விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா: உயர்கல்வியின் மறுகாலனியாக்க சவக்குழி!

பல்கலைக்கழகத்திற்கான ஒரே வருமானம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே என்பதால், கடனை அடைக்கப் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தும் நிலைக்கு பல்கலைக்கழகங்கள் தள்ளப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டிய கட்டாயமும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படும்.

“வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி ஆணைய மசோதாவுக்கு” (Viksit Bharat Shiksha Adhishthan Bill) சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “வளர்ந்த இந்தியா” (விக்சித் பாரத்) என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தின் போர்வையில், இந்திய உயர்கல்வித் துறையை முற்றிலுமாகச் சிதைத்து, அதனை ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி-அதானி கும்பல் மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றத் துடிக்கிறது மோடி அரசு.

பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) ஒழித்துவிட்டு “இந்திய உயர்கல்வி ஆணையம்” எனும் எதேச்சதிகார அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், 2018-ஆம் ஆண்டிலேயே இம்மசோதாவை “உயர்கல்வி ஆணைய மசோதா” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது மோடி அரசு. அதற்கெதிராக, நாடு முழுவதும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்த தீவிரப் போராட்டங்களின் விளைவாக, ஒன்றிய அரசு பின்வாங்கியது. இன்று, அந்தப் பழைய நஞ்சை “விக்சித் பாரத்” என்ற புதிய குப்பியில் அடைத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் துடிக்கிறது.

இம்மசோதாவானது நடைமுறையிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (NCTE) ஆகிய உயர்கல்விக்கான தன்னாட்சி அமைப்புகளை எதேச்சதிகாரமாக கலைக்கிறது; உயர்கல்வித்துறையை தேசிய உயர்கல்வி ஆணையம் எனும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறது.

மேலும், “விக்சித் பாரத் சிக்‌ஷா வினியமன் பரிஷத்” எனும் ஒழுங்குமுறை குழு, “விக்சித் பாரத் சிக்‌ஷா குணவத்தா பரிஷத் விக்சித்” எனும் அங்கீகாரக் குழு மற்றும் “பாரத் சிக்ஷா மானக் பரிஷத்” எனும் தரநிலை குழு ஆகிய மூன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட குழுக்களை உருவாக்குகிறது. இக்குழுக்களிலும் உயர்கல்வி ஆணையத்திலும் அதிகார வர்க்கத்தினர், காவி-கார்ப்பரேட் கைக்கூலிகளை நிரப்புவதன் மூலம் ஒட்டுமொத்த உயர்கல்வித்துறையையும் பாசிச கும்பலின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுசெல்கிறது. இது உயர்கல்வியில் பார்ப்பனியத் திணிப்பையும், கார்ப்பரேட் கொள்ளையையும் சட்டப்பூர்வமாக்கும் முயற்சியாகும்.

சட்டத்திற்கு முன்பே தொடங்கிய சதி

மோடி அரசானது இந்த கல்வி ஆணைய மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன்பாகவே, கடந்த 2025 ஜனவரியில் “யூ.ஜி.சி. வரைவு அறிவிப்பு 2025”-ஐ வெளியிட்டு, தமது நோக்கங்களை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது. யூ.ஜி.சி-யைக் கொண்டே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், மாநில அரசுகளின் எதிர்ப்பால், வரைவு அறிக்கையை இறுதியாக்கி வெளியிடவில்லை. இந்தச் சூழலில்தான், புதிய சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் ஒட்டுமொத்த உயர்கல்வியையும் கபளீகரம் செய்யும் சதியில் இறங்கியுள்ளது.

மானியம் எனும் உரிமை, ‘பிச்சை’யாக மாற்றப்படுதல்

கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிப்பதும், அதற்குத் தேவையான நிதியை வழங்குவதும் யூ.ஜி.சி-யின் பணியாக உள்ளது. ஆனால், புதிய மசோதா யூ.ஜி.சி-யை கலைப்பதன் மூலம் தரக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை உயர்கல்வி ஆணையத்திடம் கொண்டு செல்கிறது; நிதி அதிகாரத்தை நேரடியாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கைகளுக்கோ அல்லது அரசால் நியமிக்கப்படும் ஒரு சிறப்பு அமைப்பிற்கோ கொண்டு செல்கிறது.

