மதுரையில் தலித் இளைஞர் கொட்டடிப் படுகொலை

மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த தலித் இளைஞரான தினேஷ் குமார் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0

துரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த தலித் இளைஞரான தினேஷ் குமார் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அண்ணா நகர் போலீசு நிலையத்திற்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் – முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமார். இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 9 அன்று அதிகாலை 5 மணிக்கு தினேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த அண்ணாநகர் போலீசு ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையிலான தனிப்படை போலீசு, கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணை எனக் கூறி தினேஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர் குடிக்க தண்ணீர் கேட்டும் கொடுக்க மறுத்து இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, 9 மணிக்கு அண்ணா நகர் போலீசு நிலையத்திற்கு வந்து தினேஷ்குமாரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தந்தையிடம் போலீசுகாரர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு சென்று பார்த்த போது அங்கு தினேஷ்குமார் இல்லாததைக் கண்டு அவரது தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். தனது மகனை போலீசு எங்கு அழைத்துச் சென்றுள்ளது என வழக்கறிஞருடன் இணைந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், மதியம் 1 மணிக்கு தினேஷ்குமாரின் தந்தையை போலீசு நிலையத்திற்கு வரவழைத்த அண்ணா நகர் போலீசு, “தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே உள்ள போலீசு நிலையத்தில் வைத்து அண்ணா நகர் போலீசு துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்துவிட்டு அண்ணாநகர் போலீசு நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக போலீசு வாகனத்தில் ஏற்றிய போது தினேஷ்குமார் போலீசிடமிருந்து தப்பியோட முயன்று வைகை ஆற்றிற்குத் தண்ணீர் செல்லும் வண்டியூர் வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி இறந்துவிட்டார். பின்னர் அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்” என்று தங்களது படுகொலையை மறைப்பதற்கு தினேஷ்குமார் மீதே பழியைச் சுமத்தியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர் அண்ணாநகர் போலீசு தனது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றுவிட்டது என்று அம்பலப்படுத்தியுள்ளனர். தினேஷ்குமாரின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தினேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆய்வாளர் மற்றும் தனிப்படை போலீசுகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறி அண்ணாநகர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டனர். மதுரை கே.கே. நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், 1 மணிக்கு மீட்கப்பட்ட இளைஞரின் உடலை மாலை 5 மணி வரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறைக்குக் கொண்டு செல்லாததையும், உறவினர்கள் சென்ற பின்னரே கொண்டு சென்றதையும் அம்பலப்படுத்தினர். இது தினேஷ்குமார் போலீசால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.


படிக்க: சுதந்திரமாக சுற்றித்திரியும் பயங்கரவாதமும் சிறைக் கொட்டடியில் முடக்கப்படும் சமூக உணர்வும்!


ஆனால், ‘சமூக நீதி’ பேசுகின்ற தி.மு.க. அரசு தலித் இளைஞரைப் படுகொலை செய்த போலீசு ஆய்வாளர் பிளவர் ஷீலா, தனிப்படை போலீசுகளான காமு, நாகராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யவில்லை. மாறாக, படுகொலைக்குக் காரணமான போலீசுகாரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், வழக்கறிஞர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது அயோக்கியத்தனமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஜூலை மாதத்தில் உடுமலை அருகே புலி பல் வைத்திருந்ததாகக் கூறி பழங்குடியினரான மாரிமுத்து வனத்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, சித்திரவதைச் செய்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றுவிட்டு மாரிமுத்து குளியலறை குழாயில் (Shower pipe) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது போலீசு. அதனைப் போன்றே தினேஷ்குமார் படுகொலையிலும் கால்வாய் நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்று நாடகமாடியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் சிவகங்கையைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் போலீசால் அடித்தேக் கொல்லப்பட்டார். அதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அஜித்குமாரின் தாயை கைப்பேசியில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் ‘சாரி’ கேட்டார். இதனை தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் ஊதிப்பெருக்கிய நிலையில், அதன் பிறகு இரண்டு கொட்டடி படுகொலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பொதுவெளியில் அம்பலமாகாமல் போலீசு நிலையத்தில் கொல்லப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

முக்கியமாக, போலீசுகாரர்கள் பணியின் போது செய்யக்கூடிய குற்றங்களுக்கு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாதது, துறை ரீதியான நடவடிக்கையே எடுப்பது, அதற்கும் போராட வேண்டியிருப்பது என்பன போன்ற அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இன்னொருபுறம், மோடி அரசு கொண்டுவந்த மூன்று குற்றவியல் சட்டங்களின் மூலம் போலீசின் கைகளில் அதிக அதிகாரம் குவிக்கப்படுவதுடன் போலீசுதுறையில் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவலும் தீவிரப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் போலீசு + ஆர்.எஸ்.எஸ். கும்பலாட்சி நிறுவப்பட்டு நாடு முழுவதும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பாசிசமயமாகிவரும் இக்கட்டமைப்பிற்குள் போலீசின் கொட்டங்களை அடக்க முடியாது.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் போலீசு துறையிலும் உளவுத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆதிக்கச் சாதியினரின் ஊடுருவல் திட்டமிட்டுத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆகவே, தினேஷ்குமாரை படுகொலை செய்த போலீசுகாரர்களைக் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்; அவர்களின் வேலையை பறிக்க வேண்டும்; அவர்களிடம் ஒரு கோடி பறிமுதல் செய்து தினேஷ்குமாரின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்களும் ஜனநாயக சக்திகளும் போராட வேண்டும். இப்போராட்டங்கள் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான பாதையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க