காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1,800 நிரந்தர பணியாளர்கள் உள்பட சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊதிய உயர்வு, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (Samsung India Workers Union) தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் 40 நாட்களுக்கும் மேலாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த தி.மு.க அரசும், சாம்சங் நிறுவனமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தன. ஆனால் அதன் பின்னரும் பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே 2025 ஜனவரி மாதம் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தொழிற்சங்கத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியது.
பின்னர் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் சாம்சங் நிறுவனம் போராட்டத்தை முன்னின்று நடத்திய சங்கத்தின் 27 நிர்வாகிகளைப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியது. பல தொழிலாளர்களுக்கு அதிக வேலைக் கொடுப்பது, நேரத்திற்கு அதிகமான வேலை வாங்குவது என பல வழிகளில் பழிதீர்த்தது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தற்போது வரை வேலையின்றி தவித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஜனவரி 27–ஆம் தேதி அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் 27 பேரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக சாம்சங் தொழிலாளர்கள் ஒரு நாள் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தடுக்க தென்கொரிய துணைத் தூதரகம் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சி.ஐ.ட.யு தலைவர் அ. சவுந்தரராசன் தலைமையில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று தூதரகத்துக்குச் சென்றுள்ளனர்.
ஆனால், தூதரக வாயிலில் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், தூதரக அதிகாரிகள் சந்திப்புக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும், மின்னஞ்சல் மூலம் மனுவை அனுப்புமாறும் தெரிவித்துள்ளனர். அதனை ஏற்றுக்கொண்டு திரும்பிச் செல்லத் தயாரான நிலையில், திடீரென சி.ஐ.டி.யு தலைவர்களை போலீஸ் கைது செய்துள்ளது. “எதற்காகக் கைது செய்கிறீர்கள்?” என்று நிர்வாகிகள் கேட்டதற்கு , “மனு கொடுக்க வந்ததால் கைது செய்கிறோம்” என்று திமிராகப் பதிலளித்துள்ளது போலீசு.
படிக்க: சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அ. சவுந்தரராசன், “சாம்சங் நிறுவனம் இந்திய சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துகொள்வதால், அதனை மதிக்குமாறு துணைத் தூதரகத்தில் மனு அளிக்க வந்தோம். ஆனால், மனு கொடுக்க வந்ததே தவறு எனக் கூறிக் கைது செய்கின்றனர். இது மோசமான அத்துமீறல். போராட்டம் செய்யவில்லை, கோஷம் எழுப்பவில்லை. இருந்தும் கைது செய்கின்றனர். மனு கொடுப்பது குற்றமா? இது நடைபாதையில் நிற்பவர்களைக் கைது செய்வதற்குச் சமம். அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் இ. முத்துக்குமார், “சாம்சங் தொழிற்சாலையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 27 நிர்வாகிகளுக்கு உடனே வேலை வழங்க வேண்டும். தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பிப்ரவரி 15 அன்று கோட்டை நோக்கி நடைப்பயணம் நடைபெறும்” என்று அறிவித்தார்.
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு. தற்போது வரை நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொழிலாளர்களுக்குத் துரோகமிழைத்து வருகிறது.
எனவே சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகின்ற தி.மு.க அரசுக்கு எதிராகவும் சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே சாம்சங் நிறுவனம், தி.மு.க அரசைப் பணிய வைக்க முடியும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











