சீனாவில் கழுதையின் தோலிலிருந்து கிடைக்கக் கூடிய ஒருவகையான இரசாயனப் பொருளானது, பாரம்பரிய சீன மருத்துவத்துக்குப் பயன்படுகிறது. “ஈஜீயாஓ” (ejiao) என்று இந்த மருந்து அழைக்கப்படுகிறது.
கழுதைத் தோலிலிருந்து தயாரிக்கப்படும் பிசின் போன்ற ஒருவித ரசாயனத்துடன் இன்னும் சில மூலிகைகளையும் இன்னபிற மருந்துப் பொருட்களையும் கலந்து மாத்திரைகள் மற்றும் திரவங்களைத் தயாரிக்கின்றனர். சந்தையில் இவை மருந்துகளாகவும், அழகு சாதனப் பொருட்களாகவும் விற்கப்படுகின்றன. வறட்டு இருமல், இரத்த போக்கு, உடல் சோர்வு, இரத்த சோகை, புற்றுநோய்த் தடுப்பு முதலானவற்றுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், இந்த மருந்தின் பயன்பாடானது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு நம்பிக்கை அடிப்படையில் மக்கள் இந்த மருந்துகளை நாடிச் செல்கின்றனர். நமது நாட்டில் கூட கோமியம் புற்று நோய்க்கு மருந்து என்ற மூட நம்பிக்கை பரப்பப்பட்டு, பாட்டிலில் அடைத்து சந்தைப்படுத்தப்படுவதைப் போல!
பாரம்பரிய சீன மருத்தின் மீதான மக்களின் குருட்டு நம்பிக்கையை மூலதனமாக வைத்து, தமது விளம்பர சாகசங்களின் மூலம் இந்த மருந்தை வாங்கியே ஆக வேண்டும் என்ற நுகர்வு வெறியைத் தூண்டிவிட்டு, கோடி கோடியாய் ஆதாயமடையும் நோக்கத்துடன் சீன முதலாளிகள் இந்த மருந்து உற்பத்தியில் குதித்துள்ளனர். சீனாவில் பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு இந்த மருந்துத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. 2013 – 2016 ஆண்டுகளுக்கு இடையில் ஈஜீயாஓ மருந்து உற்பத்தியானது, 3,200 டன்களிலிருந்து 6,000 டன்களாக உயர்ந்தது. இது 2021-இல் 15,700 டன்களாக உயர்ந்து விட்டது. இந்த வேகத்தில் மருந்தின் தேவை அதிகரித்துச் சென்றால், 2027-இல் இது 18,000 டன்களாக அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் 1990-களில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன. மருந்துத் தேவைக்காக கழுதைகள் கொல்லப்படுவதைத் தொடர்ந்து, 2023-இல் 15 லட்சம் கழுதைகளே மிச்சமிருந்தன. ஆனால் சீன முதலாளிகளின் விளம்பர வித்தைகளினால் கிராக்கியானது தாறுமாறாக உயர்ந்து, இன்று ஏறக்குறைய 59 லட்சம் கழுதைத் தோல்கள் இந்தச் சீன மருந்துக்குத் தேவைப்படுகின்றன.
எனவே இலாபவெறி பிடித்த சீன முதலாளிகளின் நலன் காக்கும் சீன அரசானது, உலக அளவில் கழுதைகளை அல்லது கழுதைத் தோல்களை சட்டப் பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் இறக்குமதி செய்து வருகிறது. உதாரணமாக, சீன அரசானது பாகிஸ்தானிடமிருந்து பெருமளவில் கழுதைகளை இறக்குமதி செய்கிறது. இதனால் பாகிஸ்தானில் கழுதைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டு, ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கழுதைகள் சந்தைகளில் ஏலம் விடப்படுகின்றன. இப்போது இதுவும் போதாமல் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க கண்டத்து நாடுகளிலிருந்து பெருமளவில் கழுதைகளும் கழுதைத் தோல்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
படிக்க: அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை
நமது நாட்டில்கூட கழுதைகளின் பயன்பாடு மிக அதிகமானது. சலவைத் தொழிலாளர்களின் உற்ற நண்பன் கழுதை. சுமைகளைச் சுமந்து செல்வதில் கழுதைகளுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை எனலாம். வண்டி, வாகனங்கள் செல்லாத எல்லா இடங்களுக்கும் சுமைகளைக் கொண்டு செல்லும் வாகனம் கழுதைகள்தான். குறிப்பாக சாலை வசதிகளற்ற மலைப் பகுதிகளில் சுமைகளை ஏற்றி இறக்குவதற்கான உற்ற தோழன் கழுதைகள்தான். கழுதைகளைப் பராமரிப்பதற்கான செலவுகள் ஏறக்குறைய ஏதுமில்லை எனலாம்.
