போராடிய ஒப்பந்த செவிலியர்களைக் கைது செய்த தி.மு.க அரசு! வேண்டும் ஜனநாயகம்!

கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும், பெண் செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும் மனிதாபிமானமற்ற முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசைக் கொண்டு கைது செய்து அடாவடித்தனமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, அங்கிருந்து ஊருக்கு போகும்படி தெரிவித்துள்ளது.

0

டிசம்பர் 18 ஆம் தேதியன்று சம வேலைக்கு சம ஊதியம், உள்ளிட்ட தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை இரவோடு இரவாக தி.மு.க அரசு கைது செய்துள்ளது. அது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். தேர்தல் வாக்குறுதி 356-இன் படி தி.மு.க அரசு அனைத்து செவிலியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

உண்ணாநிலைப் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின், “மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 2015-ஆம் ஆண்டில் பணி வழங்கும் போது, 2 ஆண்டுகள் தொகுப்பூதியம், அதன் பின்னர் பணி நிரந்தரம் என ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 9 ஆண்டுகளைக் கடந்தும் பணி நிரந்தரம் இல்லாமல் 8,000 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

“2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எங்களுக்குச் சாதகமான, சமவேலைக்கு சம ஊதியம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

“மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரோனா காலத்தில் பணியாற்றி வெளியே சென்ற செவிலியர்களுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்கி உள்ளதாகவும், அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கப் போகின்றனர் எனக் கூறியிருந்தார். ஆனால் கொரோனா காலத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர்கள் ஒரே நாளில் இரவோடு இரவாக பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கினர். மற்றவர்களுக்கு இன்னும் பணி வழங்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒரு தேர்வு கூட நடத்தப்படவில்லை” என்று தி.மு.க அரசின் செவிலியர்கள் விரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஒப்பந்த செவிலியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள்:

  • சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
  • செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.
  • கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
  • பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
  • செவிலியர்களுக்கு 7, 14 , 20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும்.
  • அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும்.
  • எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
  • கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ. 18,000 ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.


படிக்க: தூய்மைப் பணியாளர்கள் கோருவது உணவா? உரிமையா?


ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க அரசு, தூய்மைப் பணியாளர்களைக் கையாண்டதைப் போன்று போலீசை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை இரவு 7.30 மணி அளவில் கைது செய்யத் தொடங்கியது. கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும், பெண் செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும் மனிதாபிமானமற்ற முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசைக் கொண்டு கைது செய்து அடாவடித்தனமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, அங்கிருந்து ஊருக்கு போகும்படி தெரிவித்துள்ளது. ஆனால் ஊருக்குச் செல்ல மறுத்து செவிலியர்கள் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்சாரத்தைத் துண்டித்து செவிலியர்களை அச்சுறுத்தியிருக்கிறது போலீசு. ஆனால் அனைத்து அடக்குமுறைகளையும் மீறி உறுதியாக அவர்கள் போராடி வருகின்றனர்.

‘சமூக நீதி ஆட்சி’ என்று பெருமை பீற்றிக்கொள்ளும் தி.மு.க அரசு வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் போராடி வருகின்ற தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோரை போலீசைக் கொண்டு ஒடுக்கியும், அச்சுறுத்தியும் வருகிறது.

மக்களிடமுள்ள பா.ஜ.க எதிர்ப்பையும், கவர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” போன்ற கவர்ச்சிவாத நிகழ்ச்சிகள் மூலமாகவும் 2026 தேர்தலில் வெற்றி பெற்றுவிடாலம் என்று தி.மு.க நினைக்கிறது. ஆனால் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது தேர்தலில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதே எதார்த்தம்.

எனவே தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடுகின்ற செவிலியர்களுக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் துணை நிற்க வேண்டும். செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ”2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ் மாநில, மாவட்ட அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் . இதன் மூலம் தி.மு.க அரசைப் பணிய வைக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க