தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!
-அமர்ஜித் கௌர்
தப்பித் தவறி கூட தொழிலாளர் உரிமை, தொழிற் சங்கம் என்ற சொற்கள் வராதவாறு ஒன்றிய அரசின் தொழிலாளர் கொள்கை வரைவு அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கொள்கை அமலாக்கத்தில், அரசியல் சட்ட குறிப்போ, வழிகாட்டு நெறிமுறைகளோ இடம் பெறவில்லை. ஆர்எஸ்எஸின் மனுதர்ம வழியை தூக்கிப் பிடிக்கிறது, இந்தக் கொள்கை.
ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான, பஞ்சாபைச் சேர்ந்த அமர்ஜித் கௌர் சமீபத்தில் சங்க நிர்வாகிகள் மத்தியில், ஒன்றிய அரசின் வரைவு தொழிலாளர் அறிக்கையான ஷ்ரம் சக்தி நிதி 2025 பற்றி பேசியதாவது:
இந்த நிலையில் ஷ்ரம் சக்தி நிதி 2025 என்ற பெயரில் வரைவு தொழிலாளர் கொள்கையை ஆளுகின்ற ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு கொள்கையறிக்கையை அறிவிப்பதற்கு முன்பு தொழிற் சங்கங்களோடு எந்த கலந்துரையாடலையும் தொழிலாளர் துறை நடத்தவில்லை. அதன் நகலைக் கூட தொழிற்சங்கங்களுக்கு அனுப்பவில்லை. இப்படி ஒரு கொள்கையை அரசு வெளியிட்டது பற்றி இந்து நாளிதழில் செய்தி வந்த பின்பே நமக்குத் தெரிய வந்தது.
இந்த வரைவுக் கொள்கையை தொழிலாளர் துறை தமது வலைத் தளத்தில் கூட வெளியிடவில்லை. இது பற்றி எந்த பொது அறிவிப்பையையும் விடவில்லை. இந்த வரைவுக் கொள்கையை, அந்தச் செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழின் நிருபரிடம் இருந்து பெற்றோம். இதனை மற்ற மத்திய தொழிற்சங்கங்களுக்கும் பகிர்ந்தோம். இப்படி வந்துள்ளது பற்றி அவர்களுக்கும் தெரியாது. அது மட்டுமின்றி இந்தக் கொள்கை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இந்தி உள்ளிட்ட வேறு எந்த மொழிகளிலும் இது வெளியிடப்படவில்லை.
இப்படி ரகசியமாக, மக்களுக்குத் தெரியாத மொழியில் இதனை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இதன்மீது பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பின்பு அதனை அமலாக்க அரசு எண்ணியுள்ளதாம். இதன் மீது நமது ஆட்சேபணைகளைத் தெரிவித்து உள்ளோம்.
தொழிலாளர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்து வரும் உரிமையான எட்டுமணி நேர வேலை என்ற பாதுகாப்பை பறிக்கும் வகையில் மோடி அரசாங்கம் புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை இன்னமும் எல்லா மாநில அரசுகளும் உருவாக்கவில்லை. இந்த நிலையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் உள்ளிட்ட சில மாநில அரசுகள் அரசு ஆணைகள் மூலமாகவும், நிர்வாக உத்தரவுகள் மூலமாகவும் புதிய தொழிலாளர் சட்டங்களில் உள்ள அம்சங்களை சத்தமின்றி அமலாக்கி வருகின்றன.
கர்நாடக மாநிலத்தை பாஜக ஆட்சி செய்த போது, வேலை நேரத்தை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தியது. அந்தச் சட்டத்தை, தற்போது ஆண்டுவரும் காங்கிரஸ் அரசு, தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய போதும் மாற்றவில்லை.
வேலை நேரத்தை எட்டுமணியில் இருந்து 13 மணி நேரமாக உயர்த்தும் ஒரு சட்டத்தை குஜராத் அரசு இயற்றியுள்ளது. இத்தகைய சட்டத்தை உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் இயற்றியுள்ளன. மேற்கு வங்காளத்தை ஆளும் மம்தா பானர்ஜி அரசானது கடைகள் & நிறுவனங்கள் சட்டத்தை திருத்தி வேலை நேரத்தை உயர்த்தியுள்ளது. அதே போல பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரியும் வகையில் சட்டத்தை மாற்றியுள்ளது. எதிர்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் இந்த நிலமை என்றால், தொழிலாளர்கள் இனி வரும் காலங்களில் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும்.