இதன் நோக்கம் மிக மிக ஆபத்தானது. உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது அத்தியாவசிய செயல்பாட்டுக்கான நிதியைப் பெறுவதற்குக் கூட டெல்லியில் உள்ள ‘எஜமானர்களின்’ காலில் விழ வேண்டும். தேசிய கல்வி கொள்கையின் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தை ஏற்காத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பள்ளிக்கல்வி நிதியை முடக்கியதைப் போல, மோடி அரசின் கல்வி கொள்கை, கார்ப்பரேட்மயத் திட்டங்களை ஏற்காத கல்வி நிறுவனங்களுக்கான நிதியும் முடக்கப்படும். “எங்கள் கொள்கையை ஏற்றால் நிதி, இல்லையெனில் மூடுவிழா” என்பதே மோடி கும்பல் இதிலிருந்து விடுக்கும் மறைமுகச் செய்தி.

இவ்வாறு, பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்து, உயர்கல்வி நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் கயிறாக நிதி அதிகாரம் மாற்றப்படுகிறது.

கல்வியைக் கடனாக்கும் வணிகச் சதி

மோடி அரசு 2018 – உயர்கல்வி ஆணைய மசோதாவை பின்வாங்கினாலும், அதில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய அம்சமான “உயர்கல்வி நிதி முகமை” (HEFA – Higher Education Financing Agency) எனும் அமைப்பை நடைமுறையில் உருவாக்கி இயக்கி வருகிறது.

அரசுப் பல்கலைக்கழகங்களுக்குக் கட்டடங்கள் கட்டவோ, ஆய்வகங்கள் அமைக்கவோ இதுவரை கொடுக்கப்பட்டு வந்த மானியத்தைக் குறைத்து, இம்முகமையின் மூலம் கடன்களை வழங்கி வருகிறது. ஒரு பல்கலைக்கழகம் தனது தேவைக்காக இம்முகமையிடம் கடன் வாங்கினால், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இதன் மூலம், கல்வி என்பது சேவை, லாப நோக்கற்றது என்ற நிலையை மாற்றி, மானிய முறையை ஒழித்து, ‘கடன்’ முறையைப் புகுத்துகிறது.

இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், யூ.ஜி.சி. ஒழித்துக்கட்டப்பட்டு, அவ்விடத்தை உயர்கல்வி நிதி முகமை எனும் இந்தக் கடன் முகமை முற்றுமுழுதாக கைப்பற்றிக்கொள்ளும்.

பல்கலைக்கழகத்திற்கான ஒரே வருமானம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே என்பதால், கடனை அடைக்கப் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தும் நிலைக்கு பல்கலைக்கழகங்கள் தள்ளப்படும். கட்டணத்தை உயர்த்தினால்தான் மேற்கொண்டு கடன் தரமுடியுமென்று இந்தக் கடன் முகமை கட்டாயப்படுத்தும். இதன் விளைவாக, மாணவர்கள் இதுவரை ரூ.5,000 செலுத்தி படித்துவந்த ஒரு பட்டப்படிப்புக்கு ரூ.50,000 கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டிய கட்டாயமும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படும். அவ்வாறு நிதி வசூலிக்க முடியாத – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபமளிக்காத – துறைகள் கைவிடப்படும். இதனால், பெரும்பாலும் ஏழை – எளிய மாணவர்கள் பயின்றுவரும் கலை & அறிவியல், பிராந்திய மொழிகள் உள்ளிட்ட துறைகள் ஒழித்துக்கட்டப்படும்.

அதாவது, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவை ஏழை நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் போர்வையில், பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வழி செய்து கொடுப்பதற்கு நிகரானதே இந்தக் கடன் முகமையின் நோக்கமும் செயல்பாடும் ஆகும்.

இதனால் கல்வி அடிப்படை ‘உரிமை’ என்ற இடத்திலிருந்து, சந்தையில் விற்கப்படும் ‘சரக்கு’  என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. இது ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களை உயர்கல்வியிலிருந்தே விரட்டியடிக்கும் ஒரு பொருளாதாரத் தாக்குதல். காசில்லாதவனுக்குக் கல்வியில்லை என்னும் புதிய ‘மனுநீதி’.

சமூக நீதியின் மீதான நேரடி யுத்தம்

இந்தியாவில் உயர்கல்வி என்பது சமூக நீதிக்கான ஒரு கருவி. பொதுப் பல்கலைக்கழகங்களே ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கான புகலிடமாக இருந்து வருகின்றன. ஆனால், இம்மசோதா அந்த அடித்தளத்தையே தகர்க்கிறது.

