அமேசான், மைக்ரோசாப்ட், டி.சி.எஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இது ஐ.டி ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் உலகளவில் 15.5 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற 3,50,000 ஊழியர்களில் 14,000 பேரை அக்டோபர் 28 அன்று அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
இதனைத் தெரிவிப்பதற்காக அந்நிறுவனம் “உங்கள் மின்னஞ்சலை கவனிக்கவும்” என்ற குறுஞ்செய்தி ஒன்றை தன்னுடைய ஊழியர்களுக்கு அராஜகமாக அனுப்பியது. மின்னஞ்சலைப் பார்த்த ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் “உங்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம். இனி நீங்கள் வேலைக்கு வரவேண்டாம். அடுத்த மூன்று மாதத்திற்கு முழு ஊதியத்துடன் சேர்த்து சில நிவாரணங்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்குச் செல்லும் வழியிலும், அலுவலகத்திற்குச் சென்ற பிறகும் மின்னஞ்சலைப் பார்த்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதியில்லை என்று கூறி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மடிக்கணினி உள்ளிட்டவற்றைப் பிடுங்கிக் கொண்டு செக்யூரிட்டி மூலம் அடாவடித்தனமாக வெளியே விரட்டி அடித்திருக்கிறது அமேசான் நிறுவனம்.
பல ஊழியர்கள் தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து சமூக வலைத்தளமான ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அவற்றில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் “அதிகாலை 3 மணிக்கு எனக்கு இந்த எஸ்.எம்.எஸ் வந்தது. அந்த நேரத்திற்கு எழுந்து என்னுடைய மடிக்கணினியை ஆன் செய்து என்னுடைய மின்னஞ்சலைப் பார்த்தேன். அதில் நான் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்த மின்னஞ்சல் இருந்தது. அதனைப் பார்த்ததும் எனக்குப் படபடத்துப் போனது” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ஊழியர் ஒருவர் “அவர் தனது சம்பளம் மற்றும் வேலையைப் பற்றி பெருமையாகப் பேசுவார். நான் இன்னும் அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் வருத்தப்படுகிறேன்” என்றும் “அவருக்கு மூன்று வயது குழந்தை உள்ளது. இது மிகவும் கடினமாக இருக்கும். இந்தக் காலத்தில் எந்த வேலையும் உண்மையிலேயே நிலையானது அல்ல என்பதை இது நினைவூட்டுகிறது” என்று சக ஊழியரின் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிக வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி கூறிய பல மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2022-23 ஆம் ஆண்டில் 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படிக்க: ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கை: பேச வேண்டிய பக்கங்கள்
இதனைப் போன்று, கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனம் 19,755 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பணிநீக்கம் செய்ததாக இந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் மற்றும் ஐ.டி துறை ஆர்வலர்கள் இதைவிட அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதனை தங்கள் பதிவுகளில் சேர்க்கக்கூடாது என்பதற்காக ஊழியர்களை கட்டாய ராஜினாமாக்கள் செய்ய வைத்துள்ளனர் என்றும் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
ஃப்ரீ பிரஸ் ஜர்னலிடம் பேசிய ஊழியர் ஒருவர் , “எனக்கு தற்போது 47 வயது. சில நாட்களுக்கு முன்பு, எந்த காரணமும் இல்லாமல் டி.சி.எஸ்-இல் இருந்து ராஜினாமா செய்யுமாறு கூறினர். மனிதவள (HR) மேலாளர் என்னை கூட்ட அறையில் அழைத்து, 30 நிமிடங்களுக்குள் நான் ராஜினாமா செய்வேன் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்த எனக்கு நேரமில்லை. ஆனால் நான் அதைச் செய்தேன். அப்போதிருந்து, நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன், வேலை கிடைக்கப் போராடி வருகிறேன். நாங்கள் மூத்த நிலை ஊழியர்கள். இப்போது எங்களை யார் வேலைக்கு அமர்த்துவார்கள்?” என்று வேதனையுடன் கூறினார்.
இந்நிலையில் இந்த ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணிநீக்கங்கள் குறித்து தனிநபர் நிதி மற்றும் வர்த்தகக் கல்வி நிறுவனமான “ரேஷனல் எஃப்.எக்ஸ்” (Rational FX) சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் “இந்த ஆண்டில் இன்டெல் ( Intel) , அமேசான் (Amazon), மைக்ரோசாப்ட் (Microsoft), ஆக்சென்ச்சர் (Accenture), பானாசோனிக் (Panasonic), ஐ.பி.எம் (IBM), சேல்ஸ் ஃபோர்ஸ் (Salesforce) எஸ்.டி மைக்ரோ (ST Micro), மெட்டா (Meta) போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
“இதன் விளைவாக 2,03,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்த ஆண்டு முடிவதற்குள் 2,44,000-ஆக இந்த எண்ணிக்கை உயரக்கூடும். அதில் கிட்டத்தட்ட 70 சதவீத பணி நீக்கங்கள் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களில் நிகழ்ந்துள்ளன” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் தங்களின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக ஊழியர்களை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் தற்போது ஏ.ஐ வளர்ச்சி காரணமாகவும், இலாப வெறியால் செலவினங்களைக் குறைப்பது என்றும் தன்னுடைய பல்லாயிரக் கணக்கான ஊழியர்களைக் குப்பையைப் போன்று வெளியே தூக்கி எறிந்துள்ளன. இதுதான் ஐ.டி ஊழியர்களின் இன்றைய அவல நிலையாக உள்ளது.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










