உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ கட்டமைப்பு

முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.

லகில் 90 சதவீத மக்களின் வருமானத்தைக் காட்டிலும் வெறும் 10 சதவீத நபர்களின் வருமானம் அதிகமாக உள்ளது. உலகில் உள்ள பாதியளவு மக்களைக் காட்டிலும் வெறும் 60,000 பேர் அதிக செல்வங்களைக் கட்டுப்படுத்துகின்றனர். இதன் பொருள், உலகின் மொத்த மக்கள்தொகையான 820 கோடியில், அடித்தட்டில் உள்ள 410 கோடி மக்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிக செல்வங்களை மேல் தட்டில் உள்ள இந்த 60,000 பேர் கட்டுப்படுத்துகின்றனர். இவற்றைச் சமீபத்தில் வெளியான ”உலக சமத்துவமின்மை அறிக்கை, 2026” அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதார நிபுணர்களான லூகாஸ் சான்சல், ரிக்கார்டோ கோம்ஸ் – கரேரா, ரொவைடா மோஷ்ரிஃப் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு பாரிஸ் நகரில் இயங்கும் உலக சமத்துவமின்மை ஆய்வகம் (World Inequality Lab) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பெருகிவரும் ஏற்ற தாழ்வுகள் குறித்து ஏழு முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1. அதிதீவிர உலகளாவிய செல்வ ஏற்றத்தாழ்வு இருப்பது மட்டுமல்லாமல், அது அதிகரித்துக் கொண்டும் வருகிறது

செல்வம் மற்றும் வருமானம் குறித்து நாம் விவாதித்தோம் என்றால், விளிம்பில் வாழும் 50 சதவீத உலக மக்கள் தொகையினர் வெறும் 2 சதவீத செல்வங்களையும் 8 சதவீத வருமானத்தையும் ஈட்டுகின்றனர். வெறும் 0.001% பேரின் கட்டுப்பாட்டில் உள்ள செல்வத்தின் அளவு தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது. இது 1995 ல் சுமார் 4 சதவீதமாக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் சுமார் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2. இந்தியா குறித்து

உலக அளவில் இந்தியா மிகவும் ஏற்றத்தாழ்வான நிலையைக் கொண்ட நாடாக உள்ளது. இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்புகளும் தெரியவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “முதல் 10 சதவீத பணக்காரர்கள் நாட்டில் 58 சதவீத வருமானத்தை வைத்துள்ளனர் எனவும், விளிம்பு நிலையில் இருக்கும் 50 சதவீத மக்கள் வெறும் 15 சதவீத வருமானம் மட்டும் ஈட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைவிட, செல்வங்களைக் கட்டுப்படுத்துபவர்களின் விகிதம் இன்னும் அதிக வேறுபாட்டைக் கொண்டுள்ளது. 10 சதவீத பணக்காரர்கள் 65 சதவீத செல்வங்களைக் கொண்டுள்ளதாகவும் அதிலும் உச்சபட்சத்தில் இருக்கும் 1 சதவீத பணக்காரர்கள் 40 சதவீத செல்வங்களைக் கொண்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

3. காலநிலை மாற்றம்: முறையற்ற உமிழ்வுகள், ஏற்றத்தாழ்வான பாதிப்புகள்

உலகின் ஏழ்மையான 50 சதவீத மக்கள், கார்பன் உமிழ்வுகளில் வெறும் 3 சதவீதத்திற்கு மட்டுமே காரணமாக உள்ளனர். ஆனால், அதேசமயம், முதல் 10 சதவீதத்தினர் கார்பன் உமிழ்வுகளில் 77 சதவீதத்திற்குக் காரணமாக உள்ளனர். ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து செல்வந்தர்கள் ஓரளவிற்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்; காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் அபாயங்களின் முழுச் சுமையையும் விளிம்புநிலை மக்களே சுமக்கின்றனர்.

4. பெண் தொழிலாளர்களின் வருமானம் 1990-களைப் போலவே இன்றும் உயரவில்லை

“அதிக உழைப்பில் பெண்கள் ஈட்டுப்பட்டும் ஆண்களைக் காட்டிலும் குறைவான வருமானத்தையே ஈட்டுகின்றனர்.

ஊதியம் கொடுக்கப்படாத வேலையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால், ஆண்களின் ஒரு மணிநேர வருமானத்தில் 60 சதவீதம் மட்டுமே பெண்கள் சம்பாதிக்கின்றனர். இதேபோல், ஊதியம் இல்லாத உழைப்பையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை உலக அளவில் 32 சதவீதமாக உள்ளது. இந்த சமநிலையற்ற தன்மை பெண்களின் தொழில் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகிறது; அரசியல் பங்கேற்பைக் குறைக்கின்றது; சேமிப்பை மெதுவாக்குகின்றது என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

5. பிராந்திய வாரியான ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது

உலகளாவிய அளவில் வருமான சராசரிகள், மலைக்கும் மடுவுக்கும் என்கிற விகிதத்தில் உள்ளது. “வட அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் சராசரி தினசரி வருமானம் சுமார் 125 யூரோக்களாக உள்ளது. ஆனால், சகாரா மற்றும் துணை சகாரா ஆப்பிரிக்காவில் இது வெறும் 10 யூரோக்களாக உள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திற்குள்ளும் பல மக்கள் இதைவிட மிகக் குறைந்த வருமானத்திலே வாழ்கின்றனர்.