தனியார் – கார்ப்பரேட் மயத்தை ஊக்குவிப்பதும், பொது நிறுவனங்களைத் தன்னாட்சி என்ற பெயரில் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றுவதுமே இத்திட்டத்தின் நோக்கம்.

“நாங்கள் அரசிடம் பணம் வாங்கவில்லை, நாங்களே நிதியைத் திரட்டுகிறோம்” என்று பல்கலைக்கழகங்கள் சொல்லத் தொடங்கும்போது, “எங்களால் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாது” என்ற வாதத்தை முன்வைப்பார்கள். ஏற்கெனவே, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்-களில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாத நிலையில், இம்மசோதா அதை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தும்.

கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மற்றும் பெண்கள், கல்விக் கட்டண உயர்வாலும், இட ஒதுக்கீடு ஒழிப்பாலும் உயர்கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்தவகையில், இது நவீன குலக்கல்வித் திட்டமே அன்றி வேறில்லை. இதுநாள் வரையிலும் இந்திய அரசியல் அமைப்பு – சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளப்பட்ட அனைத்து ‘ஜனநாயக’ அம்சங்களின் மீதான இறுதித் தாக்குதலாக இது அமையும்.

“ஒற்றை அதிகார மையம்”: காவிமயமாக்கலின் நுழைவாயில்

இம்மசோதா யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.டி.இ. ஆகியவற்றை கலைத்துவிட்டு, உயர்கல்வியை, உயர்கல்வி ஆணையம் என்ற ஒற்றை அமைப்பிற்கு கீழ் கொண்டு வருகிறது. இது நிர்வாக ரீதியிலான எளிமைப்படுத்தலை போலத் தோன்றலாம்.

ஆனால், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சரவையின் அதிகாரங்களை பறித்துவிட்டு, ஆணையங்களை உருவாக்கி அத்துறையில் பாசிச கும்பலாட்சியை நிலைநாட்டி வருவதன் தொடர்ச்சியாகவே உயர்கல்வி ஆணையத்தையும் அமைக்கத் துடிக்கிறது.

கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்குதல், கட்டண விதிமுறைகள் என பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஒவ்வொரு அம்சத்திலும் இந்த ஆணையம் தலையிடுகிறது. இதன் மூலம் உயர்கல்வித் துறையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசுகளிடம் இருந்த மிச்சமீதி அதிகாரங்களையும் பறித்து அவற்றை மோடி அரசின் கரங்களில் குவிக்கிறது

மேலும், உயர்கல்வி ஆணையத்தின் 12 உறுப்பினர்களில், மாநில அரசுகளின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராசிரியர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே. இது தவிர்த்து சிறந்த நிபுணர்கள் என்ற பெயரில் ஐந்து பேர் நியமிக்கப்படுவர். மீதமுள்ளவர்கள் மத்திய அரசின் செயலாளர்கள்  மற்றும் அதிகார வர்க்கத்தினர் ஆவர். இதில் மாநில அரசுப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக மட்டுமே இருப்பார்கள். அதிகார வர்க்கத்தினர் மட்டுமே முழுநேர உறுப்பினர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். அதாவது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் கார்ப்பரேட் கும்பல்களின் அடியாள் படையைக் கொண்டே இந்த ஆணையம் முழுமையாக நிரப்பப்படும் என்பதே இதன் சாராம்சம்.

சூடு சொரணைக்குத் தண்டனை: இதுதான் பாசிசம்

இம்மசோதாவின் பிரிவு 33, “விக்சித் பாரத் சிக்‌ஷா வினியமன் பரிஷத்” எனும் ஒழுங்குமுறை குழு ‘விதிமுறைகளை’ மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முன்மொழிந்துள்ளது. அதன்படி, விதிமுறைகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை தண்டத்தொகை விதித்தல்; பொறுப்பிலுள்ளவர்களை பணிநீக்கம் செய்தல்; கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை இரத்து செய்தல்; மானியங்களை நிறுத்தி வைத்தல்; பட்டங்களை வழங்கும் அதிகாரத்தை பறித்தல் என உயர்கல்வி நிறுவனங்களின் மீது இரத்தவெறி கொண்ட மிருகம் போல பாய்ந்து குதற காத்திருக்கிறது.

