கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களிலிருந்து மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 7,000 முதல் 9,000 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களும், இரவு காவல் பணியில் 120 பணியாளர்களும் (Security workers) பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இம்மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சரவண பிரியா, பணிச் சுமையை அதிகப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவது, போலீசில் புகார் அளித்து கைது செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துவது தூய்மைப் பணியாளர்களிடம் அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒப்பந்த ஊழியர்கள்தானே, யார் கேட்கப் போகிறார்கள் என்று திமிர்த்தனமாக நடந்து வருகிறார்.
மேலும், காலை 10.45 மணிக்கு பணிக்கு வந்துவிட்டு பிற்பகல் 1.45 மணிக்கே வீட்டிற்குச் சென்று விடுவது, தூய்மைப் பணியாளர்களை வீட்டிற்கு பெயிண்ட் அடித்தல், ஒட்டறை அடித்தல் போன்ற தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்துவது, புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதற்காக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை லஞ்சம் வாங்குவது போன்ற விதிமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதனைக் கண்டித்தும், சரவணபிரியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த நவம்பர் 19 அன்று தூய்மைப் பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, சரவண பிரியாவை நீக்கிவிட்டு, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரை இருப்பிட அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “நாங்கள் கொரோனா காலத்திலிருந்து இங்கு உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறோம். இனியாவது எங்களுக்கு விடிவுகாலம் வர வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
படிக்க: தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1
முக்கியமாக, அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை நியமிக்காமலும், மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் உட்பட மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களை ஒப்பந்த முறையில் மட்டுமே நியமித்தும், ஆளும் தி.மு.க. அரசு மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கி. கடந்த ஒரு வாரத்தில் மருத்துவர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டது இதனை உறுதிப்படுத்துகின்றது.
இதன் விளைவாக, தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அற்ப கூலிக்கு வேலைக்கு நியமித்து, அவர்களை அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தி, உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களின் தூய்மைப் பணியை ராம்கி கார்ப்பரேட் நிறுவனத்திடம் தாரைவார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனால் தூய்மைப் பணியாளர்கள் உடல்நலக் குறைபாடுகளுக்கும், உளவியல் பாதிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு உரிய உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்க எந்த சட்டங்களும் செயல்படுத்தப் படுவதில்லை. அப்படி சொல்லிக்கொள்ளப்பட்ட சட்டங்களும் எதார்த்தத்தில் எந்த பயனும் அளிப்பதில்லை.
எனவே, தங்களின் உடனடி கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிராகவும் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து போராட வேண்டும். இப்போராட்டத்திற்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











