கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!

புதிய வரையறைகளால் வட இந்தியாவின் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் தீவிரமடையும், குளிர்ச்சியான பகுதிகள் வறண்டுபோகும்.

0

ந்தியாவின் மிகப்பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையானதாகும். இந்த மலைத்தொடர் டெல்லியில் தொடங்கி ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் வரை 692 கி. மீட்டர் வரை பரந்து விரிந்துள்ளது. இந்த மலைத்தொடர் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும், வன உயிரினங்களின் புகலிடமாகவும் திகழ்வதுடன், நிலத்தடி நீரைச் சேகரித்து வைக்கின்ற நீர் ஆதாரமாகவும் உள்ளது. இது லூனி, சபர்மதி, பனாஸ் ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ளது. இந்த ஆறுகள்தான் ஹரியானா, ராஜஸ்தான் மக்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன.

இம்மலைத்தொடர், கங்கை சமவெளி, கிழக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகள் பாலைவனமாக்கலிலிருந்து தடுக்கும் சுவராக உள்ளது; டெல்லி மக்களைக் காற்று மாசுபாட்டிலிருந்து காப்பாற்றும் உயிர்காக்கும் அமைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

இயற்கையாக அமைந்துள்ள மலையில் அதிகளவில் புதைந்துள்ள கிரானைட் , டங்ஸ்டன், பளிங்குக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களைக் கார்ப்பரேட் கும்பல்கள் வேட்டையாடுவதற்கு ஏற்ப ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய வரையறை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி உள்ளூர் நிலப்பரப்பிலிருந்து 100 மீட்டருக்கு மேல் உள்ள மலைகள் மட்டுமே ‘ஆரவல்லி மலைகளாக’க் கருதப்படும் எனவும், 500 மீட்டர் தூரத்தில் இரண்டு மலைகள் அருகருகே இருந்தால் மட்டுமே அதனை மலைகளின் தொடர்ச்சியாகக் கருத முடியும் என்றும் புதிய வரையறைகள் தெரிவிக்கின்றன.

இந்த வரையறைப்படி பார்த்தால் ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவீத மலைத்தொடர்கள் 100 மீட்டருக்கும் குறைவாகவே உள்ளதால், அவை ஆரவல்லி மலைத்தொடர்களாகக் கருதப்படமாட்டாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் 90 சதவீத மலைத்தொடர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கனிம வேட்டைக்காக மாற்றப்பட்டுவிடும்.

முக்கியமாக பாசிச கும்பல் அதானி, அம்பானி, ஜிண்டால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களின் கனிமவளக் கொள்ளைக்காக, வனப்பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்துவது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியது, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் நக்சலைட் பீதியூட்டி பழங்குடி மக்களையும், மாவோயிஸ்ட் தலைவர்களையும் படுகொலை செய்து வருவதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் புதிய வரையறைகளைப் பார்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்றமானது கடந்த நவம்பர் மாதம் இந்த வரையறையை ஏற்றுக்கொண்டிருந்தது. இந்த வரையறையானது ஆரவல்லி மலைத்தொடரின் சுற்றுச்சூழல், நிலவியல், காலநிலைப் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உயரத்தை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் உச்ச நீதிமன்றமானது சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் யாரிடமும் கருத்துக் கேட்காமல், அந்த வரையறையை ஏற்றுக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கனிமவளக் கொள்ளைக்கான கதவைத் திறந்துவிட்டது. அதாவது சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கனிமவளக் கொள்ளைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதுடன், அதற்குத் துணையாகவும் நின்றது உச்சநீதிமன்றம்.

இந்த புதிய வரையறைகளால் வட இந்தியாவின் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் தீவிரமடையும், குளிர்ச்சியான பகுதிகள் வறண்டுபோகும். டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைந்து ஏற்கெனவே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு வரும் மக்களை இது மேலும் அதிக பாதிப்பில் தள்ளும். இதனால் உயிர்கள் வசிக்கும் சூழலே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.

எனவே இந்த புதிய வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குருகிராம், உதய்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் மலையைக் காப்பாற்றுவதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “#Save Aravalli Hills” என்ற கேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

கனிமவள கொள்ளைக்காக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம் தான், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள ஆரவல்லி மலைத்தொடரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றும் பாசிச கும்பலின் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது அதீத காற்று மாசுபாட்டினால் டெல்லி மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி மக்களைக் காக்கும் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலையை கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடுவதற்கு அனுமதி அளித்துத் தீர்ப்பு வழங்கியது. பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்கு நீதித்துறை துணை போவது தற்போது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், ஆரவல்லி மலையைக் காக்கக் கோரி மக்களின் தொடர் போராட்டங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தற்காலிகமாக அடிபணிந்திருக்கிறது. டிசம்பர் 29 அன்று ஆரவல்லி தொடர்பான புதிய வரையறையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. முந்தைய வரையறையை மறுபரிசீலனை செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப் பரிந்துரைத்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இது மக்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். மக்கள் போராட்டங்களின் மூலமே பாசிச கும்பலை அடிபணிய வைக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.

எனவே ஆரவல்லி மலையைக் காப்பாற்றுவதற்காகப் போராடுகின்ற மக்களின் போராட்டத்தை அம்பானி – அதானி; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு சூழலியல் ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் துணைநிற்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க