COP-30 மாநாடு எனும் கேலிக்கூத்து!

காப்-30 மாநாடு நடக்கும் இடத்தில், அமேசான் பழங்குடி மக்கள் தங்களது நிலம், வனம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் “நம் வனம் விற்பனைக்கு அல்ல” என்று பதாகைகளை ஏந்தி போராடினார்கள்.

புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து உலகளவில் காலநிலை மாற்றம் இன்று மிகப் பெரிய மனித நெருக்கடியாக மாறியுள்ளது.

இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் கடுமையான வெப்ப அலைகள் (கலிபோர்னியா காட்டுத்தீ, ஜப்பான் ஒயிட்டா காட்டுத்தீ, பிரேசில், பெரு போன்ற நாடுகளில் காட்டுத்தீ), மோசமான வெள்ளப் பெருக்குகள் (வியட்நாம் வெள்ளப்பெருக்கு, சகாரா பாலைவன வெள்ளப்பெருக்கு), நீண்டகால வறட்சி (ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள்), பனிக்கட்டிகள் உருகல் (அண்டார்டிகா), கடல் மட்ட உயர்வு (இந்தோனேசியா, நியூ ஜெர்சி போன்ற நாடுகள்), காடுகள் அழித்தல் (அமேசான் மழை காடுகள், இந்தோனேசியா வடக்கு சுமேரியா காடுகள்), நிலநடுக்கம் (ஆப்கானிஸ்தான், நேபாள்), சூறாவளி தாக்குதல், மழை நேர மாற்றம், காற்று மாசுபடுதல் போன்ற சூழலியல் பேரழிவு சம்பவங்கள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளன.

கார்பன் உமிழ்வு கடந்த காலத்தை விட பல மடங்கு அதிகரித்திருப்பதே புவி வெப்பமயமாதலுக்கும் அதனால் ஏற்படும் காலநிலை  மாற்றத்திற்கும் முக்கிய காரணமாகும். தொழில்துறை வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கட்டற்ற உற்பத்தி மற்றும் லாபவெறி, அதற்காக இயற்கை – கனிம வளங்கள் சூறையாடப்படுவதே இதற்கு மூலகாரணங்களாக உள்ளன. இந்த காலநிலை மாற்றம் ஒரு அறிவியல் வார்த்தை மட்டுமல்ல, உலக மக்கள், விவசாயம், உணவு அமைப்பு, உயிரினங்கள், பொருளாதாரம் மற்றும் மனித வாழ்வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நெருக்கடி நிலையாக உள்ளது. மனிதன் இந்த பூமியில் வாழ முடியாத அளவுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

இந்தளவிற்குப் பூமியை நாசமாக்கிவரும் முதலாளித்துவம் காலநிலை மாற்றத்திற்குச் சரியான தீர்வை முன்வைக்காமல், ஆண்டுதோறும் பல்வேறு மாநாடுகளை நடத்தி மக்களை ஏய்த்து வருகிறது. அதில் ஒன்றுதான் “ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றச் சட்டக் கட்டமைப்பு உடன்படிக்கை” (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் காப் (COP – Conference of the Parties) மாநாடு. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடைபெற்றுவரும் இந்த காப்  மாநாடுகளில், வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் காலனி நாடுகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், உலகத் தலைவர்கள் கலந்துகொள்வர்.

இந்தாண்டு அமேசான் மழைக்காடுகள் இருக்கின்ற பிரேசிலில் உள்ள பெலம் (Belém)  நகரத்தில் நவம்பர் 10 முதல் நவம்பர் 21 வரை காப் 30 மாநாடு நடைபெற்றது. பிரேசிலின் அமைச்சர் ஆண்ட்ரே கொர்ரியா டு லாகோ காப் 30 மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இந்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், ஐரோப்பிய கமிஷன் தலைவர், ஐரோப்பிய கவுன்சில் தலைவர், சீன பிரதிநிதிகள், அமெரிக்க பிரதிநிதிகள் போன்றோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். மேலும்,  அமேசான் பகுதியின் பூர்வகுடி தலைவர் சோனியா குவாஜஜாரா, பிரேசிலின் பூர்வகுடி உரிமை தலைவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் காப் மாநாடு கூடினாலும் அதில் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு உருப்படியான முடிவும் எடுக்கப்படுவதில்லை. கண்துடைப்பாக சில முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டாலும், அதனை ஏற்க எந்த நாடும், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் தயாராக இல்லை. சான்றாக, கடந்தாண்டில் அஜர்பைஜான் நாட்டில் நடந்த காப் 29 மாநாட்டில், வளர்ந்த நாடுகள் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களைத் தடை செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், எண்ணெய் ஏற்றுமதியைப் பிரதானமானதாகக் கொண்டுள்ள அஜர்பைஜான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் எண்ணெய் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தன.

