27.01.2026

பத்திரிகைச் செய்தி

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள
பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த நவம்பர்-22 அன்று நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் அமலாக்கம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட உடனேயே நாடு முழுவதும் தொழிற்சங்க இயக்கங்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டன. அதுமட்டுமின்றி விவசாய சங்கங்களின் பேரமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) அமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன், மத்திய தொழிற்சங்கங்களின் அனைத்து போராட்டங்களுக்கும் தனது ஆதரவை தெரிவித்தது.

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் எமது அமைப்பும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் எமது சங்கத்தின் இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் பங்கேற்கும் விதமாக வேலைநிறுத்த அறிவிப்பை அந்தந்த நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளன.

நாடு தழுவிய பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தில் விவசாய சங்கங்களின் பேரமைப்பான SKM அமைப்பும் இணைந்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்றாகும். இந்திய நாட்டின் ஆகப்பெரும்பான்மை உழைக்கும் மக்களை அணிதிரட்டியுள்ள தொழிற்சங்க அமைப்புகளும், விவசாயிகளது அமைப்பும் ஒன்றிணைந்து நடத்துகின்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் தேவை குறித்து மத்திய தொழிற்சங்க அமைப்புகள் வெளியிட்டுள்ள விபரங்களும், கோரிக்கைகளும் ஜனநாயக உணர்வு கொண்ட எவராலும் நிராகரிக்க முடியாதவை. தொழிலாளி வர்க்கத்தின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாளர்களது வாழ்வுரிமை குறித்த அக்கறையிலிருந்து மட்டும் அறிவிக்கப்படவில்லை. இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைப்பு (சங்கம்) சேரும் உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, வேலைநிறுத்த உரிமை, சமத்துவம், மாநிலங்களின் சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இது மட்டுமின்றி ஊரக விவசாயக்கூலி மக்களுக்கு சிறிதளவு வாழ்வாதார நம்பிக்கையூட்டிய நூறு நாள் வேலைத்திட்டம் (MGNREGA) பெயர் மாற்றத்துடன் சொற்ப வருவாயை பறிக்கும் உள்ளடக்க கூறுகளோடு புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் மாநில அரசின் உரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரத்தை எதிர்க்கும் அழைப்பாகவும் இந்த வேலைநிறுத்த அழைப்பு இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் முதலாளிகளின் ஒரு பிரிவான சிறு-குறு-நடுத்தர முதலாளிகளது சிறுதொழில் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்த வகையில் பிப்ரவரி 12 வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது நமது கடமையாக இருக்கிறது. இதனை ஜனநாயக சக்திகள், முற்போக்கு அமைப்புகள், ஒன்றிய அரசின் பாசிசத்தை எதிர்க்கக்கூடிய கட்சிகள் ஆகிய அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் மீதும் மாநில உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்தி இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக கருத்தொற்றுமையை உருவாக்க கோருகிறோம்.

கூடுதலாக, தொழிலாளர் உரிமை பறிப்பு, மாநில அரசின் உரிமை பறிப்பு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் தமிழ்நாடு அரசு நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துமாறு அனைத்து மத்திய சங்கங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் கூட்டமைப்புகள், சிறுதொழில் முனைவோர் அமைப்புகள், முற்போக்கு-ஜனநாயக அமைப்புகள் ஆகியவை தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!


தோழமையுடன்
ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க