இதன் மூலம், தனது காவி – கார்ப்பரேட் நலன்கள், கொள்கைகள், விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்களைத் தண்டனைக் குற்றவாளிகளைப் போலத்தான் கையாள்வோம் என மோடி அரசு வெளிப்படையாகவே மிரட்டுகிறது.

அரசின் காவி சித்தாந்தத்தை ஏற்காத பல்கலைக்கழகங்களை மூடவும், துணைவேந்தர்களைச் சிறையில் அடைக்கவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாசிச கும்பலின் ஆட்சியில், அறிவார்ந்து சிந்திப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றம்தான் அல்லவா!

பிரிவு 45 & 47 – சர்வாதிகாரத்தின் சாசனம்

மசோதாவின் 45 மற்றும் 47-வது பிரிவுகள், “ஆணையம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டது”, கருத்து வேறுபாடு ஏற்பட்டால் “அரசின் முடிவே இறுதியானது” என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சித்தாந்தத் திட்டங்கள் எந்தவித எதிர்ப்புமின்றிப் பாடத்திட்டங்களில் திணிக்கப்படும். இந்திய அறிவு மரபு என்ற பெயரில் அறிவியல் பாடங்களில் புராணங்கள் புகுத்தப்படும். வரலாற்றுப் பாடங்களில் திரிபுகள் சட்டப்பூர்வமாக்கப்படும். இதை எதிர்க்கும் பேராசிரியர்கள் அல்லது துணைவேந்தர்கள் ஆணையத்தின் அதிகாரத்தால் நசுக்கப்படுவார்கள். சொந்த புத்தியும், சூடு சொரணையும் உள்ள உயர்கல்வி நிறுவன நிர்வாகங்கள், நிதி மற்றும் தண்டனை என்னும் ஆயுதங்கள் கொண்டு மிரட்டிப் பணிய வைக்கப்படும்.

முடிவுக்கு வரும் ‘கூட்டாட்சி’ முழக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் கல்வி இருந்தாலும், இந்த மசோதா மாநில அரசுகளை, அதிகாரமற்ற வெறும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக மாற்றுகிறது. ஏற்கெனவே தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, நடைமுறைப்படுத்தக் கட்டாயப்படுத்தி வருவதன்  மூலம், பொதுப்பட்டியல் – மாநில அரசின் உரிமை ஆகியவற்றை ஒழித்துக்கட்டி வருகிறது மோடி அரசு.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், தங்களுக்கெனத் தனித்துவமான கல்விக் கொள்கையையும், உயர்கல்வி கட்டமைப்பையும் வைத்துள்ளதாக சொல்லிக் கொண்டாலும், “ஒரே நாடு, ஒரே கல்வி” திட்டம், மாநிலங்களின் தனித்துவத்தை அழித்து, டெல்லியின் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும். மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம், பாடத்திட்டம், நிதி ஒதுக்கீடு என அனைத்திலும் மத்திய அரசின் தலையீடு தீவிரமாகும். மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக் கொள்கைகளை உருவாக்கினாலும், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு செல்ல முடியாதவாறு முட்டுக்கட்டைகளை மோடி அரசு போடும், பெயரளவிலான கூட்டாட்சிக்கும் சவக்குழி பறிக்கும்.

பெயர்சூட்டலில் பார்ப்பனத் திமிர்: பண்பாட்டுப் படையெடுப்பு

சட்டத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அதன் பெயர்களிலேயே நஞ்சை விதைத்துள்ளது மோடி அரசு. “விக்சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான்”, “வினியமன் பரிஷத்”, “குணவத்தா பரிஷத்” என மசோதாவின் ஒவ்வொரு அங்கத்திற்கும் இந்தி – சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியிருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம். இந்த மசோதாவில் மட்டுமல்லாது இதர ஒன்றியத் திட்டங்கள், ரயில்களின் பெயர்கள் அனைத்திலும் இந்த அயோக்கியத்தனத்தைக் கையாண்டு வருகிறது பாசிச மோடி அரசு.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதைத் துளியும் மதிக்காமல், தனது பார்ப்பனிய – பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் ‘இந்துராஷ்டிர’ வெறியே இதில் வெளிப்படுகிறது. இது வெறும் பெயர் மாற்றம் அல்ல; தமிழ் உள்ளிட்ட தொன்மையான மொழிகளின் அடையாளத்தை அழித்து, இந்தி – சமஸ்கிருதத்தை அரியணையில் ஏற்றும் பண்பாட்டுப் படையெடுப்பு. பிற தேசிய இனங்களின் மொழியுணர்வைக் காலில் போட்டு மிதிக்கும் இந்த ஆணவப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

உயர்கல்வியிலும் அம்பானி – அதானி மயம்!

