சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு தழுவிய போராட்டம்

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.

மிழ்நாடு அரசு சத்துணவு மையங்களில் 3,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கி, 8,000 பேரை பணியமர்த்துவது குறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர். எனவே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜனவரி 23 அன்று) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரிய சத்துணவு சங்க ஊழியர்கள், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்க வலியுறுத்தினர்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதைப் போல அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் 6750 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும்; காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், அரசின் அனைத்து காலி பணியிடங்களிலும் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை தந்து காலமுறையில் ஊதியத்தை உயர்த்தவும், பதவி உயர்வு வழங்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மைய ஊழியர்கள், அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் மைவாடி பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது.

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் – தூத்துக்குடி

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரான ஜெயலட்சுமி, ”சத்துணவு ஊழியர்களுக்கா பணியில் அறுபதாயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அரசு வெறும் எட்டாயிரம் காலிப்பணியிடங்களை மட்டுமே நிரப்ப முன்வந்துள்ளது, கவலைக்குரியது. எனவே, அரசு காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பி, வேலையில்லாமல் தவிப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்” என்று கூறினார்.

திருப்பூர்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் – திருப்பூர்

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்கள் சமூகநீதி கொள்கைகளுக்கு எதிராகவும் பெண்கள் நலனுக்கு எதிராகவும் நிரப்பப்படுவதற்கு இந்த அரசாணை வழிவகுப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடலூர்:

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் – கடலூர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுமதி தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குணவதி தலைமை தாங்கினார்.

விருதுநகர்:

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் – விருதுநகர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை தாங்கினார்.

விழுப்புரம்:

சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் – விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க