பீகார் – சடங்குத்தனமான தேர்தல்: தேவை, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!

பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இக்கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மகா கூட்டணிக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி நிலவி வருகிறது.

நிதிஷ் – பா.ஜ.க. கும்பலின் மக்கள் விரோத ஆட்சியில்
பீகார் மக்களின் அவலநிலை

பீகார் இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றாகும். கல்வி, வேலைவாய்ப்பின்மை, வறுமை, ஊட்டச்சத்து குறைபாட்டால் இம்மாநில மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையால் ஆண்டுதோறும் 25 இலட்சம் மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக மாநிலத்தை விட்டு வெளியேறுகின்றனர். குறிப்பாக, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கல்விக்காகவும், 52 இலட்சம் பேர் வேலைக்காகவும் மாநிலத்திற்கு வெளியே குடிபெயர்ந்துள்ளனர்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. அரசுப் பணிக்கான தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கெதிராக போராடுகின்ற பட்டதாரிகளையும் நிதிஷ் அரசு காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குகிறது.

மக்களின் வறிய நிலை காரணமாக மாநிலத்தின் பெருவாரியான மக்கள் நுண்கடன் (Microfinance) நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். பீகார் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஜீவிகா எனப்படும் சுய உதவிக் குழுக்களில் 1.3 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களுடைய தொழிலுக்கான பணத் தேவைக்காக இந்நிறுவனங்களையே சார்ந்திருக்கின்றனர். இப்பெண்கள்தான் கந்துவட்டி கொடுமையால் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர். இந்நிறுவனங்களின் மிரட்டலாலும் அநியாய வட்டி வசூலாலும் பணம் கட்ட முடியாமல் மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமைகளும் அரங்கேறுகின்றன. ஆனால், இந்நிறுவனங்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அரசின் துணையுடனே இவை செயல்பட்டு வருகின்றன.

மேலும், பீகாரில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகள் பாலியல் தொழிலுக்காகவும் கிராமப்புற கச்சேரி குழுக்களில் ஆபாச நடனமாட வைப்பதற்காகவும் மாஃபியா கும்பல்களால் கடத்தப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டிய அரசோ, குறைந்த எண்ணிக்கையிலான சிறுமிகளை மட்டும் மீட்பது போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, மாஃபியா கும்பலுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.

அதேபோல, ஆண்டுதோறும் கங்கா, கோசி உள்ளிட்ட நதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மூழ்குவது, கால்நடைகள் அடித்துச் செல்லப்படுவது, பயிர்கள் அழிக்கப்படுவது என பீகார் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். 2020 – 2024 வரையிலான காலகட்டத்தில் பீகார் முழுவதும் 3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பீகார் பேரிடர் மேலாண்மைத் துறையின் “படிவம் IX” தெரிவிக்கிறது. வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைவதைத் தடுப்பதற்கு நிதிஷ் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவிற்கு அறிவிக்கப்படும் அற்ப நிவாரணத் தொகையும் மக்களை சென்றடைவதில்லை. நிவாரண நடவடிக்கைகளுக்காகப் போராடும் மக்களையும் போலீசைக் கொண்டு நிதிஷ் அரசு ஒடுக்குகிறது.

அதுமட்டுமின்றி, பீகாரில் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் இயல்புநிலை ஆக்கப்பட்டுள்ளன. தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் இஸ்லாமியர்களை போலீசு கொட்டடிப் படுகொலை செய்வது, கால்நடைகளை திருடுகிறார்கள் என்று கூறி காவிக் குண்டர்கள் படுகொலை செய்வது உள்ளிட்ட கொடூர சம்பங்களும் அரங்கேறுகின்றன. பஜ்ரங் தள் குண்டர்கள் இந்து பண்டிகை நாட்களில் மசூதிகளில் காவிக் கொடிகளை ஏற்றுகின்றனர். கிறித்துவ பாதிரியார்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி  அவர்கள் மீது காவிக் கும்பல் தாக்குதல் நடத்துகின்றது.

வளர்ச்சி என்ற பெயரில், அம்பானி – அதானிகளின் நலனுக்காக நாசகரத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் கூட, 2,400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக 1,050 ஏக்கர் நிலம், ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் 33 ஆண்டு குத்தகைக்கு அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 10 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளன, விவசாய நிலங்கள் அழிக்கப்பட உள்ளன.

இவ்வாறு பா.ஜ.க-நிதிஷ் கும்பலின் மக்கள் விரோத ஆட்சியினால் மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் பா.ஜ.க – நிதிஷ் கும்பலுக்கு எதிரான எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.

கேலிக்கூத்தான ‘தேர்தல் ஜனநாயகம்’

பீகாரில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் துணையுடன் சட்டப்பூர்வமாகவே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது.

