எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.

ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் “டூன் எத்தனால் பிரைவைட் லிமிடெட்” (Dune Ethanol Private Limited) எனும் நிறுவனம் ராதிகேடா கிராமத்தில் எத்தனால் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இத்தொழிற்சாலை ஆசியாவிலே பெரியளவில், ரூ.450 கோடி பொருட்செலவில், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டப்படவுள்ளது என்றும் ஒன்றிய அரசின் எத்தனால் கலந்த பெட்ரோல் (Ethanol Blended Petrol) திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இத்தொழிற்சாலை தங்களது விவசாய நிலங்கள், குடிநீர், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைப் பாதிக்கும் என்று கூறி கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த ஜூன் 2025 வரை விவசாயிகள் அமைதியான வழியில் போராடியும் அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தும் வந்தனர். ஆனால், கடந்த ஜூலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி நிறுவனம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. ஆனால், விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக நவம்பர் 19-ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு போலீசின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டது.

ஆனால், விவசாயத் தலைவர்களை போலீசு கைது செய்தது, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என எழுத்துப்பூர்வமாக அறிவிக்காதது போன்றவை விவசாயிகளை ஆத்திரமூட்டியது. இதனையடுத்து, டிசம்பர் 10-ஆம் தேதி “மகாபஞ்சாயத்து” மூலம் மிகப்பெரிய போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, விவசாயிகள் தொழிற்சாலையை நோக்கி பேரணியாகச் சென்று தொழிற்சாலை சுவர்களை இடித்து தீ வைக்கத் தொடங்கினர். இதனைக் கட்டுப்படுத்த போலீசு இறக்கப்பட்ட நிலையில் விவசாயிகளை அது மேலும் ஆத்திரமூட்டியது.

இதன் காரணமாக, போலீசிற்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் உருவானது. போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.

போலீசின் தாக்குதலில் பெண்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு புனியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் மூடப்பட்டன. இப்பகுதியில் போலீசு இணையத்தை முடக்கியுள்ளது. இச்சம்பவத்தில் 107 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 பேர் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!


இதுகுறித்து பேசியுள்ள அனுமன்கர் மாவட்ட ஆட்சியர் குஷால் யாதவ், “தொழிற்சாலை அமைப்பதற்கான அனைத்து அனுமதிகளையும் நிறுவனம் வாங்கிவிட்டது. இத்திட்டத்திற்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற “ரைசிங் ராஜஸ்தான்” மாநாட்டில் (Rising Rajastan Summit, 2022) அனுமதி கொடுக்கப்பட்டது” என்று நாசகர தொழிற்சாலைக்கு ஆதரவாகப் பேசினார்.

மேலும், “அமைதியான முறையில் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ‘சமூக விரோத சக்திகள்’ தடை உத்தரவுகளை மீறி தொழிற்சாலையை நோக்கி பேரணியாகச் சென்றனர். மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று விவசாயிகளுக்கு விரோதமாகக் கருத்து தெரிவித்தார்.

ஆனால், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பு தலைவர்கள் இப்போராட்டத்திற்கும் போராடிய விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மகாபஞ்சாயத்தில் பேசிய தலைவர்கள், “தொழிற்சாலை நீர் ஆதாரங்கள், நிலங்களை மாசுபடுத்தும். தொழிற்சாலை வந்தால் வருங்காலம் பாழாகிவிடும்” என்று வலியுறுத்தினர். தொழிற்சாலையை மாற்று இடத்தில் அமைக்கும்படி கோரிக்கை வைத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக டிபி நகர கடைக்காரர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலை அகற்றும் போராட்டக் குழுத் தலைவர் ரவ்ஜோட் சிங், “70 பேர் காயமடைந்துள்ளனர். 100 விவசாயிகள் குருத்துவாராவில் இரவு முழுக்க இருந்தனர். அடுத்த நாள் போராட்டத்திற்கு அதிகம் பேர் இணைந்து கொள்வார்கள்” என உறுதிப்படக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ஷப்னம் கோதாரா, “கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வழங்க அதிகாரிகள் மறுத்ததால், நிலைமை மோசமடைந்தது. வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறி அதிகாரிகள் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்” என கலவரத்திற்குக் காரணமான நிர்வாகத்தையும் அதிகார வர்க்கத்தையும் குற்றஞ்சாட்டினார்.

தற்போது, விவசாய பிரதிநிதிகளுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு, உள்ளூர் மக்களிடம் சம்மதம் உறுதி செய்யப்படும் வரை, அத்தொழிற்சாலை இயங்க அனுமதிக்கப்படாது என்று விவசாய அமைப்பினர் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்கும் (E20 பெட்ரோல்) திட்டமானது முழுக்க முழுக்க அதானி – அம்பானி வகையறா கார்ப்பரேட்களின் நலனை மையப்படுத்திய, விவசாய விரோத, சுற்றுச்சூழல் விரோதத் திட்டமாகும். பெட்ரோலில் எத்தனால் பயன்பாட்டை 2025-ஆம் ஆண்டிற்குள் 20 சதவிகிதமாகவும் 2030-ஆம் ஆண்டிற்குள் 30 சதவிகிதமாகவும் அதிகரிக்கும் இத்திட்டத்தால், உணவு பாதுகாப்பு கேள்விக்குள்ளாவது, வாகனங்களின் பயன்பாட்டுக் கால அளவு குறைவது, எத்தனால் தயாரிப்பிற்கு அதிகப்படியான நீர் தேவை போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

இந்நிலையில்தான், கார்ப்பரேட்களின் நலனிற்காக தங்களது நிலங்களை இழக்க முடியாது என்பதை உணர்ந்து இராஜஸ்தான் அனுமன்கர் விவசாயிகள் உறுதியாகப் போராடி வருகின்றனர். போராடுகின்ற விவசாயிகளுக்கு புரட்சிகர – ஜனநாயக சக்திகள் ஆதரவு தெரிவிப்பதோடு, விவசாயிகள் பொருளாதாரத்தை வலியுறுத்தும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்காகவும் போராட வேண்டியுள்ளது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க