ஈடுபடுத்தி அவர்களைக் கொன்று வருகின்றன. தற்போது இடுக்கியில் அரங்கேறியுள்ள சம்பவமும் இதன் நீட்சிதான்.

எனவே, மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும் அதனால் ஏற்படுகின்ற மலக்குழி மரணங்களைத் தடுப்பதற்கும் தேவையான இயந்திரங்களைக் கண்டுபிடிக்காமல் தவிர்த்து வருகின்ற அரசே இக்கொலைகளுக்கு முதன்மையான குற்றவாளி. எனவே, தூய்மைப் பணியாளர் உள்ளிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது உடனடி தேவையாக உள்ளது.

மேலும், கேரளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரு மாநில அரசுகளும் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலக்குழியை மனிதர்களை வைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி மூன்று பேரைக் கொன்ற தனியார் உணவகத்தின் உரிமையாளரைக் கைது செய்து உணவகத்தின் உரிமத்தையும் இரத்து செய்ய வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க