இம்மாத தொடக்கத்திலிருந்து இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் ஆயிரக்கணக்கான விமானங்களை இரத்து செய்து லட்சக்கணக்கான மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. டிசம்பர் 5-ஆம் தேதி மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்தது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் திருமணம், தேர்வு, மருத்துவம் போன்ற அவசியத் தேவைகளுக்கு திட்டமிட்ட நாளில் செல்ல முடியாமல் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த விமான இரத்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த உறவினர்களை கடைசியாக உயிருடன் பார்க்க முடியாமல் போனது; கணவனின் உடலை சவப்பெட்டியில் வைத்துக்கொண்டு காத்திருந்தது; மாதவிடாயான பெண் குழந்தைகளுக்கு நாப்கின் கிடைக்காமல் பெற்றோர்கள் அழுது புலம்பியது போன்ற அவலங்களும் கொடுமைகளும் அரங்கேறின.
இண்டிகோ விமானங்கள் இரத்தானதால், உடனடித் தேவைகளுக்காக பிற நிறுவன விமானங்களில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் பயணச்சீட்டு விலையை பன்மடங்கு உயர்த்தி மக்களிடமிருந்து கொள்ளையடித்தன.
000
கடந்தாண்டு ஜனவரியில் இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA), விமான விபத்துகளைத் தடுப்பதற்கும், விமானிகள் மற்றும் விமானக் குழுவினரின் சோர்வைக் குறைப்பதற்கும் “விமான பயண நேர வரம்பு விதி”களை (Flight Duty Time Limitation – FDTL) அறிவித்தது. இவ்விதிகள் ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக அமலாகும் என்று அறிவித்திருந்தது.
விமானிகளின் வாராந்திர ஓய்வு நேரம் 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக உயர்வு; இரவு நேர தரையிறங்கல்கள் (Night landings) வாரத்திற்கு 6-லிருந்து 2-ஆக குறைப்பு; ஒரு விமானியை தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேல் இரவு நேரப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது உள்ளிட்டவை புதிய பாதுகாப்பு விதிகளில் அடங்கும். கடந்த ஜூன் மாதத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது இப்புதிய விதிகளின் தேவையை மேலும் வலியுறுத்தியது. இதனையடுத்து, விமானங்களை இயக்குவதற்கு கூடுதல் விமானிகளை பணியமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏர் இந்தியா, அகாசா போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டன
படிக்க: அகமதாபாத் விமான விபத்து: கார்ப்பரேட் கிரிமினல்களின் லாபவெறியே காரணம்
ஆனால், விமானப் போக்குவரத்தில் 65 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்தும் இண்டிகோ நிறுவனத்தின் லாபவெறிக்கு புதிய பாதுகாப்பு விதிகள் தடையாக அமைந்தன. எனவே, விமானங்களை இயக்குவதற்கு முறையாக திட்டமிடாமலும் கூடுதல் விமானிகளை பணியமர்த்தாமலும் டிசம்பர் 1 முதல் திட்டடமிட்டே விமானங்களை இரத்து செய்தது இண்டிகோ நிறுவனம். இதனால் ஏற்பட்ட நெருக்கடி தற்செயலானது என்று இண்டிகோ நிறுவனம் அப்பட்டமாக பொய்யுரைத்தது. ஆனால், இது இண்டிகோ நிறுவனத்தால் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட நெருக்கடி என்பதை விமானிகள் சங்கங்களே அம்பலப்படுத்தின.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான இரத்தால், இந்திய விமானப் போக்குவரத்தே முடங்கிப் போனது. குறிப்பாக, விமானப் போக்குவரத்தில் மிகப்பெரும் சந்தையை கொண்டுள்ள அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலேயே, விமான நிறுவனங்கள் 25 சதவிகிதத்திற்கு அதிகமான விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில்லை. ஆனால், இந்தியாவில் இண்டிகோ என்ற ஒற்றை நிறுவனம் இந்திய விமானப் போக்குவரத்தில் 65 சதவிகிதத்தை கட்டுப்படுத்தி ஏகபோகமாக (Monopoly) திகழ்ந்து வருகிறது. தினந்தோறும் 2,300 விமானங்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கி வருகிறது.
மறுபுறம், இந்திய விமானத் துறையிடமிருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனத்திடம் விற்ற மோடி அரசு, இந்த நெருக்கடி நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில், இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்து, இண்டிகோ விமான நிறுவனத்திற்கு மட்டும் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை புதிய விதிகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
இது, விமானிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை கைவிட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் லாப வெறிக்கு வழியமைத்துக் கொடுக்கும் நாசகர செயல் என்று விமானிகள் சங்கங்கள் (ALPA, FIP) எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இண்டிகோவிற்கு அளிக்கப்பட்ட விலக்கை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் 2024-இல் வெளியிட்ட தரவுகளின்படி, இண்டிகோ விமான நிறுவனத்தை இயக்கும் இண்டர்குளோப் (Interglobe) குழுமம், ரூ.36 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி வந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இண்டிகோ நிறுவனம் ஏகபோகமாக வளர்ந்திருப்பது, புதிய பாதுகாப்பு விதிகளிலிருந்து இண்டிகோவிற்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டிருப்பது போன்ற மோடி அரசின் சேவைகளுக்கு பின்னணியில் இந்த தேர்தல் பத்திரங்களே உள்ளன என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.
எனவே, லட்சக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரும் இழப்புகளை ஏற்படுத்திய இண்டிகோ விமான நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும். ஏர் இந்தியா விமானத்துறையை டாடா நிறுவனத்திடமிருந்து திரும்பபெற வலியுறுத்தியும், பாசிச மோடி அரசின் கார்ப்பரேட்மய நடவடிக்கைக்கு எதிராகவும் விமானிகள், விமானக் குழுவினர், மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே விமானப் போக்குவரத்தில் பாதுகாப்பான பயணத்தை உத்தரவாதம் செய்ய முடியும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