“சிறப்பு தீவிர மறு ஆய்வு” (SIR – Special Intensive Revision) என்ற பாசிச நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற வாய்ப்பிருக்கும் தொகுதிகளில் அதிகளவிலான இஸ்லாமியர்களும் பெண்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலை “தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” (The Reporters Collective) என்ற இணையதளம் ஆய்வு செய்ததில் ஒரே பெயரில் வயது வித்தியாசத்துடன் இரண்டு வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்ட 14.35 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், சந்தேகத்துக்குரிய அல்லது இல்லாத முகவரிகளில் 1.32 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அதாவது, பா.ஜ.க. கும்பலானது பீகார் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர் பட்டியலில் தனக்கு எதிரான வாக்காளர்களை நீக்கியும், ஆதரவான போலி வாக்காளர்களை சேர்த்தும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.

பீகாரில் குறிப்பிட்ட அளவு ஆண்கள், புலம்பெயர் தொழிலாளர்களாகவும் வேலைவாய்ப்பிற்காகவும் வேறு மாநிலங்களுக்கு சென்று விடுவதால், பெண்களின் வாக்குகளே தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், அதிகளவு பெண்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பா.ஜ.க. நீக்கியுள்ளது. அதேசமயம் தனக்கு அடித்தளம் உள்ள தொகுதிகளில் தன் மீதான அதிருப்தியை குறைத்து வாக்குகளை கவர்வதற்காக பெண்களை குறிவைத்து கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிவித்து பணத்தை வாரியிறைத்திருக்கிறது.

அதேபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சுய தொழில் தொடங்க நிதியுதவி அளிக்கிறோம் என்ற பெயரில் ஒரு கோடி பெண்களுக்கு தலா ரூ.10,000 என பா.ஜ.க-நிதிஷ் அரசு வழங்கியது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக செயல்படுத்தப்பட்ட லட்கி பாஹின், லட்கி பெஹ்னா திட்டங்களை போன்று இத்திட்டமும் பெண்களின் வாக்குகளை கவர்வதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இளைஞர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட பிரிவினரை குறிவைத்து பல கவர்ச்சிவாத திட்டங்களை அறிவித்து, தேர்தலுக்கு முந்தைய குறுகிய காலத்தில் நிதிஷ் அரசு செயல்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க – நிதிஷ் கும்பல் மக்களுக்கு கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிவித்து முடிக்கும்வரை காத்திருந்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது.

மறுபுறம், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டை மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) மீண்டும் கையிலெடுத்திருக்கிறது. அதேபோல், மோடியின் தாயை காங்கிரஸ் கட்சியினர் இழிவாகப் பேசிவிட்டதாகக் கூறி மக்களை திசைதிருப்பும் பிரச்சாரத்தில் மோடி கும்பல் இறங்கியது. இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் துணையுடனே நடந்தது.

பா.ஜ.க-வின் சாதி-மத அரசியல்

1947 அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவிலேயே முதன்முதலாக 2023-இல்  பீகாரில்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது (2024-இல் பாட்னா உயர்நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டது). இதன் பிறகுதான் இந்தியா கூட்டணி கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கான முக்கிய ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கின.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு பிரச்சாரம் மோடி அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 30 அன்று “மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும்” என்று மோடி அரசு அறிவித்தது. சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் மூலம் பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. (சாதிவாரிக் கணக்கெடுப்பை தனது பிளவுவாத அரசியலுக்கான கருவியாக பா.ஜ.க. பயன்படுத்தப்போகிறது என்பது தனிக்கதை)

அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணியில், பா.ஜ.க. பார்ப்பனர்களை குறிவைத்தும், ஜே.டி.யு. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை குறிவைத்தும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆர்.ஜே.டி-யின் வாக்குவங்கியை உடைக்கும் வகையில் பல தொகுதிகளில் யாதவ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், ‘சட்டவிரோத குடியேறிகளால்’ மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களே ஈடுபட்டு வருகின்றனர். “பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் நாடு கடத்தப்படுவர்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இஸ்லாமிய வெறுப்பைக் கக்கியுள்ளார். அதேபோல், அப்பாவி இஸ்லாமிய மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்ற பெயரில் நாடு கடத்தும் நடவடிக்கைகளிலும் நிதிஷ் அரசு ஈடுபட்டு வருகிறது.

ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலைப் போன்று பீகாரிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ். தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் பிரம்மாண்டமாக சீதா கோயில் கட்டும் பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியிருப்பது; துர்கா பூஜை, தீபாவளி, சாத், ஹோலி பண்டிகைகளையொட்டி மூன்று மாதங்களுக்கு பீகாருக்கு வந்து செல்லும் மக்களுக்கு பேருந்து கட்டண சலுகை வழங்கியிருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நிதிஷ் அரசு தன்னை இந்துக்களுக்கான அரசாக முன்னிறுத்திக் கொள்கிறது. ஜே.டி.யு. சார்பாக போட்டியிடும் இஸ்லாமிய வேட்பாளர்களின் எண்ணிக்கையும் கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் ஒன்பதாக இருந்த நிலையில், தற்போது நான்காக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாற்றை முன்வைக்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்

பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேஜஸ்வி யாதவுடன் இணைந்து வாக்குத் திருட்டு விவகாரத்தை ஒட்டி பிரச்சாரம் செய்தது, “வாக்காளர் அதிகார யாத்ரா” பேரணிகளை நடத்தியது மக்கள் மத்தியில் குறிப்பிட்ட அளவு ஆதரவை உருவாக்கியது. ஆரம்பத்தில் வாக்குரிமையுடன் மக்களின் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்படுவதை இணைத்து பிரச்சாரம் செய்தனர். எதிர்க்கட்சிகளின் இந்நடவடிக்கைகள் பா.ஜ.க. கும்பலுக்கு நெருக்கடி கொடுத்தது.

ஆனால், எதிர்க்கட்சிகள் வாக்குத் திருட்டு குறித்து குறிப்பிட்ட நாட்கள் பிரச்சாரம், பேரணி நடத்துவதோடு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டனர். மக்கள் போராட்டங்களை கட்டியமைத்து சிறப்பு தீவிர மறு ஆய்வை தடுத்து நிறுத்த வைக்க வேண்டும்; மோடி அரசை பின்வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படவில்லை. மாறாக, இவ்விவகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடம் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை மட்டுமே அறுவடை செய்துகொள்ள விழைந்தன.

மேலும், அரசு தேர்வு முறைகேடுகள், அதானிக்கு நில தாரைவார்ப்பு விவகாரம், வறுமை, வெள்ள பாதிப்புகள் குறித்தெல்லாம் இக்கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களில் வாய்திறப்பதில்லை. மாறாக, பா.ஜ.க-வின் வழியில் கவர்ச்சிவாத அறிவிப்புகள் மூலம் மக்களின் வாக்குகளைக் கவர விழைகின்றன. குறிப்பாக, பீகாரில் வேலையின்மை தலைவிரித்தாடும் சூழலில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜீவிகா சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள பெண்களுக்கு அரசு ஊழியர் தகுதி வழங்கி மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்குவோம்; 20 மாதத்திற்குள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் அறிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசுத்துறைகளை கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல்மயமாக்குவதே அரசின் கொள்கையாக இருக்கும் வேளையில், மேற்கூறிய வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை இக்கட்சிகள் அறியும். இருந்த போதிலும் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக வெற்று வாய்ச்சவடால் அடித்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

பெண்கள் கந்துவட்டி நிறுவனங்களின் பிடியில் சிக்கியிருப்பது, விவசாயம் அழிக்கப்பட்டு மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக ஆக்கப்படுவது உள்ளிட்டவற்றிற்கும் அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளே காரணமாகும். ஆனால், இக்கட்சிகள் மறுகாலனியாக்கக் கொள்கைகளை பற்றி ஒரு வார்த்தை கூட தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதில்லை. ஏனென்றால், தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களும் அதனைதான் அமல்படுத்துகின்றனர். இதன்விளைவாக, பா.ஜ.க-விற்கு எதிரான மாற்றாக மக்கள் இக்கட்சிகளைப் பார்ப்பதில்லை.

மக்களுக்கு இக்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாததால்தான் ஓவைசியின் “அகில இந்திய மஜ்லிஸ் இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி”-க்கும், பிரசாந்த் கிஷோரின் “ஜன் சூராஜ் கட்சி”-க்கும் ஆதரவளிக்கின்றனர். ஓவைசி கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன. ஓவைசி இஸ்லாமிய மக்கள் வாக்குகளையும் பிரசாந்த் கிஷோர் இளைஞர்களின் வாக்குகளையும் பிரிக்கிறார்கள். ஜன் சூராஜ் கட்சியின் நடவடிக்கைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற நபர்கள் நிதியளிப்பதாக செய்திகளும் வெளியாகியிருக்கின்றன.

அதேபோல, எதிர்க்கட்சிகளால் பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது என்ற அடிப்படையில் கூட தங்களுக்குள் தொகுதி உடன்பாட்டிற்கு வர இயலவில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் இருந்து விலகியிருப்பது; ஐந்து முதல் 10 தொகுதிகளில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் போட்டியிடுவது; நீண்ட போராட்டத்திற்குப் பிறகே தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளால் எதிர்க்கட்சி ஆதரவாளர்களே அக்கட்சிகளை விமர்சிக்கின்றனர்.