இந்நிலையில், இந்தாண்டு காப் 30 தலைவர் ஆண்ட்ரே கொர்ரியா டு லாகோ, “மாநாட்டில் புதிய வாக்குறுதிகள் அறிவிப்பதைவிட (Negotiation) ஏற்கெனவே உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள தீர்வுகளையும், ஒப்பந்தங்களையும் அமல்படுத்துவது (Implementation) முக்கிய கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். “ஒரு ஒப்பந்தத்தை எழுதுவது மிகவும் கடினம். ஆனால், அதே ஒப்பந்தத்தைப் பயன்படுத்திச் செயல்படுத்துவதுதான் முக்கியமானது. இந்த ஆண்டில் நாம் உருவாக்கும் உரையை வைத்துச் செயல்பட முயற்சி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

அதாவது, காப் மாநாட்டின் தீர்மானங்களையும் முன்மொழிவுகளையும் அதில்  பங்கேற்கும் நாடுகளே கழிவறை காகிதமாகக் கூட மதிப்பதில்லை என்பதால், புதிய ஒப்பந்தங்களைப் போடுவதற்கு முன்பாக, முன்னதாக போட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியைக் காக்கப் போவதாகச் சொல்லப்பட்ட காப் மாநாடுகள் எந்தளவிற்குக் கேலிக்கூத்தானவை என்பதையும், இம்மாநாடுகள் முதலாளித்துவவாதிகளின் மற்றொரு அரட்டை என்பதையும் இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


படிக்க: COP29: நடந்து முடிந்த ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கூத்து


2015-ஆம் ஆண்டு காப்-21 மாநாட்டில் உருவான பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்து வளர்ந்த, வளரும் நாடுகளும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டன. ஆனால், எந்த நாடும் தான் ஒப்புக்கொண்டதை இம்மி அளவு கூட கடைப்பிடிக்கவில்லை.

அதேபோல், பாரிஸ் ஒப்பந்தத்தில் 2030-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை காலநிலை நிதியாக அமெரிக்கா (பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது) வழங்க வேண்டும் என்று அனைத்து நாடுகளாலும் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால், அமெரிக்க பாசிச டரம்ப் அரசு, இந்த ஐக்கிய நாடு காலநிலை மாற்ற கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக இம்மாநாட்டில் அறிவித்துவிட்டது. மேலும், காலநிலை மாற்றம் என்பதே ஒரு ஏமாற்று என்று பாசிஸ்ட் டிரம்ப் திமிர்த்தனமாக பேசி வருகிறார்.

ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கள் சுயநலத்திற்காக, லாபவெறிக்காக மிகை உற்பத்தி செய்து இயற்கையையும் சுற்றுச்சூழலையும் நாசப்படுத்திவிட்டு, இதற்கெல்லாம் காரணம் நாங்கள் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து நாடுகளும்தான் என்று கைகாட்டுகின்றன.

ஆனால், “புவி வெப்பமயமாதலை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள நாடுகளின் முயற்சிகள் போதுமானதாக இல்லை. அதனை இப்போது நடைமுறைப்படுத்தினாலும் வெப்பநிலை உயர்வு 2.6 டிகிரி செல்சியஸ்க்கு மேல் செல்ல வாய்ப்பு உள்ளது” என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், கேலிக்கூத்தான இம்மாநாடுகளின் ஒப்பந்தங்கள் எதுவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவாது என்பதை தங்களின் சொந்த அனுபவங்களிலிருந்து உணர்ந்துகொண்ட சமூக செயற்பாட்டாளர்கள், பூர்வகுடி மக்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தாண்டும் காப்-30 மாநாடு நடக்கும் இடத்தில், அமேசான் பழங்குடி மக்கள் தங்களது நிலம், வனம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர். முண்டுருகு இனப்பள்ளியின் உறுப்பினர்கள் முதன்மை இடத்தில் இருந்து இப்போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். அவர்கள் “நம் வனம் விற்பனைக்கு அல்ல” என்று பதாகைகளை ஏந்தி போராடினார்கள்.

உலகின் பல நாடுகளில் ஆளும் முதலாளித்துவ அரசுகள் தங்களது சொந்த மக்களையே காலநிலை அகதிகளாக மாற்றிக்கொண்டு வருகின்றன. அதிலும், இந்தியா, அமெரிக்கா, துருக்கி உட்பட உலகின் பல நாடுகளிலும் பாசிச சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றி இயற்கை-கனிம வள சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.

இயற்கை நமக்கு அளித்த கொடையான பூமியைச் சீரழிக்கின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் பல்வேறு உயிரினங்களை அழித்தொழித்துவிட்டு தற்போது மனிதக்குலத்தையும் அழிப்பதற்குத் துடித்துக் கொண்டிருக்கின்றன. நிலம், நீர், காற்று என அனைத்தையும் நாசப்படுத்தி விட்டு விண்வெளியிலும் பல டன் குப்பைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

எனவே, பூமியைச் சூறையாடுகின்ற முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து விட்டு, முறையான சர்வதேச பொருளாதார ஒழுங்கை கொண்ட, அறிவியலை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துகின்ற, மனித வாழ்க்கையை அடுத்தகட்டமாக வளர்த்தெடுக்கக்கூடிய, தேவைக்கேற்ப உற்பத்தியை மேற்கொள்கின்ற சோசலிச சமூக அமைப்பால் மட்டுமே மனிதகுலத்தை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து வாழவைக்க முடியும்.


காலா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க