6. உலக நிதி அமைப்பு செல்வந்த நாடுகளுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது

பிராந்திய ஏற்றத்தாழ்வு நீடிப்பது என்பது தற்செயலானது இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “உலகளாவிய பொருளாதார கட்டமைப்பு ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. கையிருப்பு நாணயங்களை உருவாக்கும் நாடுகள் குறைந்த விலையில் கடன் வாங்குவது; அதிக வட்டிக்கு கடனளிப்பது; உலக சேமிப்புகளை ஈர்ப்பது என உள்ளது. இதற்கு மாறாக, வளர்ந்துவரும் நாடுகளுக்கு அதிக வட்டியுடனான கடன், குறைந்த வருமானம் தரும் சொத்துகள், மற்றும் வருமானம் குறைவது என மிகுந்த வேறுபாடாக உள்ளது”

“சந்தை செயல்திறன்” இதனை முடிவு செய்வதில்லை என அறிக்கை கூறுவதுடன் “நிறுவன அமைப்பே கையிருப்பு நாணயங்களை உருவாக்குபவர்களுக்கு உலகளாவிய பொருளாதார அமைப்புக்கு மையமாக இருப்பவர்களுக்கு அவர்கள் அதிக செல்வம் ஈட்டுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது” என அறிக்கை மேலும் கூறுகிறது.

7. முற்போக்கான வரிவிதிப்பு மற்றும் உலகளாவிய செல்வ வரி விதிப்பது

முறையாக வடிவமைக்கப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் முற்போக்கான வரிவிதிப்பு மற்றும் மறுவிநியோக நடவடிக்கைகள் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மனித மூலதனத்தில் செய்யப்படும் செலவுகள் நாடுகளுக்கு நாடு வேறுபடுகிறது. அதிகமாக வரி செலுத்த இயலும் பணக்காரர்களை வரி அமைப்புகள் இலக்கு வைக்கத் தவறுவது ஏற்றத்தாழ்வு நீடிக்கக் காரணம் என அறிக்கை கூறுகிறது. “பெரும்பாலான மக்களுக்கான வருமான வரி விகிதங்கள் படிப்படியாக உயருகின்றன. ஆனால், கோடீசுவரர்களுக்கு என்று வந்தால் திடீரென குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களை விட வரி விகிதம் குறைந்து விடுகிறது.

இந்த தன்மையுடைய வரிமுறை பின்னடைவை ஏற்படுத்துகின்றது, கல்வி, சுகாதாரம், காலநிலை நெருக்கடிகள் போன்ற அத்தியாவசிய முதலீடுகளுக்கு அரசினால் போதுமான நிதி ஒதுக்க முடியாமல் போகிறது. மேலும், வரி அமைப்பின் மீது உள்ள நம்பிக்கையைக் குறைத்து, நீதி மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதிக்கிறது. எனவே முற்போக்கான வரிவிதிப்பு மிகவும் அவசியம்; அது பொது நலச் சேவைகளுக்கான வருவாயைத் திரட்டுவதோடு, ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும், அதிக வளம் கொண்டவர்களுக்கு தங்களுக்குரிய நியாயமான பங்கைக் கொடுப்பதை உறுதி செய்வதன் மூலம் நிதி அமைப்புகளின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த முடியும்”.

“மேலும், ஒரு இலட்சத்திற்கும் குறைவான செல்வந்தர்களுக்கு மிதமான 3 சதவீத உலகளாவிய வரி விதித்தாலே ஆண்டுக்கு 750 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் கிடைக்கும். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் மொத்த கல்வி பட்ஜெட்டுக்கு இணையான தொகையாகும் என அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

உலகளாவிய ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இந்த நிலைமையைச் சரிசெய்ய முடியும் என அறிக்கை முன்வைக்கிறது. “ஏற்றத்தாழ்வு என்பது ஒரு அரசியல் தேர்வு. நமது கொள்கைகள், நிறுவனங்கள், மற்றும் அரசின் கட்டமைப்பு போன்ற காரணங்களால் இவை ஏற்படுகிறது. பிளவுகள் அதிகரிப்பது, பலவீனமான ஜனநாயகம், காலநிலை நெருக்கடி போன்றவை இதனால் வலுவடைகிறது.

எங்கு செல்வப் பகிர்வு வலுவாக உள்ளதோ, வரிவிதிப்பு நியாயமாக இருக்கிறதோ, சமூக முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதோ, அங்கு ஏற்றத்தாழ்வு குறைகிறது. அதற்கான கருவிகள் நம்மிடம் உள்ளன. ஆனால், கேள்வி என்னவென்றால் அரசியல் நிலைத்தன்மையைச் சரிசெய்ய வரும் ஆண்டுகளில் நாம் எடுக்கும் முடிவுகள் தான் உலகப் பொருளாதாரம் தீவிரமான செல்வக் குவிப்பு பாதையில் தொடருமா அல்லது செல்வம் பகிரப்படுவதை நோக்கி நகருமா என்பதைத் தீர்மானிக்கும் என அறிக்கை கூறுகிறது.

சமீபத்தில் வெளியான “உலக பட்டினி குறியீடு, 2025” உலகளவில் போர், அரசியல் நிலைத்தன்மையின்மை, சுற்றுச்சூழல் நெருக்கடி, கட்டாய இடப்பெயர் போன்ற காரணங்களால் பட்டினி பேரழிவை நோக்கி ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன எனவும் இந்தியா பட்டினி பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனவும் அம்பலப்படுத்தியது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள “உலக சமத்துவமின்மை அறிக்கை, 2026” ஏற்றத்தாழ்வு நிலையை அம்பலப்படுத்துகிறது. முதலாளித்துவம் தீராத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி வருகிறது என்பதையே மேற்குறிப்பிட்ட அறிக்கைகள் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன.

முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.

முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!

நன்றி: தி வயர்


சையத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க