தமிழக அரசு வேலை நேரத்தை உயர்த்தி சட்டம் இயற்றிய போது, அதனை எதிர்த்து தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் காட்டிய எதிர்ப்பின் விளைவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனைத் திரும்பப் பெற்றார். ஆயினும் தற்போதும் தொழிலாளர்கள் எட்டுமணி நேரத்திற்கும் மேலாக இங்கு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு மிகைநேர கூலி (OT wages) கொடுக்க வேண்டும். சட்ட மாற்றத்தின் விளைவாக இதற்கான கூடுதல் சம்பளத்தை இழக்க நேரிடும். தொழிலாளர்கள் கட்டாயமாக வேலை செய்ய வேண்டிய நெருக்கடியை இத்தகைய சட்ட மாற்றம் உருவாக்குகிறது.
தொழிலாளர் கொள்கைகளை உருவாக்கும் போது தொழிலாளர்களின் கண்ணியம், பாதுகாப்பு, பணி நிலமைகள் பற்றி உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO) உருவாக்கியுள்ள சர்வதேச இணக்க விதிகளை இந்த வரைவுக் கொள்கை கண்டு கொள்ளவில்லை. தொழிலாளர், வேலை அளிப்பவர், அரசு ஆகிய மூவரும் உள்ள முத்தரப்பு அமைப்பில் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நெறிமுறை மீறப்பட்டுள்ளது.
மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் கொள்கை அமலாக்கத்தில், அரசியல் சட்டம் பற்றிய குறிப்பு இல்லை. வழிகாட்டு நெறிமுறைகள் (directive principles) இதில் இடம் பெறவில்லை. ஆர்எஸ்எஸ் சொல்லும் மனுதர்ம வழியிலான ஆட்சியை இந்தக் கொள்கை தூக்கிப் பிடிக்கிறது. புதிய தொழிலாளர் சட்டங்களை விட இதிலுள்ளவை பிற்போக்கானவை.
”மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதை அடியோடு தடை செய்ய வேண்டும்” என நாம் கோரி வருகிறோம். ஆனால், ”அந்தந்த சாதிக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்” என மனுஸ்மிருதி கூறுகிறது.
தொழிலாளர் சட்டங்களை மீறும் வேலையளிப்பவர்கள் மீது தொழிலாளர் ஆணையாளர், ஆய்வாளர் மூலமாக நடவடிக்கை (regulate) எடுக்கும் முறை மாற்றப்பட்டு, அரசு என்பது ஒரு வசதிசெய்து கொடுப்பவர் (facilitator) என்ற நிலையை இந்தக் கொள்கை ஏற்படுத்துகிறது. இனிமேல், தொழிலாளர் ஆய்வுகளை தனியார் மேற்கொள்ளும் வகையில் கொள்கை வகுக்கப்படுகிறது. அதாவது தொழிலாளர் துறை என்பது இனி வரும் காலங்களில் வேலை வாய்ப்புத் துறையாக அறியப்படும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் குழுவில் இருந்து தொழிலாளர் தரப்பு – ஏஐடியுசி பிரதிநிதித்துவத்தை அரசு நீக்கிவிட்டது. இந்த அறங்காவலர் குழு உருவாக்கத்தில் ஏஐடியுசி வகித்த பங்கு மகத்தானது. தற்போது தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து, வேலையை ராஜினாமா செய்த பின்பு முழு பணத்தையும் எடுக்க முடியாது – குறைந்தது 25 % த்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ‘இது தொழிலாளர்களுக்கு பாதகமாக உள்ளது. இதனை மாற்ற வேண்டும்’ என்று தொழிலாளர் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26 அன்று, மாவட்ட தலைநகரங்களிலும், தொழில் மையங்களிலும் போராட்டம் நடைபெறும். மத்திய தொழிற்சங்களும், ஒருங்கிணைந்த விவசாயிகள் முன்னணியும் இணைந்து கூட்டு கோரிக்கைகளை உருவாக்கியுள்ளன. நாடு முழுவதும் 500 மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்தி குடியரசுத் தலைவருக்கு, மாவட்டத் தலைவர்கள் மூலமாக மனு அனுப்பப்படும். விவசாயிகளும், தொழிலாளர்களும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து போராடத் தொடங்கிய நவம்பர் 26 ம் நாளை போராட்ட நாளாக தொழிற்சங்கங்களும், விவசாய அமைப்புகளும் அறிவித்துள்ளன. இதனை வெற்றிபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு தொழிலாளர்களுக்கு உள்ளது” என்றார் ஏஐடியுசியின் பொதுச் செயலாளரான அமர்ஜித் கௌர்.
ஏஐடியுசியின் மாநிலச் செயலாளரான ம.இராதாகிருஷ்ணன், ”பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டத்தைத் திருத்த ஆட்சேபணைகளை கோரியுள்ளது. இதனை ஏஐடியுசி எதிர்க்கிறது. மற்ற தொழிற்சங்கங்களோடு இணைந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொகுப்பு: பீட்டர் துரைராஜ்
நன்றி: அறம் இணைய இதழ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











