மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான ஆனந்தபூரில் நசிராபாத் என்ற பகுதி உள்ளது. இங்கு புஷ்பாஞ்சலி டெக்கரேட்டர்ஸ் (Pushpanjali Decorators) என்ற அலங்காரப் பொருட்கள் சேமிப்பு கிடங்கும் வாவ் மோமோ (Wow MOMO) என்கிற உணவு நிறுவனத்திற்குச் சொந்தமான 12,000 சதுர அடி கொண்ட சேமிப்பு கிடங்கும் அருகருகே செயல்பட்டு வந்துள்ளது. வாவ் மோமோ நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலை முடிந்து அங்கேயே தூங்குவது கட்டாயமாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று அதிகாலை 3 மணிக்கு அலங்காரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மோமோ நிறுவனத்தின் கிடங்கிற்கும் தீ வேகமாகப் பரவியுள்ளது. தீ பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 38 மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
ஆனால், அதற்குள் வாவ் மோமோ உணவு கிடங்கிற்குள் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளே தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பித்து வெளியேறுவதற்கான வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்ததாலும், பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் கருகி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தை நேரில் கண்ட சுஷாந்த் ஜனா என்பவர் “தி குயிண்ட்” ஊடகத்திடம் கூறுகையில், “இரவு 9-9:30 மணிக்கு உணவு முடித்து தூங்கினோம். அதிகாலை 3 மணியில் “தீ” என்று எழுப்பினார்கள். அறை முழுக்க புகை நிரம்பி இருட்டாக இருந்தது. என்னால் மூச்சு விட முடியவில்லை. நானும் மூன்று பேரும் தப்பினோம். தீ பின்புற கதவு அருகே பற்றியது. அங்கு தீ பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை.” என்று கிடங்கில் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, வாவ் மோமோ நிறுவனம் பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களைத் தேக்கி வைக்கின்ற, தொழிலாளர்கள் தங்குவதற்குத் தகுதியற்ற உணவு கிடங்கிற்குள் தொழிலாளர்களைத் தங்கவைத்து வந்துள்ளது. அதிலும், வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் பொருட்களைத் திருடி விடுவார்கள் என்று கூறி கிடங்கின் கதவை வெளியில் பூட்டி வந்துள்ளது. தொழிலாளர்களை அடிமைகளைப் போல நடத்துகின்ற இந்த முதலாளித்துவ கொடூரத்தின் விளைவாகவே தொழிலாளர்களின் உயிர் பறிபோயுள்ளது.
இக்கோர விபத்தில் 25 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் உண்மையான பலி எண்ணிக்கை 50-க்கு மேல் இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.க் குறிப்பாக, ஜனவரி 28 நிலவரப்படி, இடிபாடுகளுக்கு உள்ளே 28 பேர் காணாமல் போயுள்ளனர். தேடும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தொழிலாளர்களின் உடல் தீயில் கருகியதால் அவர்களின் உடல் பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறியும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. விபத்து நடந்த 10 நாட்களில் 27 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உடல் பாகங்களுக்காகக் கண்ணீருடன்
காத்துக் கிடக்கும் குடும்பங்கள்:
பல குடும்பங்கள் இக்கோர விபத்தில் தங்களின் அப்பா, அண்ணன் என்று அன்புக்குரியவர்களை இழந்துள்ளது. இறுதிச் சடங்கிற்காக சிறு உடல் பாகங்களையாவது பெற்றுச் செல்ல வேண்டுமென விபத்து நடந்த இடத்தின் அருகே கண்ணீரும் கம்பளியுமாய் உறவினர்கள் நாள் கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பூ அலங்கார கலைஞராக வேலை பார்த்து குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவராக இருந்துவந்த தனது கணவனைப் பறிகொடுத்த பர்னாலி டோலோய், “அவர் சோர்வாக இருப்பதாகவும் தூங்கப் போவதாகவும் சொன்னார். அடுத்த நாள் வீட்டுக்கு வருவதாக இருந்தார்” என்று கணவனுடன் இறுதியாகப் பேசியதை மீண்டும் மீண்டும் நினைத்து அழுது கொண்டிருக்கிறார்.
