ம.பி: குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம்:
மருத்துவமனை நிர்வாகம் – பா.ஜ.க. அரசே குற்றவாளி!
பாசிச பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் தலசீமியா (Thalassemia) நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகள் இரத்த மாற்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தலசீமீயா என்பது இரத்தத்தில் ஹீமோகுளோபின் (Haemoglobin) உற்பத்தியைப் பாதிக்கும் மரபணு இரத்த நோயாகும். இது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது. இந்த நோயால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்து அனீமியா (Anemia) நோய் ஏற்படும். எனவே, 15-20 நாட்களுக்கு ஒருமுறை இரத்தத்தைச் சுத்திகரிக்க வேண்டும். இதனை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும். இரத்தத்தை உரிய நேரத்தில் சுத்திகரிக்கவில்லை என்றால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பின் மீது அக்கறையில்லாத மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு ஏற்றப்படும் இரத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமல் எச்.ஐ.வி. நோய்த் தொற்றுள்ள இரத்தத்தை குழந்தைகளுக்கு ஏற்றியுள்ளது. ஜனவரி – மே மாதங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஆறு குழந்தைகளுக்கு கொடிய எச்.ஐ.வி. நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இக்கொடூரத்தைத் திட்டமிட்டு மூடிமறைத்துள்ளது. ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 16, 2025 அன்று இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எச்.ஐ.வி. நோய்த் தொற்று பாதிப்பால் அக்குழந்தைகளின் உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. குழந்தைகளுக்கு இருந்த தலசீமியா நோயால் வேதனையில் வாடிவந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இது பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஆனால், எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காக, இதுகுறித்து விசாரிப்பதற்கு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக்கல்வித் துறையின் மூலம் ஆறு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது பா.ஜ.க. அரசு. அக்குழு வழங்கிய முதற்கட்ட விசாரணை அறிக்கையில், இரத்த தானம் செய்பவர்களின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கத் தவறியது; நிறுவன விவரங்கள் மற்றும் இரத்தப் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளின் தொகுதி எண்களைப் பராமரிக்காதது; குழந்தைகளுக்கு இரத்த மாற்றம் செய்வதற்கு முன் எச்.ஐ.வி. மற்றும் பிற முக்கிய இரத்தப் பரிசோதனைகளை முறையாக நடத்தத் தவறியது போன்ற முறைமீறல்களே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரத்த மையத்தில் நடைபெற்று வந்த சட்டவிரோத ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ள அதேவேளையில், அம்மருத்துவமனையின் சீரழிவையும் வெட்டவெளிச்சமாக்குகிறது.
படிக்க: ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!
இவ்வறிக்கையின் அடிப்படையில் டிசம்பர் 18-ஆம் தேதியன்று இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் தேவேந்திர படேல் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ராம் பாய் திரிபாதி மற்றும் நந்தலால் பாண்டே ஆகிய மூன்று பேரை பா.ஜ.க. அரசு இடைநீக்கம் செய்துள்ளது. மாவட்ட மருத்துவமனையின் முன்னாள் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், தற்போது வரை இரத்தம் வழங்கியவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. வேறு ஏதேனும் மருத்துவமனையிலும் இதுபோன்று எச்.ஐ.வி. தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான மருத்துவக் கட்டமைப்பும் மத்தியப்பிரதேசத்தில் இல்லை. கடந்தாண்டில் ம.பி. அரசு மருத்துவமனையில் டை-எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் கலக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது; இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் எலிகள் கடித்துக் கொல்லப்பட்டது; தற்போது குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இரத்தம் ஏற்றப்பட்டிருப்பது ஆகியவை மத்தியப்பிரதேச பொது மருத்துவத்துறை சிதைத்து நாறிக் கொண்டிருப்பதை நிரூபிக்கிறது.
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றிய கொடூர சம்பவத்தில், முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகமும் – மருத்துவத்துறையைத் திட்டமிட்டுச் சீரழித்துவரும் பாசிச பா.ஜ.க. அரசுமே குற்றவாளி. எனவே, இக்கொடூரத்தை நிகழ்த்திய மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது கிரிமினல் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தொடர்ந்து குழந்தைகளை பலி கொடுத்து வருகின்ற பா.ஜ.க. கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.
மத்தியப் பிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவது; சுகாதாரப் பணிகளைத் தனியாரிடம் தாரைவார்ப்பது போன்றவற்றின் மூலமாக அனைத்து மாநில அரசுகளும் மருத்துவக் கட்டமைப்பை தனியார் – கார்ப்பரேட் மயமாக்கி வருகின்றன. பொது மருத்துவத்துறையைச் சிதைத்து மக்களை தனியார் – கார்ப்பரேட் மருத்துவத்தை நோக்கி விரட்டியடித்து, பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவம் என்ற நிலையை உருவாக்கி வருகின்றன. இதில் பாசிச பா.ஜ.க. கும்பல் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
எனவே, சிதைக்கப்பட்டுவரும் பொது மருத்துவத்துறையைப் பாதுகாக்க மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாக்கலுக்கு எதிராக “வேண்டாம் கார்ப்பரேட்மயம். வேண்டும் பொது மருத்துவம்!” என்று முழங்கி நாடு முழுவதும் மாபெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