இதேபோல, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா கண்டத்து பின்தங்கிய நாடுகளிலும் கழுதைகளின் பயன்பாடு மிக அதிகம். வீடுகளுக்குத் தண்ணீர் எடுத்து வர, வீடுகளுக்குத் தேவையான பொருட்களைச் சுமந்து வர பெண்கள் பெரிதும் நம்பியிருப்பது கழுதைகளைத்தான். இந்நாடுகளில், தொலைதூர பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் வாகனம் கழுதை என்பதும் ஓர் உண்மை. கழுதை இல்லையென்றால், கல்வி கூட அந்தக் குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உலகின் மூன்றில் இரண்டு பங்கு கழுதைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 5 கோடியே 30 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால் சீனா முதலாளிகள் கழுதைகளை இறக்குமதி செய்யத் தொடங்கிய கடந்த சில ஆண்டுகளிலேயே இந்த எண்ணிக்கையானது, 3 கோடியே 30 லட்சமாகக் குறைந்து விட்டது. ரூ. 30,000 ஆயிரமாக இருந்த கழுதையின் விலையோ ஏற்றுமதி கிராக்கியின் காரணமாக ரூ. 2 லட்சம் வரை உயர்ந்து விட்டது. இதனால் கழுதையை நம்பி தமது வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்த பல லட்சம் ஏழை, எளிய ஆப்பிரிக்க மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக, கழுதைகளை நம்பியிருந்த பல ஆப்பிரிக்க நாடுகளின் பெண்களது வாழ்வு கேள்விக் குறியாகத் தொடங்கி விட்டது.
கென்யா நாட்டில் 2016-இலிருந்து 2019 வரையிலான காலத்தில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட கழுதைகள் கொல்லப்பட்டுள்ளன. எகிப்தில் 1990-களில் 31 லட்சமாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2020-இல் பத்து லட்சமாகக் குறைந்து விட்டது. தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் கழுதைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.
மனிதத் தன்மையற்ற முறையில், குட்டிகள், குட்டிகளை வயிற்றில் சுமக்கும் தாய்க் கழுதைகள், அடிபட்டுக் கிடக்கும் கழுதைகள் என எதையும் விட்டுவைக்காமல் கொடூரமாகக் கொல்கிறார்கள். தர மறுக்கும் மக்களிடமிருந்து திருடுகிறார்கள். வண்டிகளில் நெருக்கியடித்து, தீனி போடாமல், நீர் கூடத் தராமல் ஏற்றிச் செல்லும்போது கழுதைகள் இறந்தால், அங்கேயே தோலையுரித்து, தோலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள கழிவுகளைச் சாலையோரம் வீசிச் செல்கின்றனர். இப்படி வகைதொகையின்றி, கழுதைகளைக் கொல்வதாலும் கழிவுகளை வீசியெறிவதாலும் புதுப்புது நோய்களும் மனிதர்களுக்குப் பரவுகின்றன.
இப்படியே சென்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் உலகில் கழுதைகளே இல்லாமல் போய்விடும் என்ற ஆபத்தான நிலைமை தோன்றியுள்ளது என்றும், காண்டாமிருகம், யானைகள் உள்ளிட்டு அரியவகை விலங்குகள் அழிந்து வருவதைப் போல, கழுதைகளும் அழிந்துவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றும் விலங்கின ஆய்வாளர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.
இதனால் கென்யா, போஸ்ட்வானா, உகாண்டா, டான்சானியா, நைஜர், கானா, காம்பியா, எத்தியோப்பியா, புர்கினா ஃபாசோ, மாலி, செனகல் உட்பட பல ஆப்பிரிக்க நாடுகள் கழுதை ஏற்றுமதிக்கு முற்றாகத் தடை விதித்துள்ளன. ஆப்பிரிக்கன் யூனியன் (AU) என்ற அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்குமான அமைப்பானது, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் கழுதைகள் ஏற்றுமதிக்குக் காலவரையற்ற தடை விதிக்க வேண்டுமென்று கோரியுள்ளது.
முதலாளித்துவம் கொடூரமானது; ஈவிரக்கமற்றது; இலாப வெறியை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவம் மனித இனத்துக்கு மட்டுமின்றி, புவி வாழ் விலங்கினங்களுக்கும் உயிரினங்களுக்கும் எதிரானது; சுற்றுச்சூழலுக்கு எதிரானது. மனித இனத்திற்கு தீராத நெருக்கடிகளையும் பேரழிவையும் விளைவிக்கக் கூடியது.
அந்த வரிசையில் முன்னணியில் நிற்கும் இலாப வெறிபிடித்த சீன முதலாளிகள், உலகின் கழுதை இனத்தையே அழிக்கக் கிளம்பியிருக்கிறார்கள். இச்சீன முதலாளிகளின் சட்டைப் பையில் குடியிருக்கும் சீன ஆட்சியாளர்களோ, சோசலிசம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
![]()
இராமையா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










