2024-2025 நிதிநிலை அறிக்கையில் மதுரை கல்லாங்காடு பகுதியில் முதற்கட்டமாக 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை தி.மு.க. அரசு வெளியிட்டது.
கல்லாங்காடு வனப்பகுதியை சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருவதுடன், அங்கு பெய்யும் மழை நீர்நிலைகளில் நிரம்பி விவசாய நீராதாரமாகவும் இருந்து வருகிறது. மேலும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்விடமாக திகழும் கல்லாங்காடு, பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளது.
எனவே, கல்லாங்காட்டில் சிப்காட் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரமே பறிபோகும் என்பதால் சுற்றுவட்டார 18 கிராம மக்கள் இந்த நாசகரத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தி.மு.க. அரசு மக்கள் எதிர்ப்பையும் மீறி நில அளவீடு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் தொடக்கத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மட்டுமே சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளிலும் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அடுத்தக்கட்டமாக 1,000 ஏக்கர் வரை விரிவுபடுத்துவதற்காக பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் தகவல்களும் வெளிவந்துள்ளன. இருப்பினும், சிப்காட் திட்ட விரிவாக்கம் குறித்து வெளிப்படையாக அறிவித்தால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதால், அதற்கான அறிவிப்பை வெளியிடாமலும் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தாமலும் தி.மு.க. அரசு நயவஞ்சகமாக செயல்பட்டு வருகிறது.
ஆனால், இந்த சதிகளையெல்லாம் முறியடித்து கல்லாங்காடு சிப்காட் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளிவந்த உடனேயே கடந்த பிப்ரவரி 16 அன்று கிராம மக்கள், “டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” தோழர்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி “கல்லாங்காடு சுற்றுவட்டார பாதுகாப்பிற்கான 18 கிராம மக்கள் கூட்டமைப்பு”-யை உருவாக்கினார்கள். அடுத்த நாள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு அளித்தனர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்காததால், மார்ச் 23 அன்று அழகுநாச்சியம்மன் கோவில் முன்பு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்த போலீசுதுறையின் சுயரூபத்தை மக்கள் நேரடியாக கண்டுகொண்டனர். இப்போராட்டத்தில், சிப்காட் திட்டத்தை கைவிடுவது; இப்பகுதியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கு உள்ள நிலத்தை மேய்ச்சல் நிலமாக அறிவிப்பது; காடுகளை கோவில் காடுகளாக அறிவிப்பது; கல்லாங்காட்டை பல்லுயிர் மரபுத் தலமாக்குவது; விவசாயம், கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை பெருக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 21 அன்று மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, பெருமளவில் போலீசு குவிக்கப்பட்டு சிப்காட்டிற்கான நில அளவீடு பணிகள் தொடங்கப்பட்டது. இதனை மக்கள் எதிர்த்த நிலையில் எட்டு பெண்கள் உட்பட 28 பேரை கைது செய்து கொட்டாம்பட்டி திருமண மண்டபத்தில் அடைத்தது போலீசு.
போலீசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் எதிர்ப்பு கூட்டமைப்பில் உள்ள பல இயக்கங்கள் கல்லாங்காடு பகுதி மக்களுடன் ஒன்றிணைந்து திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். ஒன்றிணைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதில் திருச்சி – மதுரை சாலை முடங்கியது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 அன்று கல்லாங்காட்டில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு, காவல் தெய்வங்களான அழகு நாச்சியம்மன் மற்றும் அலங்கேஸ்வரர் சிவன் கோவிலில் பொங்கல் வைத்து கும்மியடித்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகவலறிந்து கல்லாங்காட்டில் போலீசு குவிக்கப்பட்டது. அப்போராட்டம் பல தொலைக்காட்சியிலும் நேரலையாக ஒளிபரப்பாகியது.
கிராம மக்கள் சிப்காட் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தை தங்கள் வழிபாடுகள், பண்பாட்டு விழாக்களோடு இணைத்ததன் விளைவாக தற்போது போராட்டம் வீரியமடையத் தொடங்கியுள்ளது.
மேலும், மக்கள் அதிகாரக் கழகம், சம்பை ஊற்று பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய மீட்சி இயக்கம், தமிழ்நாடு பெண்கள் சங்கம், மக்கள் பாதை பேரியக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, பழந்தமிழர் புலிப் படை, மக்கள் சட்ட உரிமை இயக்கம், பரம்புமலை பாதுகாப்பு இயக்கம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் கல்லாங்காட்டை காக்க டங்ஸ்டன் கூட்டமைப்பில் ஒன்றிணைந்துள்ளன.
இந்நிலையில், அக்டோபர் 6 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கல்லாங்காடு மக்களும் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் அறிவிப்பை வெளியிட்டனர்.
இப்போராட்டத்தை தடுப்பதற்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. அக்டோபர் 6 அன்று காலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளம்பிய ஆயிரக்கணக்கான மக்களை அடாவடித்தனமாக தடுத்து நிறுத்தி மேலூரில் போலீசு கைது செய்தது. மனு கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட அனுமதிக்காத ‘திராவிட மாடல்’ அரசின் கார்ப்பரேட் விசுவாசத்தை இந்நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 24 அன்று மேலூரில் கல்லாங்காடு மக்களும் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாசிச மோடி அரசு கடந்தாண்டில் மதுரை அரிட்டாபட்டியில் நாசகர டங்ஸ்டன் சுரங்கத்தை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கெதிராக கிளர்ந்தெழுந்த அரிட்டாபட்டி மக்கள் மோடி அரசை பணிய வைத்து, அத்திட்டத்தை பின்வாங்க செய்தனர். அப்போது டங்ஸ்டன் திட்டம் பின்வாங்கப்பட்டதற்கு காரணம் தாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்த தி.மு.க. அரசு, மதுரை கல்லாங்காட்டில் சிப்காட் திட்டத்தை அறிவித்து கார்ப்பரேட் சேவையாற்றுகிறது. போராடும் மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது.
ஆனால், தங்கள் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்கும் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அனுமதியோம் என்று மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர். டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் நிறைவடைந்த கையுடன் மக்கள் சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். கல்லாங்காடு மக்களுடன் இணைந்து நாமும் “வேண்டாம் சிப்காட், வேண்டும் ஜனநாயகம்” என முழங்க வேண்டியுள்ளது.
![]()
புதிய ஜனநாயகம் களச்செய்தியாளர், மதுரை.
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