மேலும், பா.ஜ.க. வழியில், சாதி அரசியலை கையிலெடுத்து மக்களின் வாக்குகளை கவர்ந்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. சான்றாக, ஆர்.ஜே.டி. தன்னுடைய மாநிலத் தலைவராக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள தனுக் சாதியைச் சேர்ந்த மங்கனி லால் மண்டலை கட்சித் தலைவராக நியமித்துள்ளது. இதன் மூலம் வடக்கு பீகாரின் கோசி-மிதிலாஞ்சல் பகுதிகளில் உள்ள சமஸ்திபூர், தர்பங்கா மற்றும் மதுபானி போன்ற மாவட்டங்களில் கிட்டத்தட்ட 40 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை வலுப்படுத்த முயல்கிறது.

மொத்தத்தில், எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க. செயல்படுத்திவரும் பாசிச சட்டத்திட்டங்கள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்று என்பதே இல்லை. பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவதற்குக் கூட அக்கட்சிகளால் ஒன்றிணைய முடியவில்லை.

மேலும், கடந்த கால நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களைப் போல, மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்து கவர்ச்சிவாதம், சாதி அடையாள அரசியல், பா.ஜ.க. எதிர்ப்புணர்வின் மூலமே மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கே சாதகமாக அமைகின்றன.

பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றாலும் கூட, மக்கள் கோரிக்கைகளுக்கு தாங்கள் செவிமடுக்க வேண்டும், தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களுடன் இணைந்து போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்பதே கண்ணெதிரே உள்ள எதார்த்தமாக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் மக்கள் விரோதத் தன்மை, கார்ப்பரேட் நல அரசியல், மாற்று சித்தாந்தம் – திட்டம் இன்மை போன்றவற்றால் எதிர்க்கட்சிகள் இந்த எதார்த்தத்தைக் காண மறுக்கின்றன. பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கித் திளைக்கின்றன.

சடங்குத்தனமான தேர்தல்களும்
மாற்று தேர்தல் முறையின் அவசியமும்

பீகார் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் சிறப்பு தீவிர மறு ஆய்வு, வாக்குத் திருட்டு உள்ளிட்ட தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உரிய ஆதாரங்களுடன் பட்டவர்த்தனமாக மக்களிடம் அம்பலப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் கூட, கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலிலிருந்து 6,018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, ஒரு பெயரை நீக்க இடைத்தரகர்களுக்கு ரூ.80 லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதை வெளிக்கொணர்ந்துள்ளது.

இதன்விளைவாக, முதலாளித்துவ அறிவுஜீவிகளே பீகார் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்று தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். தேர்தல் என்பதே சடங்குத்தனமான முறையாக மாற்றப்பட்டு வருவதை “ஃபிரண்ட் லைன்” (Frontline) போன்ற  முதலாளித்துவ பத்திரிகைகளே ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தல் கட்டமைப்பிற்குள்ளேயே பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நியாயமான தேர்தல் நடந்தால் தாங்கள் வெற்றி பெற முடியும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல பாசிச சட்டத்திட்டங்கள் மூலம் இத்தேர்தல் கட்டமைப்பையே தான் வெற்றி பெறுவதற்கு சாதகமான வகையில் மறுவார்ப்பு செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க-விடமே நியாயமான தேர்தல் பற்றி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், எந்தவொரு மாற்றையும் முன்வைக்காமல் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே பாசிச பா.ஜ.க-வை வீழ்த்திவிட முடியும் என்று ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு வெற்று நம்பிக்கையூட்டி கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் பா.ஜ.க-விற்கு எதிராக தங்களை நம்பி வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு துரோகமிழைப்பதுடன் அம்மக்களை பாசிசத்திற்கு பலியிடுகின்றனர்.

அதேபோல, பா.ஜ.க-வை ஜனநாயகப்பூர்வமாக அணுகும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாசிச கும்பல், எதிர்க்கட்சிகளின் மக்கள் அடித்தளத்தை சரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரே நாடு – ஒரே கட்சி” என்ற தன்னுடைய இந்துராஷ்டிர நோக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

எனவே,  உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய, நியாயமான தேர்தலை நடத்தக்கூடிய மாற்றுக் கட்டமைப்பின் தேவை குறித்தான விவாதத்தை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க  வேண்டியது தற்போது மிகவும் முக்கியத்துவமுடையதாகிறது.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பாசிசத்தை வீழ்த்தி, மீண்டும் பாசிச கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றுக் கட்டமைப்பை கட்டியமைக்கும் போராட்டத்தில் பாசிச எதிர்ப்பு சக்திகள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க