ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!

மருத்துவமனையின் உயிராதாரமான பணியான பூச்சுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார மேலாண்மைக்கு அரசும் மருத்துவமனையும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் அயல்பணி மூலமாக அஜில் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

0

பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் எலிகள் கடித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (Neonatal Intensive Care Unit) பிறவி நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அக்குழந்தைகளை எலிகள் கடித்துள்ளன. இதனால் ஒரு பெண் குழந்தை தலை மற்றும் தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டு செப்டம்பர் 2-ஆம் தேதியும், மற்றொரு குழந்தை நான்கு விரல்களில் எலி கடித்து செப்டம்பர் 3-ஆம் தேதியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், குழந்தைகள் எலிகள் கடித்ததனால் உயிரிழக்கவில்லை என்றும் முதல் குழந்தை நிமோனியா தொற்றாலும் இரண்டாவது குழந்தை செப்டீசீமியாவாலும் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் எலிகள் சுற்றித்திரிகின்ற காணொளி வெளியாகி மருத்துவமனை நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission For Protection Of Child Rights) செப்டம்பர் 4 அன்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், மாநில மனித உரிமைகள் ஆணையமும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புகள் எல்லாம் மக்களின் எதிர்ப்பையடுத்தே வெளிவந்துள்ளன.

அதேபோல், மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்களின் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்துள்ளது. குழந்தை அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த இரண்டு செவிலியர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது. பூச்சிக் கட்டுப்பாட்டுக்கான புதிய பொறுப்பாளராக டாக்டர் ஜிதேந்திர வர்மாவை நியமித்து, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற உணர்திறன் பிரிவுகளில் பூச்சிகளின் கட்டுப்பாடு குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இரண்டு பச்சிளம் குழந்தைகளை அநியாயமாகக் கொன்றுவிட்டு தற்போது மக்களின் எதிர்ப்பை மழுங்கடிப்பதற்காக, குழாய்களில் உள்ள துளைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


படிக்க: தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாபெரும் தேசத் துரோகம்!


இந்நிலையில், மருத்துவமனையில் பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்தமிடப்பட்டுள்ள “தி அஜில்” என்கிற தனியார் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் எச்சரிக்கை கடிதம் கொடுத்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மருத்துவமனையின் உயிராதாரமான பணியான பூச்சுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார மேலாண்மைக்கு அரசும் மருத்துவமனையும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் அயல்பணி மூலமாக அஜில் எனும் தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிறுவனத்திற்குச் சம்பளமாக மாதம் ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தை உரிமைகள், தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு தரநிலைகளில் கடுமையான விதி மீறல்கள் நடந்துள்ளதாக இச்சம்பவம் குறித்து “ஜன் ஸ்வஸ்த்ய அபியான் இந்தியா” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமுல்யா நிதி தெரிவித்துள்ளார். இதன் மூலம், அஜில் நிறுவனம் தனது லாப நோக்கிற்காக மக்களின் உயிரைப் பணயம் வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வருகிறது. இதுவே குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.

இதுகுறித்து, எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, குழந்தைகள் உயிரிழந்ததை கொடூரமானது, மனிதாபிமானமற்றது, உணர்ச்சியற்றது என்றும் இது ஒரு கொலை என்றும் குறிப்பிட்டுள்ளார். “அரசாங்கம் தனது மிக அடிப்படையான பொறுப்பை நிறைவேற்றத் தவறியதால், தாயின் கைகளிலிருந்து ஒரு குழந்தை பறிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடமாக இல்லை. மாறாக, மரணக் கூடாரங்களாக மாறிவிட்டன” என்று பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

உண்மையில், சுகாதார மேலாண்மையுடன் சேர்த்து மக்களின் உயிரையும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் தாரைவார்த்ததன் விளைவாகவே மருத்துவமனைகள் எலிகள் வசிக்கின்ற இடமாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து பேசுவதற்கெல்லாம் மருத்துவமனை நிர்வாகமும் ஆளும் பா.ஜ.க. அரசும் தயாராக இல்லை. மாறாக, குற்றத்தை மூடிமறைப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றன.

தற்போது தனியார் நிறுவனத்தை ஒப்பந்தத்திலிருந்து நீக்கியுள்ளது. ஆனால், இதே வேலையைச் செய்வதற்கு மற்றொரு தனியார் நிறுவனத்திடம் விரைவில் ஒப்படைத்துவிடும்.


படிக்க: கிள்ளுக்கீரைகளா துணைமருத்துவ மாணவர்கள்?


மத்தியப்பிரதேசம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு மருத்துவக் கட்டமைப்பும் பொது மருத்துவ சேவையும் திட்டமிட்டே ஒழித்துக்கட்டப்பட்டு, கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. இதில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முன்னணி வகிக்கின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் இருப்பது, பராமரிக்காதது; மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களை காண்டிராக்ட் முறையில் நியமிப்பது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது; மருத்துவமனையின் பல்வேறு துறைகளை கூறுப்போட்டு கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பது ஆகியவை இந்நோக்கத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் மூலம், பணக்காரர்கள் மட்டுமே மருத்துவம் பார்க்கின்ற வகையில் மருத்துவக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டு, கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு வருகிறது. 2017-ஆம் ஆண்டில் மோடி அரசால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதும் இந்நோக்கத்திலிருந்துதான்.

இந்த கார்ப்பரேட்மயமே ஏழை மக்களின் உயிர்களை பலிகொடுத்து வருகிறது. தற்போது இரண்டு பால் வாசம் மறக்காத பச்சிளம் குழந்தைகளைப் படுகொலை செய்துள்ளது. மத்தியப்பிரதேச மாநில பாசிச பா.ஜ.க. அரசுதான் இக்கொலைக்கான முதன்மை குற்றவாளியாகும்.

எனவே, அரசு மருத்துவமனைகளின் சுகாதாரப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்ற காண்ட்ராக்ட்மயத்திற்கு எதிராகவும், மருத்துவக் கட்டமைப்பு முழுவதையும் கார்ப்பரேட்மயமாக்குகின்ற பாசிச கும்பலின் நாசகர நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மருத்துவர்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த நாடு தழுவிய மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க