தனது கணவரின் உடலை அடையாளம் கண்டுகொள்ளும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் மவுஷுமி கூறுகையில், “முழு கிடங்கும் தீப்பிடித்துவிட்டது. தப்பிக்க வழியே இல்லை என்று அவர் எனக்கு போன் செய்தார். “இன்னும் ஐந்து நிமிடங்கள்தான், பிறகு நாங்கள் இறந்துவிடுவோம். என் மகளையும் உன்னையும் கவனித்துக்கொள்” என்று சொன்னார். இப்போது கண்களை மூடும் போதெல்லாம் அவரது இந்த வார்த்தைகளை மட்டுமே கேட்கிறேன்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் மருமகன் பாபனை இழந்த ஹரே கிருஷ்ண மைதி, “யாரும் எதுவும் தெளிவாகச் சொல்லவில்லை. “போலீசு நிலையத்திற்குச் சென்று காணாமல் போனவர்கள் பற்றி அறிக்கை கொடுங்கள்” என்று மட்டுமே சொல்கிறார்கள். என் சகோதரரும் மருமகனும் இறந்துவிட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு ஒரு சிறு பொருள் கூட கிடைக்காது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஊற்றிய தண்ணீரில் அவர்களின் சாம்பல்கூட கரைந்து போயிருக்கும்.” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதிகார வர்க்கத்தின் நாடகம்
இக்கொடூர சம்பவம் பேசுபொருளான பிறகு, அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்தியதற்காக ஜனவரி 28- ஆம் தேதியன்று புஷ்பாஞ்சலி டெக்கரேட்டர்ஸ் உரிமையாளர் கங்காதர தாஸை போலீசு கைது செய்துள்ளது. பின்னர் வாவ் மோமோ நிறுவனத்தின் மேலாளர் ராஜா சக்ரவர்த்தி மற்றும் துணை மேலாளர் மனோரஞ்சன் ஷீட் இரண்டு பேரைக் கைது செய்துள்ளது.
மேலும், இந்நிறுவனங்கள் உள்ளூர் தீயணைப்புத் துறையிடம் (Fire NOC) அனுமதி பெற்றுள்ளதா? தீயணைப்பு உபகரணங்கள், அவசரக்கால வழிகள் (Emergency exit) போன்ற பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவை போலீஸ் அமைத்துள்ளது. ஒரு நிறுவனம் தொடங்கப்படும் போது சோதித்தறிய வேண்டியவற்றை 27 தொழிலாளர்களைப் பலி வாங்கிய பிறகு சோதிப்பது என்பது மக்களின் எதிர்ப்பை தணிப்பதற்கான நாடகமன்றி வேறில்லை.
அதேபோல், உயிரோடு இருக்கும் வரை தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்து வாயை மூடிக்கொண்டிருந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தற்போது யோக்கியனைப் போல் தாமாக முன்வந்து ‘விசாரணை’ செய்கிறது.
நிறுவனங்களும் மம்தா அரசுமே குற்றவாளி!
சம்பவ இடத்தை பார்வையிட்டு ஊடகங்களிடம் பேசிய மேற்குவங்க தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவைகள் துறை அமைச்சர் சுஜித் போஸ், “இப்பகுதியில் பல ஆலைகளும் கிடங்குகளும் உள்ளன. அவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே உரிய உரிமங்கள் உள்ளன. மற்றவற்றுக்கு உரிமம் இல்லை” என்று பொறுப்பற்ற முறையில் குற்ற உணர்ச்சியின்றி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும், அப்பகுதி பத்து வருடங்களுக்கு முன்பாக நீர்நிலையாக இருந்ததாகவும் பின்னர் அப்பகுதியில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகக் கட்டடங்கள் கட்டப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோஷ் என்பவர் தி குயிண்ட்-யிடம் கூறுகையில், “இப்பகுதி ஒரு ஈரநிலம் (Wetland). இங்கு மின்சாரம் கூட வழங்கப்படவில்லை. ஆனால், அருகிலேயே குறைந்தது 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மின்சார இணைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? இதில் நிர்வாகத்தின் (அரசு-அதிகாரிகளின்) பங்கு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தொழிலாளர்கள் விடுதிக்காக வடிவமைக்கப்படாத கிடங்குகளில் (வேர் ஹவுஸ்) தூங்க அனுமதிக்கப்பட்டது ஏன்? இரண்டு இடங்களும் தீ பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியிருந்தனவா? இல்லையென்றால், யார் இந்த ஆய்வுகளைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினார்கள்? அங்கீகாரம் இல்லாத சமையல் (அங்கேயே சமைப்பது) எப்படி இவ்வளவு நாள் கண்காணிக்கப்படாமல் போனது? எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், எப்போது முழுமையான விசாரணை நடத்தி, உண்மையான மூல காரணங்களைக் கண்டறிந்து, இதுபோன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள்? இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் முதலமைச்சர் இதுவரை சம்பவ இடத்திற்கு வராதது ஏன்?” என்று உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவற்றிலிருந்தே, மம்தா அரசுடன் இணைந்து அந்நிறுவனங்கள் தனது லாபவெறியால் நடத்தியுள்ள பச்சைப் படுகொலை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இதனை மூடிமறைக்க அரசும் தனியார் நிறுவனங்களும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சத்தை அறிவித்துள்ளன. தொழிலாளர்களின் குடும்பத்தினர் கோரும் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்து வழங்க வேண்டும்.
ஆனால், கொலையை அரங்கேற்றிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து அவர்களைச் சிறையிலடைக்க வேண்டும். பேரிழப்பை ஏற்படுத்திய இரண்டு நிறுவனங்களையும் மூடி சீல் வைக்க வேண்டும்.
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். இல்லையேல், பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் நிறுவனங்களை அகற்றி தொழிலாளர்களுக்கு மாற்று வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும். இதன் மூலமே இதுபோன்ற கோர விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
செய்தி ஆதாரம்: Indian Express, The quint
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