புதிய மசோதா முன்மொழியும் விக்சித் பாரத் சிக்ஷா மானக் பரிஷத் எனும் தரநிலை குழு, “இந்திய அறிவு மரபுகளை (Bharatiya knowledge systems) உலகத் தரங்களுடன் இணைத்தல்” என்று குறிப்பிடுகிறது.

ஆனால், ஏற்கெனவே அதானி குழுமம் நடத்திவரும் கல்வி நிறுவனங்கள், ‘இந்திய அறிவு மரபு’ சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு பல கோடி ரூபாய்களை ஒதுக்கி வருகிறது. மேலும், “பாரத அறிவு வரைபடத்தை உருவாக்குவதற்கும், இந்த இந்தியவியல் பணிக்கு பங்களிக்கும் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ரூ.100 கோடி ஆரம்ப நிதியுதவியை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு நாகரிகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகும்” என்று கடந்த நவம்பர் மாதத்தில் அதானி அறிவித்துள்ளார்.

இன்னொரு பக்கத்தில், அம்பானி குழுமம் ஜியோ கல்வி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறைக்கு போதிய நிதி ஒதுக்காத மோடி அரசு, இன்னும் ஆரம்பிக்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு 2018-ஆம் ஆண்டிலேயே “மேன்மைமிகு நிறுவன” அங்கீகாரமும் ரூ.1,000 கோடி நிதி உதவியும் அளித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணியில் இம்மசோதாவைப் பார்க்கும் போதுதான், மோடி அரசு ஏன் இவ்வளவு தீவிரமான தாக்குதல்களைத் தொடுக்கிறது என்பதையும், உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலின் கோரப்பிடியையும் நம்மால் உணர முடியும்.

என்ன செய்யப் போகிறோம்?

இந்த ‘விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா’, 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் நிர்வாக வடிவமே ஆகும். தேசியக் கல்விக் கொள்கை  சித்தாந்த ரீதியாகக் கல்வியைச் சீரழித்தது. உயர்கல்வி ஆணைய மசோதா 2025 அதைச் சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அங்கீகரித்து, சுருக்குக் கயிறாக மாற்றுகிறது. ஒட்டுமொத்தமாக பாசிச கும்பலின் ஆட்சியில், உயர்கல்வி மீதான மறுகாலனியாக்கத்தின் இறுதித் தாக்குதலே இது.

நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இக்குழுவுக்கு அனுப்பப்பட்ட எந்த மசோதாவிலும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை ஏற்று மோடி அரசு மாற்றம் செய்ததில்லை. எனவே, இம்மசோதாவை அப்படியே சட்டமாக்கும் முயற்சியில்தான் ஈடுபடும் என்பது திண்ணம்.

எனவே, இது கல்வியாளர்களின் – மாணவர் அமைப்புகளின் பிரச்சினை மட்டுமல்ல; தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெற்றோரின் பிரச்சினை. சமூக நீதியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் பிரச்சினை. மாநில உரிமைகளை மதிக்கும் ஒவ்வொருவரின் பிரச்சினை.

2018-இல் மோடி அரசு உயர்கல்வி ஆணைய மசோதாவை சட்டமாக்க முயன்றபோது எழுந்த போராட்டங்களை காட்டிலும் பன்மடங்கு வீரியமான மாணவர் – ஆசிரியர் – மக்கள் போராட்டத்தால் மட்டுமே இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்த முடியும். இல்லையேல், வருங்காலத் தலைமுறைக்குக் கல்வி என்பது எட்டாக்கனியாகவும், பல்கலைக்கழகங்கள் என்பவை ஆளும் வர்க்கத்தின் அடிமைக் கூடங்களாகவும் மாறிவிடும்.

ஆகவே, “கல்வி விற்பனைக்கு அல்ல; அது நமது அடிப்படை உரிமை!”, “ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி-அதானி பாசிச கும்பலின் பிடியிலிருந்து கல்வித்துறையை விடுவிப்போம்” என்ற முழக்கத்தை முன்னெடுத்து, இந்த மறுகாலனியாக்கத் தாக்குதலை முறியடிக்க அணிதிரள்வோம்.


தமிழ்ச்சுடர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க