வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.

0

ங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் நூறு நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் கீழ் உள்ள திரு.வி.க நகர், ராயபுரம் (5 மற்றும் 6) மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் ரிப்பன் கட்டடம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தைக் கண்டு அச்சமடைந்த தி.மு.க அரசு ஆகஸ்ட் 13- ஆம் தேதி இரவு போலீசைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. ஆனால் அனைத்து ஒடுக்குமுறைகளையும் மீறி 100 நாட்களுக்கு மேலாக உறுதியுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் 100-வது நாளை நெருங்கிய நிலையில் தூய்மைப் பணியாளர்கள் “வேண்டாம் தனியார்மயம்! வேண்டும் பணிநிரந்தரம்!” என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 5- ஆம் தேதியன்று மெரினா கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசு கைது செய்து பின்னர் விடுவித்தது..

ஆனால் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல், தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற அனுமதியுடன் நவம்பர் 17-ஆம் தேதி முதல் அம்பத்தூரில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஜெனோவா, பாரதி, கீதா மற்றும் வசந்தி ஆகிய நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல்நிலையும் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. ஆனால் தூய்மைப் பணியாளர்களுடன் தற்போது வரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல், அவர்களது உயிர்மீது அக்கறை காட்டாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டு வருகிறது, தி.மு.க அரசு.

தூய்மைப் பணி தனியார்மயமாக்கலைத் தடுப்பதும் பணி நிரந்தரமும்தான் போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகளாகும். ஆனால், இவற்றை நிறைவேற்றுவதற்கு மாறாக, சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிப்பறை வசதி செய்து தரப்படும்; மூன்று வேளை உணவு வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளை தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை இந்த அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.

இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் 116-வது நாள் (நவம்பர் 22) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி “மண்டலங்கள் 4 மற்றும் 8 ஆகியன 4,000 கோடிக்கு தனியார் நிறுவனத்திடம் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தி.மு.க அரசின் கார்ப்பரேட் திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் “நூறு நாட்களுக்கு மேலாக போராடி வருவதால் எங்கள் வீட்டுக்கு வாடகை கட்ட முடியவில்லை. வீட்டை காலி செய்ய சொல்லீட்டாங்க; பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியல. சாப்பாட்டுக்கே வழி இல்லாம இருக்கோம். எங்களோட பிள்ளைங்க படிப்பு நிறுத்திட்டு வேலைக்கு போயிட்டு இருக்காங்க. ஸ்டாலின் ஐயா பணிநிரந்தரம் பண்ணுவாருன்னு ஒட்டு போட்டோம். ஆனா இன்னைக்கு தெருவில் நிற்கிறோம். சாப்பாடு எல்லாம் வேண்டாம்! பணி நிரந்தரம் செய்தால் போதும்” என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக வேலை இழந்து தங்களது உரிமைகளுக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களுக்கு மக்களே தாமாக முன்வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இது உழைக்கும் வர்க்கத்திற்கே உரித்தான வர்க்க ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.

எனவே தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக நடைபெறுகின்ற தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஒன்றிணைந்த மாநிலம் தழுவிய போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும், ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதன் மூலமே தி.மு.க அரசைப் பணிய வைத்து, தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்தி, தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்ப்பந்திக்க முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க