ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் (மதிய உணவுத் திட்டம்) மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் கீழ் ஆறாவது நாளாகக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல நாட்களாக தங்களின் 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர். பேச்சுவார்த்தை நடத்தாமல் காலத்தைக் கடத்தி வந்தது தி.மு.க அரசு. இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் ஜனவரி 20-ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராடும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களின் கோரிக்கைகள்:
- பகுதி நேரப் பணியாளர்களை (சத்துணவு அமைப்பாளர்கள் ₹7,700, சமையலர்கள் ₹4,100, உதவியாளர்கள் ₹3,000 அடிப்படை ஊதியத்தில் உள்ளவர்கள்) முழுநேர நிரந்தர ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- தற்போது மாதம் ₹2,000-ஆக உள்ள ஓய்வூதியத்தை ₹6,750 ஆக உயர்த்த வேண்டும்.
- காலிப்பணியிடங்களை (சுமார் 60,000) உடனடியாக நிரப்ப வேண்டும்.
- சத்துணவு அமைப்பாளர்களுக்கு ₹5 லட்சம், சமையல் பணியாளர்களுக்கு ₹3 லட்சம் பணிக்கொடை (gratuity) வழங்க வேண்டும்.
- மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக உயர்த்த வேண்டும்.
இப்போராட்டத்தின் விளைவாக ஜனவரி 24 -ஆம் தேதியன்று ஓய்வூதியம் ₹2,000-த்திலிருந்து ₹3,400-ஆக உயர்த்தி வழங்கப்படும். பணிக்கொடை ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தி.மு.க அரசு அறிவித்தது.
ஆனால், தங்களின் கோரிக்கை மற்றும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை விட குறைந்த ஓய்வூதியமும், பணிக்கொடையும் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் 13 கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் (Integrated Child Development Services – ICDS) அலுவலகங்கள் முன்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க: அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமும் தி.மு.க. அரசின் துரோகமும்!
தங்களின் வாழ்வாதாரம் கோரிக்கைகளுக்கான போராடுகின்ற சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடிப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கற்று போய் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து ஒடுக்கி வருகிறது தி.மு.க அரசு.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முழக்கங்கள் எழுப்பியும், கும்மி, அடித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாலையில் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியும், சேல்போன்களில் டார்ச் லைட்டுகளை ஒளிர வைத்தும் முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்பும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் இரவு போராட்டக் களத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே தங்கி தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இப்போராட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான சத்துணவு மையங்கள் மூடப்பட்டுள்ளன, இதனால் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காமல் உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் கூறுகையில் “விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், ரூ.7,700 அடிப்படை ஊதியத்தை வைத்துக் கொண்டு ஒருவரால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.3,400 ஓய்வூதியம் எந்த வகையில் போதுமானது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காக மகளிர் மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் போன்ற கவர்ச்சிவாத நிகழ்ச்சிகளை நடத்தி வரும் தி.மு.க அரசு, மறுபுறம் உரிமை கேட்டுப் போராடும் பெண்களை ஒடுக்கி வருகிறது.
எனவே, சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடிப் பணியாளர்களின் போராட்டம் மாநிலம் தழுவிய ஒருங்கிணைந்த போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதன் மூலமே தி.மு.க அரசைப் பணியவைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











