தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது! | கவிதை

லங்கையின் நடுக்கும் குளிரில்,
நடுநிசியின்
பசி தின்னும் பொழுதில்,
எம் வயிற்றின் பசிக்காகவும்,
உம் நாக்கின் ருசிக்காகவும்,
மீன் கவ்விய வாடையுடன்,
கரையோரம் வலைகளைப் பின்னி
பழகிய கரங்கள் இப்போது,
வலியின் சொற்களை,
இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன்,
சிறைக் கம்பிகளுக்குள் இருந்து
பின்னி அனுப்பும்
தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது இது!

பெருங்கடலின் கர்ஜிக்கும் அலைகளில்
மிதக்கும் கச்சத்தீவு எல்லைக் கோட்டில்
சுருக்குக் கயிற்றில் தொங்கியபடி
நூறு நூறு மீனவர்கள்,
பிணங்களாய்!
எல்லையை அச்சுறுத்தும்
பயங்கரக் குறியீடாய்!

அலையின் ஓசை
அவ்வப்போது அழுகையின் ஓலமாகும்,
சிறைபிடிக்கப்பட்ட
மீனவக் குடும்பங்களின் கதறல்களால்;
கரையில் மட்டுமல்ல
கடலிலும் ஒலிக்கும்,
எங்களுக்காய் விம்மும்
கடல் தாயின் ஒப்பாரி நாதம்;
ஆழ்கடலின் துயர மடியில்,
கண்ணீர் வடிக்கும்
அவளின் அரவணைப்பில்,
கொத்துக் கொத்தாய்
கொல்லப்பட்டோரின் சடலங்கள்;
அவர்கள்,
ஆண்டாண்டு காலமாய்
இலங்கைக் கடற்படையின்
எல்லை மீறல் குற்றச்சாட்டில்,
சுட்டுக் கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்!

கண்ணை மூடிக் கொண்ட
ஒன்றிய – மாநிலத்தின்
கள்ள மௌனம் கடலில் கலக்க,
சுட்டழித்து,
சிறையில் கொடுமை தொடர,
எம் உயிர்கள் பறிக்கப்பட்டு,
உறவுகளின் கதறலும் கண்ணீரும்
கடலோடு கரைந்து விடுமோ?

இவ்வினாக்குறி
எங்களின் விடுதலைக்கான
துவக்கமாகட்டும்!
உங்கள் மனசாட்சியைத்
தட்டி எழுப்பி,
மௌனத்தை உடைக்கும்
சுத்தியலாகட்டும்!
உரிமைக்கான
எங்கள் கனவு நனவாகட்டும்!

இப்படிக்கு,
துயரத்தோடு தூது அனுப்பும்
உங்கள் மீனவன்!


பார்த்திபன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க