பா.ஜ.க. கூட்டணி ஆட்சி செய்யும் பீகாரில் சுபால் மாவட்டத்தின் பர்மானந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது முர்ஷித் ஆலம். இவர் மதுபானி நகரின் நந்திசக்டா கிராமத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார்.
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதியன்று ஆலம் வேலை முடிந்து தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டு, சில பொருட்களை வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த சங்கி ஒருவன் ஆலம் இஸ்லாமியர் என்பதை அறிந்துகொண்டு “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் சீதா ராம்” என்று முழக்கமிடுமாறு மிரட்டியுள்ளான். “நான் “ஜெய் பாரத்” என்றுதான் சொல்லுவேன். “பாரத் மாதா கி ஜெய்” என்று சொல்லமாட்டேன்” என்று ஆலம் தெரிவித்துள்ளார். அந்த சங்கி அதனைக் காணொளியாகப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளான். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்து முழக்கங்களை எழுப்பும்படி ஆலமை மிரட்டியுள்ளான். அதனால் அவர் நாராசமான முழக்கங்களை எழுப்பியுள்ளார்.
மறுநாள் மதியம் ஆலம் கடைக்குச் சென்றபோது அங்கே மூன்று பேர் கொண்ட இந்து மதவெறி கும்பல் காத்துக்கொண்டிருந்துள்ளது. ஆலமை பார்த்தவுடன் அவரின் சட்டையைப் பிடித்து “நீ ஒரு ‘வங்காளதேசியன்’” என்று கூறி தாக்கியுள்ளது. அவரைப் பிடித்து அடித்துக்கொண்டே கிராமத்தின் வழியே 2-3 கி.மீ. தொலைவிற்கு ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளது. கழுத்து மற்றும் வாயிலிருந்து இரத்தம் வழிந்து வலியால் துடித்த போதும் குரூர மதவெறி கும்பல் அவரை அடிப்பதை நிறுத்தவில்லை.
மேலும், அக்கும்பலுடன் இணைந்து பலரும் ஆலமைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனை யாரும் தடுக்க முன்வரவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாகும். காளி கோவில் ஒன்றிற்கு இழுத்துச் சென்று அங்கு அவரை பலிகொடுத்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளது. மீண்டும் மக்கள் கூட்டம் இருந்த பகுதிக்கு ஆலமை இழுத்துச்சென்று கொலைவெறியுடன் தாக்கியுள்ளது. அவர் மயக்கமடைந்த நிலையில், சாலையின் ஓரமாக அவரை வீசிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது.
பின்னர் கிராம மக்களை ஆலமை மீட்டு பூர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கழுத்து மற்றும் தலையில் கட்டுகளுடன் உடலில் வீக்கங்களுடனும் படுக்கையில் படுத்திருந்த ஆலம் வாக்குமூலம் அளித்துள்ள காணொளியும், அவர் தாக்கப்பட்ட காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இதன் பிறகே ராஜ்நகர் போலீசு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கைக் கண்காணித்துவரும் சமூக சேவகர் ஜியாவுல் ஹக், ஆலமின் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்குப் போராடி வருவதாகவும், பிழைப்பாரா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். “அவரது முகத்தில் தாடியைப் பார்த்த பிறகு அவர் தாக்கப்பட்டார். இந்த மிருகத்தனமானத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒருவரின் முகம் அல்லது உடைகள் காரணமாக யாரும் குறிவைக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் அதை போலீசு துறையிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஒருவரை வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று அறிவிக்க இவர்கள் யார்?” என்று ஜியாவுல் ஹக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2025 நவம்பரில் பீகாரில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. டிசம்பர் 5, 2025 அன்று நவாடா மாவட்டத்தில் துணி வியாபாரியான முகமது அதர் ஹூசைன் எனும் இஸ்லாமியர் காவி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனளிக்காமல் டிசம்பர் 12 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது முகமது ஆலம் மதவெறி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் மக்களிடையே இந்து மதவெறியையும் இஸ்லாமிய வெறுப்பையும் தூண்டி இந்துக்களைத் தனது அடித்தளமாக மாற்றி வருகிறது. இருப்பினும், பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய வெறுப்புக் காவி கும்பலுக்குப் போதிய அளவில் கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக, வங்கதேச ஊடுருவல் என்ற பிரச்சாரத்தைக் கையிலெடுத்து அதனை இஸ்லாமிய வெறுப்பாக வளர்த்தெடுத்து வருகிறது. இஸ்லாமிய மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விடுவது, இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்குவது என்ற நிகழ்ச்சிநிரலைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், பீகாரையும் ‘இந்துராஷ்டிர சோதனைச்சாலை’ என்ற படையணியில் இணைத்துக்கொள்ள பாசிச கும்பல் துடிக்கிறது. பீகாரில் உள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இதனை களத்தில் நின்று முறியடிக்க வேண்டியது இன்றைய அவசர அவசியமாக உள்ளது.
செய்தி ஆதாரம்: The Hindustan Gazette, Maktoob Media
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











